ஊட்டி தனியார் பள்ளி மாணவியை நாசமாக்கி கொன்ற இளைஞன்.. வாழ்நாள் முழுக்க மறக்க முடியாத தண்டனை
ஊட்டி: நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே தனியார் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்த மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.
நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே உள்ள மலை கிராமத்தில் 14 வயது மாணவி ஒருவர் வசித்து வந்தார். அவர் ஊட்டியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்திருக்கிறார். இந்த நிலையில் கடந்த 24-4-2023 அன்று மாலை பள்ளி முடிந்து வீட்டிற்கு செல்ல வழக்கம்போல் எச்.பி.எப். பகுதியில் உள்ள பேருந்து நிலையத்தில் பஸ்சுக்காக காத்திருந்தார்.

அப்போது பள்ளி மாணவியின் உறவினரான 24 வயதாகும் ரஜ்னேஷ் குட்டன் என்பவர், தன்னுடைய காரில் ஏற்றி சென்று வீட்டில் விடுவதாக கூறி வனப்பகுதிக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார். பின்னர் மாணவி இதுகுறித்து வெளியில் கூறி விடுவார் என்று பயந்த ரஜ்னேஷ் குட்டன் தனது காரில் இருந்த இரும்பு கம்பியை எடுத்து மாணவியின் தலையில் ஓங்கி அடித்து உள்ளார். அதன் பின்னர் ரஜ்னேஷ் குட்டன் மாணவியின் கழுத்தில் இருந்த அடையாள அட்டை கயிறு மூலம் கழுத்தை இறுக்கி கொலை செய்திருக்கிறார். அவரது உடலை வனப்பகுதியில் வீசிவிட்டு சென்றுள்ளார்.
இதற்கிடையே நீண்ட நேரமாகியும் மாணவி வீட்டுக்கு வராததால் அவரின் பெற்றோர் மற்றும் கிராமத்தினர் தேடி உள்ளனர். அப்போது கிராமத்தில் இருந்து நீண்ட தூரத்தில் உள்ள வனப்பகுதியில் மாணவியின் புத்தகப் பை கண்டுபிடிக்கப்பட்டது. பின்பு வனப்பகுதியில் தேடிப் பார்த்தபோது புதர் பகுதியில் அவர் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து ஊட்டி போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மாணவியின் உடலை பிரேத பரிசோதனைக்காக ஊட்டி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள். இதுகுறித்து விசாரணை நடத்திய பைக்காரா போலீஸ் இன்ஸ்பெக்டர் சுசிலா தலைமையிலான போலீசார் போக்சோ உள்பட 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து ரஜ்னேஷ் குட்டனை கைது செய்தனர்.
முதல் கட்ட விசாரணையில் இந்த சம்பவத்தின்போது போதை பொருள் பயன்படுத்தியதால் ரஜ்னேஷ் குட்டன் மூர்க்கத்தனமாக செயல்பட்டது உறுதியானது. இதைத்தொடர்ந்து ரஜ்னேஷ் குட்டன் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கு விசாரணை ஊட்டி மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்த வழக்கில் நேற்று ஊட்டி மகிளா நீதிமன்றத்தில் தீர்ப்பு கூறப்பட்டது. இதன்படி பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த ரஜ்னேஷ் குட்டனுக்கு மூன்று பிரிவுகளின் கீழ் 3 ஆயுள் தண்டனையும், ரூ.53 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி ஸ்ரீதரன் உத்தரவிட்டார். இந்த தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து ரஜ்னேஷ் குட்டன் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் செந்தில்குமார் ஆஜராகி வாதாடினார்.












Click it and Unblock the Notifications