பீகார்: ஒரே ஒரு சீட் கூட பாஜக தரலையே.. மத்திய அமைச்சர் பசுபதி பராஸ் திடீர் ராஜினாமா!
பாட்னா: லோக்சபா தேர்தலில் பீகார் மாநிலத்தில் தமது ராஷ்டிரிய லோக் ஜன சக்தி கட்சிக்கு ஒரே ஒரு தொகுதியை கூட பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஒதுக்காததால் மத்திய அமைச்சர் பசுபதி குமார் பராஸ் தமது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
லோக்சபா தேர்தலில் பீகாரில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தொகுதி பங்கீடு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாஜக 17, நிதிஷ்குமாரின் ஜேடியூ 16, சிராக் பஸ்வானின் லோல் ஜன சக்தி கட்சிக்கு 5 இடங்கள் ஒதுக்கப்பட்டன. எஞ்சிய 2 தொகுதிகள் கூட்டணி கட்சிக்கு ஒதுக்கப்பட்டன.

லோக் ஜன சக்தி நிறுவனரான மறைந்த ராம் விலாஸ் பஸ்வானின் சகோதரர் பசுபதி குமார் பராஸ், சில ஆண்டுகளுக்கு முன்னர் அக்கட்சியில் இருந்து விலகி ராஷ்டிரிய லோக் ஜனசக்தி கட்சியை உருவாக்கினார். இந்த கட்சி பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்தது. பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையிலும் பசுபதி குமார் பராஸ் இணைந்தார்.
ஆனால் தற்போது பீகார் தொகுதி பங்கீட்டில் பசுபதி குமார் பராஸின் ராஷ்டிரிய லோக் ஜனசக்தி கட்சிக்கு ஒரு தொகுதி கூட ஒதுக்கப்படவில்லை. இதனால் மத்திய அமைச்சர் பசுபதி குமார் பராஸ் கடும் அதிருப்தி அடைந்துள்ளார். இந்த அதிருப்தியை வெளிப்படுத்தும் வகையில் மத்திய அமைச்சர் பதவியை பசுபதி குமார் பராஸ் ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். மேலும் பீகாரில் ஆர்ஜேடி-காங்கிரஸ்- இடதுசாரிகளின் "இந்தியா" கூட்டணியில் பசுபதி குமார் பராஸின் ராஷ்டிரிய லோக் ஜன சக்தி இணையக் கூடும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பீகாரில் ஜேடியூ-ஆர்ஜேடி-காங்கிரஸ்- இடதுசாரிகள் கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்தது. திடீரென முதல்வர் நிதிஷ்குமார், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு தாவினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications