நீலகிரி, நெல்லையில் கொட்டித்தீர்த்த அதிகனமழை.. அருவிகளில் குளிக்கத் தடை
தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளதால் நீலகிரி மாவட்டத்தில் ஆறுகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.
நீலகிரி: தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளதால் நீலகிரி மாவட்டத்தில் ஆறுகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. கடந்த 2 நாட்களாக களக்காடு மேற்கு தொடர்ச்சி மலையில் மழை பெய்து வருவதால் அருவிகளில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. தலையணையில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே மணிமுத்தாறு அருவியில் பொதுமக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
Recommended Video
நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. கடந்த 10 நாட்களாகவே அங்கு பலத்த மழை கொட்டி வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் நேற்று அறிவித்திருந்தது.

நீலகிரி மாவட்டத்தில் நேற்று அதிகபட்சமாக கூடலூர் பஜாரில் 23 செ.மீ. மழை பதிவாகி இருந்தது. இன்றும் அங்கு மழை நீடித்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி அதே கூடலூர் பஜாரில் 23 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. மேல்கூடலூரில் 22 செ.மீ பதிவாகியுள்ளது. 20 சென்டி மீட்டருக்கும் அதிகமாக மழை பெய்தால் அது அதிகனமழையாக கருதப்படும். நீலகிரி மாவட்டத்தில் இரண்டு இடங்களில் அதிகனமழை பதிவாகியுள்ளது.
இதேபோல அவலாஞ்சியில்19 செ.மீ, மேல்பவானியில்18 செ.மீ, தேவாலாவில் 16 செ.மீ. மழையும் பதிவாகி இருக்கிறது.
நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆங்காங்கே மண் சரிவும் ஏற்பட்டுள்ளது.
நீலகிரியில் ஊட்டி, மஞ்சூர் உள்ளிட்ட பகுதிகளில் மணிக்கு 11 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியது. தொடர் மழை காரணமாக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. நீலகிரி மாவட்டத்தில் மழை பாதிப்பு ஏற்பட்டால் 1077 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீலகிரி மாவட்டத்தில் கூடலூர், பந்தலூர், ஊட்டி, குந்தா ஆகிய 4 தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு இன்றும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் அம்ரித் உத்தரவிட்டார்.
இதனிடையே நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே மணிமுத்தாறு அருவியில் பொதுமக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் அருவியில் குளிக்க வனத்துறை தடை விதித்தது. மணிமுத்தாறு அருவியை பார்த்துவிட்டு திரும்பிச் செல்ல மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என வனத்துறை அறிவித்துள்ளது.
கடந்த 2 நாட்களாக களக்காடு மேற்கு தொடர்ச்சி மலையிலும், ஊர் பகுதிகளிலும் சாரல் மழை பெய்து வருகிறது. இந்த மழையினால் தலையணையில் தண்ணீர் வரத்து அதிகரித்தது. தடுப்பணையை மூழ்கடித்தவாறு தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. இதையடுத்து சுற்றுலா பயணிகள் கூட்டம், கூட்டமாக குவிந்து வருகின்றனர்.
உள்ளூர் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்தும் ஏராளமானோர் கார், வேன்களில் குவிந்து வருகின்றனர். தண்ணீர் வரத்து அதிகரித்த வண்ணம் உள்ளதால் தடுப்பணை அருகே சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். ஆற்றில் இறங்கி குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் ஆற்றில் குளித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications