ஹெலிகாப்டரில் பறந்த அண்ணாமலை.. தரையிறங்கியதும் சுத்துப்போட்ட அதிகாரிகள்! என்ன நடந்தது? பரபரப்பு
நீலகிரி: நீலகிரி மாவட்டம் உதகமண்டலம் சட்டசபை தொகுதியில் பாஜக வேட்பாளராக போஜராஜன் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக இன்று பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை ஹெலிகாப்டரில் ஊட்டி சென்றார். ஊட்டியில் அவரது ஹெலிகாப்டர் தரையிறங்கியதும் பறக்கும்படை அதிகாரிகள் சூழ்ந்து அங்குலம், அங்குலமாக சோதனை நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழக சட்டசபை தேர்தலில் பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை போட்டியிடவில்லை. மாறாக அவர் அதிமுக - பாஜக மற்றும் கூட்டணியில் உள்ள பிற கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரித்து வருகிறார்.

அந்த வகையில் இன்று அண்ணாமலை நீலகிரி மாவட்டம் உதகமண்டலம் சட்டசபை தொகுதியில் பாஜக வேட்பாளர் போஜராஜன், காங்கேயம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் என்எஸ்எஎன் நடராஜ், அரவக்குறிச்சி அதிமுக வேட்பாளர் செல்வகுமார், கரூர் வேட்பாளர் எம்ஆர் விஜயபாஸ்கர் ஆகியோரை ஆதரித்து பிரசாரம் செய்வதாக அறிவிக்கப்பட்டது.
ஹெலிகாப்டரில் பறந்த அண்ணாமலை
இதையடுத்து இன்று காலையில் அண்ணாமலை கோவையில் இருந்து தனி ஹெலிகாப்டரில் உதகமண்டலம் சென்றார். அங்கு பாஜக வேட்பாளர் போஜராஜனை ஆதரித்து அவர் பிரசாரம் செய்தார்.
முன்னதாக அண்ணாமலை உதகமண்டலத்தில் தரையிறங்கியதும் அவரது ஹெலிகாப்டரை சோதனை மேற்கொண்டனர். அப்போது ஹெலிகாப்டரின் இருக்கை உள்பட அனைத்து இடங்களிலும் பறக்கும் படையினர் சோதனை நடத்தினர்.
அங்குலம் அங்குலமாக சோதனை
ஹெலிகாப்டரில் இருந்த பேக்கை எடுத்து பைலட் திறந்து காண்பித்தார். அப்போது அதில் சில ஆவணங்கள் மட்டுமே இருந்தன. இந்த சோதனையில் பணம் உள்பட எதுவும் கிடைக்கவில்லை.
#WATCH | Tamil Nadu Elections 2026 | Election flying squads searched the helicopter in which BJP leader K. Annamalai is travelling from Coimbatore to Ooty for election campaigning. pic.twitter.com/ii8g1l1tvh
— ANI (@ANI) April 10, 2026
இதையடுத்து பறக்கும்படையினர் அங்கிருந்து பறப்பட்டு சென்றனர். தற்போது சட்டசபை தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன. இதனால் வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்களை வழங்குவதை தடுக்க பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சீமான் - விஜயையும் விடாத அதிகாரிகள்
அந்த வகையில் தான் அண்ணாமலை பயணித்த ஹெலிகாப்டரிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதேபோல் தமிழகத்தில் பிரசாரம் செய்து வரும் முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோரின் வாகனங்களிலும் இதற்கு முன்பு பறக்கும் படையினர் சோதனை நடத்தி உள்ளனர்.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சட்டசபை தொகுதியில் இன்று பரப்புரைக்கு சென்றார். அப்போது விஜயின் பிரசார வாகனத்தை தடுத்து நிறுத்தி பறக்கும்படையினர் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர். தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் வரை இதுபோன்ற சோதனைகள் நடத்தப்படுவது வழக்கமான ஒன்றாகும்.
நாளை பிரசாரம் எங்கே?
நாளை (ஏப்ரல் 11) காலையில் அண்ணாமலை கோவை தெற்கு தொகுதியில் அதிமுக வேட்பாளர் அம்மன் அர்ஜுனனை ஆதரித்து வாக்கு சேகரிக்கிறார். அதன்பிறகு ராஜபாளையத்தில் தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் வேட்பாளரும், ஜான்பாண்டியனின் மனைவியுமான ப்ரிசில்லா பாண்டியனை ஆதரித்து ஓட்டு சேகரிக்கிறார். பிறகு சாத்தூரில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனை ஆதரரித்தும், கடைசியாக வாசுதேவநல்லூரில் பாஜக வேட்பாளர் ஆனந்தன் அய்யாசாமியை ஆதரித்தும் பிரசாரம் மேற்கொள்கிறார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications