அமெரிக்கா vs ஐரோப்பிய நாடுகள்.. ஆரம்பிக்கும் புதிய "வர்த்தக" போர்? காரணம் டிரம்ப் தான்! பின்னணி
பாரீஸ்: ஐரோப்பாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்குக் கூடுதலாக 25% வரியை விதிக்க உள்ளதாக டிரம்ப் அறிவித்திருந்தார். இது சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதற்குப் பதிலடி கொடுக்க ஐரோப்பிய ஒன்றியமும் ரெடியாகி வருகிறது. இதனால் அமெரிக்கா vs ஐரோப்பிய ஒன்றியம் என்று மோதல் உருவாகும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபராகப் பதவியேற்றுள்ள டிரம்ப் தடாலடியாகப் பல அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். பல நாடுகளின் மீது வரி விதிப்பதாகச் சொல்ல ஒரு பதற்றமான சூழலை ஏற்படுத்தி வருகிறார்.

இதனால் பல நாடுகள் அமெரிக்கா மீது கோபத்தில் இருக்கிறது. இதற்கிடையே இந்த விவகாரத்தில் இப்போது அமெரிக்காவுக்கு எதிராக ஒட்டுமொத்த ஐரோப்பிய ஒன்றியமும் திரளும் சூழல் உருவாகியுள்ளது.
டிரம்ப் விதிக்கும் வரி:
அமெரிக்காவுக்குள் இறக்குமதி செய்யப்படும் அனைத்து ஸ்டீல் மற்றும் அலுமினியம் இறக்குமதிக்குக் கூடுதலாக 25% வரி விதிக்கப் போவதாக டிரம்ப் அறிவித்தார். அதாவது ஏற்கனவே உள்ள வரிகளுக்கு மேல் கூடுதலாக இந்த வரியை விதிக்கப் போவதாக டிரம்ப் அறிவித்துள்ளார். ஐரோப்பிய நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு அதிகளவில் ஸ்டீல் மற்றும் அலுமினியம் செல்லும் நிலையில், இது ஐரோப்பிய ஒன்றியத்திற்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையே டிரம்பின் இந்த வரி விதிப்பிற்கு பிரான்ஸ் வெளியுறவு அமைச்சர் ஜீன் நோயல் பாரோட் பதிலடி கொடுத்துள்ளார்.. அமெரிக்காவுக்குத் தக்க பதிலடி தரப்படும் எனக் கூறியுள்ள ஜீன் நோயல், பிரான்ஸும் ஐரோப்பிய யூனியனும் தங்கள் சொந்த மக்களின் நலனை என்றும் விட்டுக்கொடுக்காது என்றும் அமெரிக்க அச்சுறுத்தல்களைத் துணிந்து எதிர்கொள்ளும் என்றும் தெரிவித்துள்ளது.
அமெரிக்கா vs ஐரோப்பிய ஒன்றியம்
அமெரிக்காவுக்கும் டிரம்பிற்கும் பதிலடி தருவீர்களா என்ற கேள்விக்கு அவர் , "நிச்சயமாக... ஏற்கனவே 2018இல் டொனால்ட் டிரம்ப் இதுபோலத் தான் செய்தார். அப்போதே நாங்கள் பதிலடி கொடுத்திருந்தோம். இப்போதும் டிரம்பிற்கு தக்க பதிலடி கொடுக்க தயாராகவே உள்ளோம். சரியான நேரத்தில் பதிலடி தரக் காத்திருந்தோம். இப்போது அந்த நேரம் வந்துவிட்டதாகவே நினைக்கிறோம். ஐரோப்பிய ஒன்றியத்துடன் எந்தவொரு நாடும் வர்த்தக போரை தொடங்கினாலும் அது அவர்களுக்கே சிக்கல்" என்றார்.
பதறும் உலக நாடுகள்:
டிரம்ப் இதுபோல இஷ்டத்திற்குச் சர்வதேச நாடுகள் மீது வரி விதித்தால், அதற்கு நிச்சயம் உலக நாடுகளும் பதிலடி கொடுக்கும். இதுபோல மாறி மாறி வரி விதிக்கும் போது அது ஒரு வர்த்தக போரை உருவாக்கி, பொருளாதாரத்தை மிகவும் மோசமான இடத்திற்குத் தள்ளும். இது சர்வதேச வர்த்தகம், பொருளாதார வளர்ச்சியைப் பாதிக்கும். மேலும், தங்கம் விலை உயர்வுக்கும் காரணமாக அமையும் என்கிறார்கள் வல்லுநர்கள்.
டிரம்ப்:
அதேநேரம் அமெரிக்காவில் இருந்து ஏற்றுமதி செய்யும் ஒரு பொருளுக்கு உலக நாடுகள் எவ்வளவு வரி விதிக்கிறதோ.. அதே அளவு வரியை அந்த நாடுகள் மீதும் விதிப்போம் என்றே டிரம்ப் தடாலடியாகக் கூறி வருகிறார். அதன் ஒரு பகுதியாகவே அவர் அண்டை நாடுகளான மெக்சிகோ மற்றும் கனடா மீது 25% வரியும் சீனா இறக்குமதிக்கு ஏற்கனவே உள்ள வரியுடன் சேர்த்துக் கூடுதலாக 10% வரியையும் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications