பைத்தியக்கார திட்டம்.. நீலகிரியை காலி பண்ணும் "சில்லகல்லா".. உடனே நிறுத்துங்க.. கோட்டைக்கு கோரிக்கை

Subscribe to Oneindia Tamil

ஊட்டி: நீலகிரியின் முக்கியத்துவத்தையும், வருங்காலத்தையும் கருதி, இன்றைய தமிழக முதல்வர் "சில்லகல்லா நீரேற்றுப் புனல்மின் திட்டத்தை" கைவிட வேண்டும் என்று நீலகிரி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். அதென்ன சில்லகல்லா அணை? இதற்கு ஏன் இவ்வளவு எதிர்ப்பு? ,இந்த புதிய அணை கொண்டுவரப்படுவதால், நீலகிரிக்கு எத்தகைய ஆபத்து ஏற்படும்? இவைகளை பற்றி சுருக்கமாக இங்கே பார்க்கலாம்.

நீலகிரியே மூழ்கிவிடும் அபாயத்தில் உள்ளதாக, மலைமாவட்ட மக்கள் பீதியில் உள்ளனர்.. இதற்கு காரணம் சாட்சாத் சில்லகல்லா நீரேற்றுப் புனல்மின் அணைதான்.. குந்தா பகுதியில் அமைய உள்ள, நீர்மின் அணையின் பெயர்தான் சில்லகல்லா. இந்த அணை சுமார் 10 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் கட்டப்படுவதாக உள்ளது. இதனை கட்டி முடிக்க 10 முதல் 15 ஆண்டுகள் ஆகும் என்றும் கூறப்படுகிறது.

Nilgiris shillakalla hydroelectric project pykara power station

எதிர்ப்பு தெரிவிக்கும் நீலகிரி

பாரம்பரியமாக படுக மக்கள் வாழ்ந்துவரும் இடமான ஹட்டி எனப்படும் கிராமப்பகுதிகளில்தான், இந்த அணை அமைய போவதாக சொல்கிறார்கள். அதனால், படுக மக்களும், விவசாயிகளும் ஒருவித அச்சத்தில் உள்ளனர்.

இந்த திட்டத்தினால், சுமார் 800 ஏக்கர் விளைநிலம் நீரில் மூழ்கப்படும் அபாயம் உள்ளது.. இதனால் இயற்கை காடுகளும், புராதன சின்னங்கள், வழிபாட்டு ஸ்தலங்கள், கலாச்சார அடையாளங்கள் போன்றவை அழியக்கூடிய அபாயத்தில் உள்ளது.

இந்நிலையில், நீலகிரியை காப்போம் நிறுவனரும், நீலகிரி ஆவணக் காப்பக மையத்தின் இயக்குநர் தர்மலிங்கம் வேணுகோபால் அவர்களை நம்முடைய "ஒன்இந்தியா" தமிழுக்காக சந்தித்து பேசினோம். அவர் இந்த அணையின் திட்டம் குறித்து நம்மிடம் பகிர்ந்து கொண்ட கருத்துக்கள்தான் இவை.

"சில்லகல்லா நீரேற்று புனல் மின்திட்டம்

"சில்லகல்லா நீரேற்று புனல் மின்திட்டம் என்பது இதன் பெயர்.. பூமிக்கடியில் சுரங்கப்பாதை மூலம் 2 அணைகளை இணைத்து, சுழற்சி முறையில் நீர்மின் சக்தியை உருவாக்குவதுதான் இந்த திட்டத்தின் நோக்கம். ஆனால், இந்த திட்டம், இந்தியாவுக்கு ஒரு புதிய திட்டம். இந்திய அளவில் இதுபோல் 10க்கும் குறைவான திட்டங்களே தற்போது கட்டுமானத்தில் உள்ளது.

