டல்லடிக்குது நீலகிரி.. ஆமா, பூத்களில் வாக்காளர் பெயர் பட்டியலை ஏன் மலையாளத்தில் எழுதி ஒட்டணும்? ஓஹோ
ஊட்டி: நீலகிரியில் வாக்குப்பதிவு மந்தமாக ஆரம்பித்து, மெல்ல மெல்ல விறுவிறுப்படைந்து கொண்டிருக்கிறது.. ஊட்டியில் எப்படி இருக்கு தெரியுமா?
ஒருபக்கம் திமுகவின் ஆ.ராசா, மறுபக்கம் பாஜகவின் எல்.முருகன், இதற்கு நடுவில் அதிமுகவில், முன்னாள் சபாநாயகர் தனபால் மகன் லோகேஷ் தமிழ்ச்செல்வன் என களமிறங்கியிருப்பதால், நீலகிரி தொகுதி, ஸ்டார் தொகுதியாகிவிட்டது.

நீலகிரி: எப்போதுமே நீலகிரியில் வெளியூர் வேட்பாளர்கள்தான் அதிக முறை வென்றுள்ளதால், இந்த முறையும் அப்படியே வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டிருந்தனர்.. விறுவிறு பிரச்சாரங்கள் முடிந்து, தேர்தலுக்கும் நீலகிரி தயாரானது..
நீலகிரி தொகுதியில் மொத்தமுள்ள 6 சட்டப்பேரவை தொகுதிகளில் மேட்டுப்பாளையம், அவிநாசி, பவானிசாகர் ஆகியவை சமவெளிப்பகுதிகள் ஆகும்... உதகை, குன்னூர், கூடலூர் ஆகிய தொகுதிகள் நீலகிரி மாவட்டத்தில் உள்ளன..
வாக்குச்சாவடி: இதையடுத்து வாக்குச்சாவடி மையங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டன. குறிப்பாக, உதகை, குன்னூர், கூடலூர், ஆகிய சட்டப்பேரவை தொகுதிகளுக்கு உட்பட்ட வாக்குச்சாவடி மையங்களுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள், வாக்குப்பதிவுக்கு பயன்படுத்தப்படும் பொருட்கள், மாற்று திறனாளிகளுக்கான சக்கர நாற்காலிகள் அனைத்துமே முன்கூட்டியே பிரித்து அனுப்பப்பட்டது.
கோடை காலம்: தமிழகத்தின் மற்ற மாவட்டங்களில் காலை 7 மணி முதலே வாக்குப்பதிவு பரபரப்புகள் தொடங்கிவிட்ட நிலையில், நீலகிரியில் மட்டும் அந்த அளவுக்கு சுறுசுறுப்பாகவில்லை.. இத்தனைக்கும் கோடை காலம் துவங்கியிருப்பதால், நீலகிரியில் தற்போது மழை இல்லை.. குளிரும் இல்லை.. பனிக்காற்றும் இல்லை..
இருந்தாலும் வெயிலின் தாக்கம் இருக்கக்கூடாது என்பதற்காக, வாக்குச்சாவடிகளில் பந்தல் அமைக்கப்பட்டிருக்கின்றன.. நாற்காலிகள் அதிகமாகவே போடப்பட்டுள்ளன.. எல்லா வாக்குச்சாவடிகளிலும், தண்ணீர் வசதி, முதியோர் மற்றும் மாற்று திறனாளிகளுக்கு சக்கர நாற்காலி வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.
வாக்குப்பதிவு: எனினும் வாக்குப்பதிவு காலையில் அந்த அளவுக்கு சூடுபிடிக்கவில்லை.. காலை 9 மணி நிலவரப்படி வெறும் 8.7 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகியிருந்தன. காலை 11 மணி நிலவரப்படி 21.69 சதவீத வாக்குகள் பதிவாகியிருக்கின்றன..
ஊட்டியில் மட்டும் விறுவிறு வாக்குப்பதிவு ஆரம்பமானது.. ஊட்டி புனித சூசையப்பர் கல்வியியல் கல்லூரியில், கலெக்டர் மு.அருணா தன்னுடைய வாக்கை பதிவு செய்தார். அதேபோல ஊட்டி தொகுதிக்கு உட்பட்ட கிராமங்களில் காலையிலேயே வாக்களிக்க முயன்றனர்..
வாக்குச்சாவடி: அதேபோல, வாக்குச்சாவடிகளில் மலையாளத்திலும் பெயர் பட்டியல் அச்சிடப்பட்டிருந்தது.. காரணம், நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, கூடலூர், குன்னூர் 3 சட்டப்பேரவைத்தொகுதிகளிலும் 20 சதவீதம் கேரள மக்கள் வாழ்கிறார்கள்.. அதனால் மாவட்டத்திலுள்ள 1619 வாக்குச்சாவடிகளிலும் வேட்பாளர் பெயர் பட்டியல் தமிழ் மற்றும் மலையாளத்தில் அச்சடிக்கப்பட்டு, வாக்குச்சாவடிகளில் ஒட்டப்பட்டிருந்ததை காண முடிந்தது..
தமிழகத்திலேயே நீலகிரி போல, மலையாள மக்கள் அதிகமாக வசிப்பது கன்னியாகுமரி மாவட்டத்தில்தான்.. அதனால், அந்த மாவட்டத்திலும் வேட்பாளர் பெயர் பட்டியல் மலையாளத்தில் அச்சடிப்பது வழக்கமாகும்... அந்தவகையில், இந்த முறையும், நீலகிரி மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் பெயர் பட்டியல் லிஸ்ட் மலையாளத்தில் அச்சிட்டு ஒட்டப்பட்டிருந்தது.












Click it and Unblock the Notifications