Nilgiris tourist centers: நீலகிரியில் அனைத்து சுற்றுலா மையங்களும் மூடல்.. அவசர உதவி எண்கள் வெளியீடு!
நீலகிரி: நீலகிரி மாவட்டத்திற்கு இன்று ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. எனவே இன்று அனைத்து சுற்றுலா மையங்களும் மூடப்படுகின்றன. அதே நேரம் அவசர உதவிக்கான எண்களும் அறிவிக்கப்பட்டிருக்கின்றன.
ரெட் அலர்ட் எனில் 20 செ.மீக்கும் அதிகமாக மழை பெய்யும் என்று அர்த்தம். இதனால் வெள்ளப்பெருக்கு ஏற்படும். மண் சரிவு ஏற்பட்டு மரங்கள் விழும். இதனால் மின் இணைப்பு துண்டிப்பு ஏற்படவும் வாய்ப்புகள் இருக்கின்றன.

எனவே, முன்னெச்சரிக்கையாக நீலகிரி மாவட்டத்தில் இன்று அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது. மழை மற்றும் இயற்கை இடர்பாடுகளால் பாதிக்கப்படும் பொதுமக்கள் உதவிக்கு அழைக்க, கட்டணமில்லா தொலைபேசி எண் 1077 மற்றும் 0423-2450034, 2450035 ஆகிய எண்களைத் தொடர்பு கொள்ளலாம். இதனை தொடர்ந்து 9488700588 என்ற வாட்ஸ் அப் எண்ணிலும் தகவல் தெரிவிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கடந்த ஜூன் 1ம் தேதி தொடங்கி இன்று வரை நீலகிரி மாவட்டத்தில் 60 சென்டிமீட்டர் அளவுக்கு மழை பதிவாகியுள்ளது. இந்த காலத்தில் இயல்பாக 47 சென்டிமீட்டர் அளவுக்கு மழை பதிவாகி இருக்க வேண்டும். ஆனால், இயல்பை விட 27% அதிகமாக மழை இந்த மாவட்டத்தில் பதிவாகியுள்ளது. அதேபோல கோயம்புத்தூரை பொறுத்தவரையில் இந்த காலத்தில் 41 சென்டிமீட்டர் அளவுக்கு மழை பதிவாகி இருக்க வேண்டும். ஆனால் 64 செ.மீ அளவுக்கு அதாவது இயல்பை விட 54 சதவீதம் அளவுக்கு மழை அதிகமாக பதிவாகியுள்ளது.
இந்நிலையில்தான் நீலகிரி மாவட்டத்தில் நாளை ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது. தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதன் காரணமாகவும் தென் இந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது அதன் காரணமாகவும் இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
நீலகிரி மாவட்டம் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் அதி கனமழையும், தேனி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திண்டுக்கல், திருப்பூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு மற்றும் சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். நீலகிரி மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் கன முதல் அதி கனமழையும், கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருப்பத்தூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
ஆக.7ம் தேதி தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, வேலூர், ராணிபேட்டை, திருப்பத்தூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
ஆக.8ம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
ஆக.9ம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஆக.10ம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.












Click it and Unblock the Notifications