நீலகிரியில்கூட, கடந்த 10 ஆண்டுகளாக ஒரு திட்டம் நடந்து வருகிறது. ஆனால, அது தற்போது எந்த அளவில் உள்ளது? என்பது யாருக்கும் தெரியாது. பொதுவாக, இதுபோன்ற அணைகளுக்கான திட்டங்கள், சர்வதேச நிதியுதவியுடனும், தனியார் நிறுவனங்களுடன் சேர்ந்து செயல்படுத்தப்படும் திட்டமாகும்.. எனவே, இதற்கு பொதுத்துறை உத்தரவாதம் இல்லை.

நீலகிரிக்கு இது தேவையா

மேலும், இத்தகைய அணைகள் மூலம், வர்த்தகத்துக்கோ, விவசாயத்துக்கோ, தொழில் துறைக்கோ நேரடியாக பயன் இல்லை. இவைகள், கோடை காலத்தில், சென்னை போன்ற நகரங்களில், ஏற்படும், உச்சக்கட்ட மின்தேவையை பூர்த்தி செய்ய மட்டுமே இந்த திட்டம் பயன்படும். கோடை காலத்தை தவிர்த்து பிற மாதங்களில் இந்த திட்டத்தினால் உபயோகம் இல்லை.

எனவே, நீலகிரியில் இதேபோல, வேறு 5 திட்டங்களும் மின்வாரியத்தினால் முன்மொழியப்பட்டுள்ளது.. இதை கட்டி முடிக்க பல்லாயிரக்கணக்கான கோடிகளும், பல பத்தாண்டு காலங்களும் தேவைப்படும். இதற்கு பிறகும் நீலகிரி, நீலகிரியாகவே இருக்குமா? இவ்வளவு விலை கொடுத்து, இந்த திட்டத்தை கொண்டு வர வேண்டுமா? என்பதுதான் கேள்விக்குறி. நீலகிரியின் இயற்கை, சுற்றுலா, வனவிலங்கு, கலாச்சாரம் போன்றவைகளை அழித்து, இந்த குறுகிய கால பயன்பாடுக்கான அணையை கொண்டு வரவேண்டுமா? என்பதும் அடுத்த கேள்விக்குறியாக உள்ளது.

பைத்தியக்கார திட்டம்

இந்தியாவில் முதன்முதலில் நீர்மின்சக்தி உற்பத்தியானது நீலகிரியில்தான்.. முதலாம் உலகப்போரில், வெடிமருந்து உற்பத்தி செய்ய வேண்டிய நிர்ப்பந்தம், ஆங்கில அரசுக்கு அன்று ஏற்பட்டது. ஆனால், அதை இயக்குவதற்கு மின்சக்தி இல்லை. அதனால் முதன்முதலாக, காட்டேரி நீர்வீழ்ச்சியிலிருந்து நீர்மின்சக்தி எடுத்து, அருவங்காடு என்ற இடத்தில் வெடிமருந்து தொழிற்சாலையை நிறுவினார்கள். இதுவே இந்தியாவின் முதல் நீர்மின்நிலையம்..

பிறகு, 1930களில் புரட்சிகரமான பைகாரா என்ற திட்டம் அமைக்கப்பட்டது. அந்த திட்டத்துக்கு எதிர்ப்பாக, சட்டசபையில் "பைத்தியக்கார திட்டம்" என்று எதிர்க்கட்சிகள் விமர்சித்தார்கள். ஆனால், அத்தனை எதிர்ப்புகளையும் தாண்டி,ஒரு அதிசய மின்திட்டத்தை உருவாக்கினார்கள். இதற்கு முக்கிய காரணம், அன்று மின்துறை அமைச்சராக இருந்த சர்.சி.பி.ராமசாமி ஐயர் மற்றும் பொருளியலாளர் ஹென்றி ஹாவர்டு ஆகியோர்தான்..

பைகாரா அணை - சரித்திர சாதனை

இன்றளவும், இந்தியாவில் குறைந்த விலையில், நீர்மின் உற்பத்தி செய்யுமிடம் பைகாரா அணையில்தான். இந்த பைகாரா அணை வந்த பிறகுதான், கோவை ஒருதொழில் நகரமாக மாறியது. தஞ்சாவூர் வரை இந்த அணையின் பயன் எட்டியது.

பிறகு, 1950-களில் குந்தா மின்திட்டம் நேருவின் கனவாக, இயற்றப்பட்டது.. இது தமிழ்நாட்டின் மெட்ராஸ் முன்னேற்றத்திற்கு மிக முக்கிய பங்காக இருந்தது. இதற்கு பிறகு நீலகிரியால், இந்த அளவுக்குதான்நீர்மின்சக்தியை தர முடியும் என்று முடிவானது.

Nilgiris shillakalla hydroelectric project pykara power station

ஆனால், 30 ஆண்டுகளுக்கு பிறகு, அன்றிருந்த ஜெயலலிதா ஆட்சியில், 1990களில் கோத்தகிரி பகுதியில், கேத்தரின் நீர்வீழ்ச்சி பகுதியில் திட்டம் வகுக்கப்பட்டது. அதுவரையில் நீலகிரியில் கிழக்கு பகுதியில் எந்தவொரு நீர்மின் திட்டமும் வந்ததில்லை. இந்த திட்டத்தை எதிர்த்து, 5 ஆண்டுகள் பாதிக்கப்பட்ட மக்களும், தன்னார்வலர்களும், பலமுறை போராடினார்கள். எதிர்ப்புகளையும் காட்டினார்கள்.

Nilgiris shillakalla hydroelectric project pykara power station

அதிரடி அறிக்கை வெளியிட்ட ஜெயலலிதா

எனினும், 1995-ல் ஜெயலலிதா அரசு அணையை கட்ட தீர்மானித்தது. இதற்கென நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவானது, 15 பரிந்துரைகளை வழங்கினார்கள். அந்த கட்டத்தில்தான், "நீலகிரி காப்போம்" என்ற எங்களுடைய இயக்கம், ஒரு ஆராய்ச்சி அறிக்கையை ஜெயலலிதா அரசிடம் சமர்ப்பித்தோம். அந்த 15 பரிந்துரைகளுக்கும் எதிர்ப்பு பதிவு செய்து, அதன் ஆபத்தையும் வலியுறுத்தினோம்.

இப்படியொரு அறிக்கை கொடுத்த அடுத்த 4 நாட்களிலேயே நேரடியாக ஒரு அறிக்கை வெளியிட்டு, இனிமேல் நீலகிரிக்கு அணை வராது என்று ஜெயலலிதா அறிவித்தார். இந்த அறிவிப்பானது, மின்சக்தி வரலாற்றில் மிகப்பெரிய திருப்பமாக கருதப்பட்டது.

பிறகு 10 ஆண்டுகளுக்கு பிறகு, இந்த அணை தடுக்கப்பட்டது குறித்து நூல் எழுதியிருந்தேன். இதை கேள்விப்பட்ட ஜெயலலிதா அம்மையார், என்னை அழைத்து, அவராகவே என்னுடைய புத்தகத்தை வெளியிட்டு, நீலகிரிக்கு இது முக்கிய ஆவணமாக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

கைவிடுவாரா தமிழக முதல்வர்

ஆனால், இன்று கொண்டுவரப்படும் சில்லகல்லா நீரேற்று மின்திட்டமானது, அன்றைய திட்டத்தைவிட, 100 மடங்கு அபாயமானது. ஜெயலலிதா மட்டும் இன்று உயிருடன் இருந்திருந்தால், நீலகிரியின் ஆபத்தை உணர்ந்து கட்டாயமாக இதை திரும்ப பெற்றிருப்பார். எனவே, நீலகிரியின் முக்கியத்துவத்தையும், வருங்காலத்தையும் கருதி, இன்றைய தமிழக முதல்வர் இந்த திட்டத்தை கைவிடுவாரா? என்பதுதான் நீலகிரி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது" என்று கேட்டுக் கொண்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+