நடுவில் இந்த நேபாளம் வேற.. இரவோடு இரவாக இந்திய பகுதிகளை நோட்டமிட்ட ட்ரோன்கள்! எல்லையில் மீண்டும் பதற்றம்
பாட்னா: இந்தியா பாகிஸ்தான் இடையேயான மோதல் முடிவுக்கு வந்து சில வாரங்களே ஆகிறது. இதற்கிடையே இந்திய நேபாள எல்லையில் திடீரென ட்ரோன் நடமாட்டம் இருந்துள்ளது. நேபாளத்தில் இருந்து நுழைந்த 20 ட்ரோன்கள் இந்திய எல்லைப் பகுதிகளில் சுமார் 40 நிமிடங்கள் வரை நோட்டமிட்டுள்ளது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்தியா பாகிஸ்தான் இடையே கடந்த மாதம் மோதல் ஏற்பட்டது. பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாகப் பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்களைக் குறிவைத்து இந்தியா துல்லியமான தாக்குதல்களை நடத்தின. இதில் 100+ தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இதைப் பொறுக்க முடியாத பாகிஸ்தான் நமது எல்லையில் அத்துமீறித் தாக்குதல் நடத்தியது.

15-20 ட்ரோன்கள்
அதற்கு இந்தியாவும் பதிலடி தரவே, அதைச் சமாளிக்க முடியாமல் பாகிஸ்தான் போர் நிறுத்தம் செய்தது. இந்தியா பாகிஸ்தான் மோதல் முடிவுக்கு வந்து சில வாரங்களே ஆகிறது. இதற்கிடையே எல்லையில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திங்கள் இரவு நேபாளத்திலிருந்து 15 முதல் 20 ட்ரோன்கள் இந்தியப் பகுதிக்குள் நுழைந்துள்ளது. இது பெரும் பரபரப்பைக் கிளப்பிய நிலையில், நேற்று மீண்டும் அதுபோல ட்ரோன்களை நுழைவதைத் தடுக்க இந்தியா-நேபாள எல்லையில் உள்ள மாவட்டங்களில் ஹை அல்ர்ட் விடுக்கப்பட்டது.
நேபாளத்தில் இருந்து இந்தியாவுக்கு நுழைந்த இந்த ட்ரோன்கள் சுமார் 40 நிமிடங்கள் வரை மதுபனி மாவட்டத்தில் உள்ள கம்லா எல்லைப் பகுதிகளில் பறந்து நோட்டமிட்டுள்ளது. அதன் பிறகு மீண்டும் வந்த வழியிலேயே அது நேபாளத்திற்குத் திரும்பிவிட்டதாகக் கூறப்படுகிறது.
அதிகாரிகள் சொல்வது என்ன
இது தொடர்பாக இந்திய நேபாள எல்லையைப் பாதுகாக்கும் சஷாஸ்திர சீமா பால் (எஸ்எஸ்பி) படையின் துணை கமாண்டன்ட் விவேக் ஓஜா கூறுகையில், "திங்கட்கிழமை இரவு 7.30 மணியளவில் கம்லா எல்லையில் இதுபோல 15 முதல் 20 ட்ரோன்கள் திடீரென இந்தியப் பகுதியில் நுழைந்தது. அதைப் பலரும் பார்த்துள்ளனர். அந்த ட்ரோன்கள் மேற்கு கிழக்கு திசையில் சில காலம் சுற்றிய நிலையில், பிறகு மீண்டும் நேபாளத்திற்குத் திரும்பிவிட்டன. அது நேபாளத்திற்குத் திரும்புவதையும் நமது படையினர் சிலர் பார்த்துள்ளனர்.
இந்த ட்ரோன்களை பார்த்த உடனேயே நமது வீரர்கள் அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக தர்பங்கா விமானப்படை மற்றும் டெல்லி விமானப்படைத் தளங்களுக்குத் தகவல் அனுப்பப்பட்டது. அதைத் தொடர்ந்தே சர்வதேச எல்லையில் ஹை அலர்ட் அறிவிக்கப்பட்டது" என்றார்.
நேபாள அதிகாரிகளிடம் விசாரணை
நேபாள எல்லை பாதுகாப்புப் படையினர் எதாவது ட்ரோன் பயிற்சிகளை நடத்தினார்களா என்பது குறித்து நேபாள அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு இந்தியா கேட்டுள்ளது. இருப்பினும், அதுபோல எந்தவொரு பயிற்சியும் நடத்தப்படவில்லை என்பதை நேபாள அதிகாரிகள் கூறியுள்ளனர். இதனால் ட்ரோன்களை அனுப்பியது யார்.. இதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
தீவிர சோதனை
மேலும், இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து எல்லைப் பகுதிகளில் தீவிர சோதனையை நடத்தப்பட்டு வருவதாக எல்லையோர கல்காலியா போலீஸ் நிலைய அதிகாரி ராகேஷ் குமார் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில் "நேபாளத்தில் இருந்து வருவோரைத் தீவிரமாகச் சோதனை செய்து வருகிறோம். இதற்காக மோப்ப நாய்கள், ஸ்கேனிங் இயந்திரங்களைப் பயன்படுத்தி வருகிறோம். நேபாளத்திலிருந்து வரும் வாகனங்களைத் தீவிரமாகச் சோதனை செய்ய அறிவுறுத்தியுள்ளோம்.
ஆபரேஷன் சிந்தூருக்கு பிறகு பாகிஸ்தான் எல்லை மட்டுமின்றி... இந்தியா-நேபாள எல்லையிலும் ரோந்துப் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.. சந்தேகத்திற்கிடமான நபர்களின் நடமாட்டத்தைக் கண்காணிக்க மப்டியிலும் போலீசார் கண்காணித்து வருகிறார்கள்" என்றார்.












Click it and Unblock the Notifications