SIR-ஐ விடுங்க.. பீகாரில் காங்கிரஸ் சறுக்கியதற்கு முக்கிய காரணமே இதுதான்! ராகுல் காந்தி உஷார்
பாட்னா: பீகார் தேர்தலில், ஓவைசியின் கட்சி கூட 5 இடங்களை வென்றுவிட்டது. ஆனால் காங்கிரஸால் வெறும் 6 தொகுதிகளை மட்டுமே கைப்பற்ற முடிந்திருக்கிறது. இந்த தோல்விக்கு காரணம் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த நடவடிக்கை (SIR) என்று கட்சி கூறினாலும், அரசியல் விமர்சகர்கள் இதை ஏற்கவில்லை. பீகார் தோல்விக்கான காரணத்தை அவர்கள் புட்டு புட்டு வைத்திருக்கின்றனர்.
அனைத்திந்திய காங்கிரஸ் கமிட்டியின் பீகார் பொறுப்பாளர் கிருஷ்ணா அல்லவருவின் அரசியல் அல்லாத பணி அணுகுமுறை, ராகுல் காந்தியின் வாக்காளர் அதிகார யாத்திரை தோல்வி, வெளியாட்களுக்கு சீட் வழங்கியது, மற்றும் கட்சியின் பலவீனமான அமைப்பு ஆகியவைதான் தோல்விக்கான காரணமாக சொல்லப்படுகிறது.

அதிருப்தியால் உள்ளடி வேலை
குறிப்பாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழுக்கு தோல்வியடைந்த 10 காங்கிரஸ் வேட்பாளர்கள் தங்கள் தோல்விக்கான காரணத்தை விளக்கியுள்ளனர். அதாவது, "புதியதாக வந்தவர்களுக்கு கட்சி தலைமை சீட் கொடுத்திருக்கிறது. சுமார் 10 பேர் மாற்று கட்சியிலிருந்து காங்கிரஸில் இணைந்தனர். அவர்கள் அனைவருக்கும் சீட் கொடுத்தது மிகப்பெரிய தப்பு. நாங்க முன்னாடியே இதை சுட்டிக்காட்டினோம். ஆனால், தலைமை புரிந்துக்கொள்ளவில்லை. முடிவில், 10ல் 2 பேரால் மட்டுமே ஜெயிக்க முடிந்தது.
தலைமையின் தவறு
மறுபுறம், போட்டியிட சீட் கொடுக்கப்படும் என்று எதிர்பார்த்திருந்து, ஏமாற்றம் அடைந்தவர்கள் கட்சிக்கு எதிரான நடவடிக்கையில் இறங்கினர். அதிருப்தி எழுகிற இடத்தில் அதை சரி செய்ய வேண்டும். பாதிக்கப்பட்டவர்களை தலைமை அழைத்து பேசி சமாதானப்படுத்தி இருக்க வேண்டும். ஆனால் நம்ம தலைவர்கள் அப்படி எதையும் செய்யவில்லை. எனவே அதிருப்தி அடைந்தவர்கள் உள்ளடி வேலையை பார்த்துவிட்டார்கள். இது தோல்விக்கு முக்கிய காரணம்" என்று கூறுகிறார்கள்.
கிருஷ்ணா அல்லவருவின் கார்ப்பரேட் பாணியிலான பணி
"கிருஷ்ணா அல்லவரு, பீகார் தேர்தலுக்கு 8 மாதங்களுக்கு முன்னர்தான் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். இந்த குறைந்த காலத்தில், மாநிலத்தின் அரசியல் இயக்கவியலை அவரால் உள்வாங்கிக் கொள்ள முடியவில்லை. மட்டுமல்லாது, கிருஷ்ணா அல்லவரு தேர்தலுக்காக மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவில்லை. பெரும்பாலான நாட்களை தலைநகர் பாட்னாவிலேயே கழித்தார். இதை விட முக்கியமான விஷயம், கிருஷ்ணா அல்லவருவின் கார்ப்பரேட் மற்றும் அரசியல் அல்லாத பானி அணுகுமுறை, கட்சியினரின் மன உறுதியை பாதித்தது.
தோல்வியடைந்த யாத்திரைகள்
தேர்தலுக்கு முன்பாக ராகுல் காந்தி மேற்கொண்டிருந்த யாத்திரை பரவலாக கவனம் பெற்றிருந்தது. 'வாக்காளர் அதிகார்' என்கிற பெயரில் யாத்திரையை ராகுல் காந்தி மேற்கொண்டிருந்தார். இந்த யாத்திரை காங்கிரஸ் வாக்குகளை ஒருங்கிணைக்கும் என்று கருதப்பட்டது. அதேபோல காங்கிரஸின் இளம் தலைவர்களில் ஒருவரான கண்ணையா குமார், 'புலம் பெயர்தலை நிறுத்து, வேலை கொடு' என்று கோரி யாத்திரையை மேற்கொண்டிருந்தார். இந்த யாத்திரைக்கு வரவேற்பு இருப்பினும், அது வாக்குகளாக மாறவில்லை. கண்ணையா குமாரின் யாத்திரை தேர்தல் நெருக்கத்தில் நடந்திருக்க வேண்டும். அதேபோல ராகுல் காந்தி வேலையின்மையின் தீவிரத்தை கையில் எடுத்திருக்க வேண்டும். ராகுல் காந்தி முன்னெடுத்த வாக்கு திருட்டு பிரச்சாரம் மக்களிடையே பரவலாக சென்று சேரவில்லை.
பலவீனமான அமைப்பு
மாவட்டக் குழுக்களை வலுப்படுத்த ராகுல் காந்தி வலியுறுத்திய போதிலும், பீகார் கட்சித் தலைமை மாவட்ட மற்றும் பூத் மட்டங்களில் கட்சி கட்டமைப்புகளை வலுப்படுத்த வேலை செய்யவில்லை. இது குறித்து தோல்வியடைந்த வேட்பாளர்கள் கூறுகையில், "பூத் கமிட்டிகளை அமைப்பு ரீதியாக சரி பார்க்கவில்லை. எல்லாம் காகிதத்தில் மட்டுமே இருந்தது. மாவட்டக் குழுக்கள் அமைக்கப்படவில்லை. அதே நேரத்தில், மாநிலத் தலைமை கிரவுண்ட் லெவல் கேடர்களை வார் ரூம் வாரியர்களாக மாற்ற முயன்றது. இது யுக்தி ஒருபோதும் வேலை செய்தது கிடையாது.
மகாபந்தன் பிளவுகள்
மறுபுறம் மகாபந்தன் கூட்டணி முறையாக தொகுதி பங்கீட்டை அறிவிக்கத் தவறியதால், கூட்டணி ஒற்றுமையுடன் இல்லை என்ற செய்தி மக்கள் காதுகளுக்கு எட்டியது. கூட்டணியின் முதல்வர் வேட்பாளரை அறிவிப்பதில் ஏற்பட்ட ஆரம்பத் தயக்கமும், தோழமை கட்சிகளுடன் நட்பு போட்டி என்று சொல்லிக்கொண்டு.. கூட்டணி கட்சி வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதியில் களமிறங்கியதும் நிலைமையை மோசமாக்கியது.
இது தவிர வேறு சில காரணங்களும் இருக்கின்றன. குறிப்பாக விக்காஷீல் இன்சான் கட்சி தலைவர் முகேஷ் சஹானியின் பலத்தை கட்சி தலைமை ஒவராக மதிப்பட்டுவிட்டது. EBC என்படும் மிகவும் பின்தங்கிய மக்களின் வாக்குகள் இவருக்கு இருந்ததாக கட்சி நம்பியது. எனவே சஹானியை துணை முதல்வர் வேட்பாளராக காங்கிரஸ் அறிவித்து. அவரால் சொந்த சாதி வாக்குகளை கூட பெற முடியவில்லை என்பது ரிசல்டில் தெரிய வந்திருக்கிறது" என்று விளக்கியுள்ளனர்.
இது இல்லாமல் இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும், 24 தொகுதிகளை உள்ளடக்கிய சீமாஞ்சல் பகுதிகளில் அசாதுதீன் ஓவைசி கட்சி வாக்குகளை பிரித்ததும், காங்கிரஸ் தலைவர்களின் ஒருதலைப்பட்சமான பிரச்சாரமும் தோல்விக்கு காரணம் என்றும் சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications