பறிபோன பதக்கம்.. வினேஷ் போகத் தகுதி நீக்கம் குறித்து மேல்முறையீடு! ஒலிம்பிக் முடிவதற்குள் தீர்ப்பு
பாரீஸ்: ஒலிம்பிக்கில் மல்யுத்த போட்டியில் இறுதி சுற்றுவரை இந்திய வீராங்கனை முன்னேறியிருந்த நிலையில், திடீரென தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதனை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டது. இதனை சர்வதேச தீர்ப்பாயம் ஏற்ற நிலையில், இன்று விசாரணை நடைபெற்றது. விசாரணையில் முடிவில் ஒலிம்பிக் முடிவதற்குள் தீர்ப்பு வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
பாரிஸ் ஒலிம்பிக் மல்யுத்த போட்டியில் பங்கேற்றிருந்த வினேஷ் போகத், நடப்பு உலக சாம்பியனான ஜப்பான் வீராங்கனையை தோற்கடித்து காலிறுதியில் நுழைந்தார். அங்கு, உக்ரைன் வீராங்கனை ஒக்ஸானா லிவாச்சை 7-5 என்ற கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார். அரையிறுதியில், கியூபாவின் யூஸ்னிலிஸ் குஸ்மான் லோபஸை வீழ்த்தி இறுதி போட்டிக்குள் நுழைந்தார். இறுதி போட்டியில் வென்றால் தங்கம் கிடைத்திருக்கும்.

இப்படி இருக்கையில் 50 கிலோ எடை பிரிவில் அவர் விளையாட இருந்த வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். 50 கிலோ எடை பிரிவில் விளையாட 50 கிலோ மட்டுமே இருக்க வேண்டும். ஆனால் வினேஷ் 150 கிராம் எடை கூடுதலாக இருந்ததாக கூறி தகுதி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். எடை குறைப்புக்காக வினேஷ் நேற்றிரவு கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொண்டிருக்கிறார். இதற்கு பலனாக 1.85 கிலோ எடை குறைந்திருக்கிறது. இருப்பினும் அனுமதிக்கப்பட்ட எடையை விட 100 - 150 கிராம் கூடுதலாக இருந்ததால் அவர் நீக்கப்பட்டிருக்கிறார்.
இதனையடுத்து அமெரிக்க வீராங்கனைக்கு தங்க பதக்கம் வழங்கப்படுவதாக ஒலிம்பிக் கமிட்டி அறிவித்திருக்கிறது. அதேபோல வினேஷ் தரவரிசை பட்டியலில் கடைசி இடத்திற்கு தள்ளப்படுவார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தகுதி நீக்கம் குறித்து மேல் முறையீடு செய்ய எந்த வாய்ப்பும் இல்லை என்றும் சொல்லப்படுகிறது.
இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், வினேஷுக்கு பிரதமர் மோடி ஆறுதல் தெரிவித்திருக்கிறார். அதேபோல காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் பலர், இதில் சதி இருப்பதாக குற்றம்சாட்டியுள்ளனர். எதிர்க்கட்சிகளின் விமர்சனத்தையடுத்து மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா நாடாளுமன்றத்தில் விளக்கமளித்துள்ளார். விளக்கத்தை ஏற்காத இந்தியா கூட்டணி கட்சியினர் வெளிநடப்பு செய்திருக்கின்றனர்.
மறுபுறம், வினேஷின் தகுதி நீக்கம் குறித்து மேல் முறையீடு செய்யப்பட்டிருக்கிறது. அதில், இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றதால், தனக்கும் வெள்ளிப்பதக்கம் தர வேண்டும் என கோரப்பட்டிருந்தது. இந்த முறையீட்டை சர்வதேச விளையாட்டு தீர்ப்பாயம் ஏற்றிருக்கிறது. எனவே விசாரணைக்கு வழக்கறிஞர்களை நியமிக்க வேண்டும் என்றும் கூறியிருக்கிறது.
இதனையடுத்து மூத்த வழக்கறிஞர்கள் ஹரிஷ் சால்வே மற்றும் விதுஷ்பத் சிங்கானியா ஆகியோரை வினேஷ் போகத்துக்காக வாதாட இந்திய அரசு நியமித்துள்ளது. இந்திய நேரப்படி இன்று பிற்பகல் 12.30 மணிக்கு வினேஷ் போகத் மனு மீது விசாரணை நடத்தப்பட்டது. இதனையடுத்து வழக்கின் தீர்ப்பு ஒலிம்பிக் போட்டி முடிவதற்குள் அறிவிக்கப்படும் என்று சர்வதேச விளையாட்டுக்கான நடுவர் நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது.












Click it and Unblock the Notifications