அனைவரும் உயிருடன் இருப்பதற்கு.. பிரதமர் மோடியே காரணம்.. பாஜக அமைச்சர் ராம் சூரத்!
பாட்னா: பிரதமர் நரேந்திர மோடியால் மட்டுமே அனைவரும் உயிருடன் இருப்பதாக பீகார் மாநில அமைச்சர் ராம் சூரத் ராய் பேசியுள்ளார்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் மூன்றாவது அலையின் தாக்கம் ஜனவரி மாத இறுதியிலும், பிப்ரவரி மாதத் தொடக்கத்திலும் தீவிரமாக இருந்தது. அப்போது குறையத் தொடங்கிய கொரோனா வைரஸ் பாதிப்பு தற்போது மீண்டும் வேகமாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தியாவை பொறுத்தவரை நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக கையாளப்படாததாலேயே கொரோனா பாதிப்பு பதிவாகி வருகிறது.

மத்திய அரசு
இதனிடையே கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க மத்திய அரசு மற்றும் மாநில அரசு இணைந்து தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையை தீவிரப்படுத்தியது. 2021ம் ஆண்டு ஜனவரி 16ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி பொதுமக்களுக்கு இலவசமாக செலுத்தும் நடவடிக்கை தொடங்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து பொதுமக்கள் ஏராளமானோர், தாமாக முன்வந்து தடுப்பூசியை செலுத்திக் கொண்டனர்.

பூஸ்டர் தடுப்பூசி
இதன் பலனாக அண்மையில் இந்தியாவில் 200 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தி சாதனை படைக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவலில் இருந்து பாதுகாத்துக் கொள்ள தடுப்பூசி மட்டுமே ஒரே ஆயுதம் என்பதால், பொதுமக்கள் தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். அதேபோல் சில நாட்களுக்கு முன், பூஸ்டர் டோஸ் தடுப்பூசியும் பொதுமக்களுக்கு இலவசமாக செலுத்தப்பட்டு வருகிறது. இதுவரை இந்தியாவில் 204 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

அமைச்சர் பேச்சு
இந்த நிலையில் பீகார் மாநில அமைச்சரும், அம்மாநில பாஜக தலைவருமான ராம் சூரத் ராய், இந்தியாவில் உள்ள மக்கள் அனைவரும் பிரதமர் நரேந்திர மோடியால் மட்டுமே உயிருடன் இருக்கிறோம். அந்த பெருமை அவருக்கே சேரும். கொரோனா வைரஸ் பரவலின் தடுப்பூசியை உருவாக்கி, அதனை இலவசமாக நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கும் வழங்கியுள்ளார். கொரோனா வைரஸ் பாதிப்பால் ஏற்பட்டுள்ள பொருளாதார பிரச்னையை சரிசெய்ய உலக நாடுகள் போராடி வருகின்றனர். ஆனால் இந்தியா அவ்வாறு அல்ல.

பாக். மீது விமர்சனம்
பொருளாதாரத்தில் மிக வேகமாக வளர்ச்சியடைந்து வருகிறது. பாகிஸ்தானில் உள்ள நிலையை செய்திகளிலும், தொலைக்காட்சிகளிலும் கண்டு வருகிறோம். ஆனால் இந்தியாவில் அனைத்து மக்களும் நிம்மதியாக வாழ்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications