நீங்களே தீர்த்துக் கொள்ளுங்கள்.. இந்திய - சீன சண்டையில் அமெரிக்காவின் "சைலன்ட் மோட்".. பகீர் பின்னணி
இந்தியா சீனா இடையிலான பிரச்சனையில் திடீர் என்று அமெரிக்கா கொஞ்சம் கொஞ்சமாக விலகி செல்ல ஆரம்பித்து இருக்கிறது.
நியூயார்க்: இந்தியா சீனா இடையிலான பிரச்சனையில் திடீர் என்று அமெரிக்கா கொஞ்சம் கொஞ்சமாக விலகி செல்ல ஆரம்பித்து இருக்கிறது. இதில் பெரிய அளவில் அமெரிக்கா தலையிட விரும்பவில்லை என்று தெரிகிறது.
Recommended Video
இந்தியா சீனா இடையிலான பிரச்சனை மே மாதம் தொடக்கத்தில் ஆரம்பித்தது. லேசான உரசலாகத்தான் பிரச்சனை தொடங்கியது. ஆனால் இந்த பிரச்சனை உலகம் முழுக்க கவனம் ஈர்த்தது.
முக்கியமாக அமெரிக்காவில் இந்தியா சீனா பிரச்சனை எதிரொலித்தது. ஆசியாவில் இருக்கும் சீனாவை இன்னொரு பெரிய நாடான இந்தியாவை வைத்து வீழ்த்த அமெரிக்கா தீவிரமாக முயன்றது.

என்ன பேசினார்
அதிலும் அதிபர் டிரம்ப் இந்தியா - சீனா பிரச்னையை தீர்ப்பதாக கூட கூறினார். அதாவது எல்லையில் தற்போது நடந்து வரும் பிரச்னையை சரி செய்ய தயாராக இருக்கிறோம். இந்தியாவும் சீனாவும் ஒப்புக்கொண்டால் அவர்களிடையே பேசி, சமாதானம் செய்து, மத்தியசம் பேச தயாராக இருக்கிறேன் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார். ஆனால் இதற்கு இரண்டு நாடுகளும் ஒப்புக்கொள்ளவில்லை.

மோடி போன்கால்
அது மட்டுமின்றி அதிபர் டிரம்ப் இந்திய பிரதமர் மோடிக்கே நேரடியாக இதற்காக போன் செய்தார். பிரதமர் மோடிக்கு போன் செய்த அமெரிக்க அதிபர் டிரம்ப் சீனா குறித்து முக்கியமான விஷயங்களை பேசினார். 20 நிமிட பேச்சில் சீனா குறித்தும் லடாக் பிரச்சனை குறித்தும் பேசி இருக்கிறார்கள். முக்கியமாக சீனாவின் அத்துமீறல் குறித்து இரண்டு நாட்டு தலைவர்கள் பேசி இருக்கிறார்கள். சீனாவிற்கு இது அதிர்ச்சி அளித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது .

இதெல்லாம் எப்போது
இதெல்லாம் இந்தியா சீனா இடையே பெரிய அளவில் பிரச்சனை நடக்கும் முன்னே அமெரிக்கா செய்த காரியங்கள். அதாவது இரண்டு நாட்டு பிரச்சனை பெரிதாக வெடிக்கும் முன்பே அதற்குள் நுழைந்து பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா முயன்றது. எப்படியாவது இந்தியாவை வைத்து சீனாவிற்கு பெரிய அளவில் செக் வைக்கலாம் என்று அமெரிக்கா திட்டமிட்டது .

ஆனால் இப்போது
ஆனால் இப்போது லடாக்கில் பெரிய அளவில் சண்டை நடந்துள்ளது. இந்தியா - சீனா இடையே எல்லையில் பெரிய மோதல் ஏற்பட்டுள்ளது. இந்திய தரப்பில் 20 வீரர்கள் பலியாகி உள்ளனர். இரண்டு நாடுகளும் போருக்கு தயார் ஆவது போல தயார் ஆகிக் கொண்டே இருக்கிறது. ஆனால் இப்போது திடீர் என்று இந்த பிரச்சனையில் அமெரிக்க மௌனம் காக்க தொடங்கி உள்ளது .

ஏன் மௌனம்
அதாவது இரண்டு நாட்டு பிரச்னையை அமைதியாக இரண்டு நாடுகளும் தீர்க்க வேண்டும். இந்தியா - சீனா பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று வெள்ளை மாளிகை கூறியுள்ளது. சமரச பேச்சு நடத்தும் திட்டம் எதுவும் இல்லை என்றும் டிரம்ப் கூறி உள்ளார். ஒரு காலத்தில் சாதாரண பிரச்சனைக்கு கூட சமரசம் பேசுவதாக கூறிய டிரம்ப் இப்போது பின்வாங்கி உள்ளார். இதற்கு மூன்று முக்கியமான காரணங்கள் சொல்லப்படுகிறது.

காரணம் 1
அதன்படி அமெரிக்காவில் தற்போது அதிபர் தேர்தல் நடக்க உள்ளது. இப்படிப்பட்ட நேரத்தில் இந்தியா - சீனா போன்ற பெரிய நாடுகளின் பிரச்சனையில் தலையிட முடியாது. அதேபோல் அதிபர் டிரம்ப் மீண்டும் தேர்வாவதே சந்தேகம். இதனால் டிரம்ப் தேர்தல் மீது கவனம் செலுத்த வேண்டிய நிலையில் இருக்கிறார். இப்படிப்பட்ட நேரத்தில் இரண்டு அணு ஆயுத நாடுகளின் பிரச்சனையில் டிரம்ப் தலையை நீட்ட முடியாது.

காரணம் 2
அடுத்ததாக அமெரிக்காவில் தற்போது உள்நாட்டு பிரச்சனைகள் நிறைய இருக்கிறது. அங்கு டிரம்பிற்கு எதிராக நிறைய அழுத்தங்கள் இருக்கிறது. ஜார்ஜ் பிளாய்டு போராட்டங்கள் தொடங்கி ராணுவ ஜெனரலின் எதிர்ப்பு வரை அங்கு டிரம்ப் நிறைய எதிர்ப்புகளை உள்நாட்டிற்குள் எதிர்கொண்டு வருகிறார். இப்படிப்பட்ட நிலையில் டிரம்ப் உள்ளே வந்து தலையை கொடுத்து வாலை புண்ணாக்கிக் கொள்ள முடியாது.

காரணம் 3
கடைசியாக டிரம்பின் சமாதான கோரிக்கைகளை ஏற்கனவே இந்தியா, சீனா நிராகரித்துவிட்டது. இதனால் மீண்டும் டிரம்ப் சமாதானம் குறித்து பேச வாய்ப்பு இல்லை. அதோடு உயிர்பலி வரை பிரச்சனை சென்றுவிட்டது. இனி பேச்சுவார்த்தை பலன் அளிக்காது என்று டிரம்ப் நினைத்து இருக்கலாம். இப்போது பேச்சுவார்த்தைக்கு அழைத்தால் இரண்டு தரப்பும் கோபம் கொள்ளும் என்று கூட டிரம்ப் நினைத்து இருக்கலாம்.












Click it and Unblock the Notifications