சம்மர் வந்தாச்சு.. ஊட்டியை அலங்கரிக்க போகுது மலர் கண்காட்சி.. இந்த ஆண்டு என்ன ஸ்பெஷல்.. முழு விவரம்
நீலகிரி: மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் கோலாகலமாக கோடை விழா நடத்தப்படுவது வழக்கம். அதன்படி நடப்பு ஆண்டுக்கான கோடை விழா நடைபெறும் தேதியை மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு அறிவித்துள்ளார்.
நீலகிரி மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் கோடை விழா திருவிழாபோல களைகட்டும். சம்மரை செம்ம குஷியாகவும், குளு குளுவென்று அனுபவிக்கவும் சமவெளி பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பயணிகள் ஊட்டி, குன்னூருக்கு பொதுவாகவே வருகை தருவது வழக்கம்.

மலைகளின் அரசியான நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் கோடை விழாவை கண்டுகளிப்பதற்காக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான பொதுமக்கள் நீலகிரிக்கு வருகை தருவார்கள். இந்த கோடை விழாவில் காய்கறி கண்காட்சி, வாசனை திரவிய கண்காட்சி, ரோஜா கண்காட்சி, மலர்க் கண்காட்சி, பழக் கண்காட்சி என ஊரே திருவிழாபோல காட்சியளிக்கும்.
கோடைக்காலம் துவங்கியுள்ளதால் இப்போதே நீலகிரி மாவட்டத்துக்கு அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் செல்லத் தொடங்கிவிட்டனர். கடந்த சில வாரங்களில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு முழு ஆண்டு தேர்வுகளும் முடிந்துவிடுவதால் கோடை விடுமுறையை குளுகுளுவென கழிப்பதற்காக மக்கள் நீலகிரிக்கு படையெடுக்கத் தொடங்கி விடுவார்கள்.
அவர்களுடைய விடுமுறையை கூடுதல் மகிழ்ச்சியோடு கழிக்கும் வகையிலும், சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையிலும் கோடை விழாக்கள் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், இந்த ஆண்டுக்கான கோடை விழா மற்றும் உதகை மலர்க் கண்காட்சி நடைபெறும் தேதிகளை நீலகிரி மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து உதகை மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு கூறியுள்ளதாவது: நீலகிரி மாவட்டம், ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் 127வது மலர் கண்காட்சி நடக்கிறது. கோடை விழாவின் துவக்கமாக மே மாதம் 3, 4 ஆகிய தேதிகளில் கோத்தகிரி நேரு பூங்காவில் 13 ஆவது காய்கறி கண்காட்சி நடைபெறுகிறது.
மே 9 மற்றும் 10, 11 ஆகிய தேதிகளில் கூடலூரில் 11 ஆவது வாசனை திரவிய பொருட்கள் கண்காட்சி நடைபெறுகிறது. மே 10,11,12 ஆகிய தேதிகளில் ஊட்டி ரோஜா பூங்காவில் 20வது ரோஜா கண்காட்சி நடைபெறுகிறது..
கோடை விழாவின் முக்கிய நிகழ்ச்சியான 127வது மலர் கண்காட்சி மே மாதம் 16ம் தேதி துவங்கி 21ம் தேதி வரை ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் நடக்கிறது. மே 23, 24, 25 தேதிகளில் குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 65வது பழக் கண்காட்சி நடக்கிறது.
முதல்முறையாக குன்னூர் அருகே காட்டேரி பூங்காவில் மே 30 முதல் ஜூன் 1 ஆம் தேதி வரையிலான மூன்று நாட்கள் மலை பயிர்கள் கண்காட்சி நடத்தப்படவுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications