டோனை மாற்றும் பாஜக.. நிதிஷ் கூட்டணி வைப்பது உறுதியாகிறது? பீகார் அரசியலில் அடுத்து என்ன நடக்கும்
பாட்னா: பீகார் மாநில பாஜக நிர்வாகிகளை டெல்லிக்கு வருமாறு அக்கட்சி மேலிடம் அழைப்பு விடுத்துள்ளது. நிதிஷ்குமாரை விமர்சித்து பேசக்கூடாது என கட்சி மேலிடம் அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படும் நிலையில், பாஜக செய்தி தொடர்பாளர்களும் பேச்சிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
பீகார் சட்டசபைக்கு 2020 ஆம் ஆண்டு தேர்தல் நடைபெற்றது. அத்தேர்தலில் பாஜக ஆதரவுடன் முதல்வரானார் நிதிஷ்குமார். அவரது ஜேடியூவும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்திருந்தது. ஆனால், 2 ஆண்டுகளில் இந்தக் கூட்டணியை உடைத்த நிதிஷ் குமார், ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் இணைந்து மகாகூட்டணியை மீண்டும் அமைத்து முதல்வரானர்.

இந்த நிலையில், வருகிற நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்துவதற்காக 'இந்தியா' கூட்டணியை அமைப்பதில் நிதிஷ்குமார் முக்கிய பங்கு வகித்தார். ஆனால், சமீபகாலமாக 'இந்தியா' கூட்டணி கட்சிகள் மீது அவருக்கு அதிருப்தி ஏற்பட்டுள்ளது. கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக அவரை நியமிக்க வேண்டும் என்று ஐக்கிய ஜனதாதள நிர்வாகிகள் வெளிப்படையாக வலியுறுத்தினர். ஆனால் அதை கூட்டணி கட்சிகள் கண்டுகொள்ளவில்லை.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் யாத்திரை, 1-ந் தேதி வாக்கில் பீகாரில் நுழைகிறது. காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்தபோதிலும், யாத்திரையில் நிதிஷ்குமார் பங்கேற்க மாட்டார் என்று அவரது கட்சி அறிவித்துள்ளது. தாம் உருவாக்கிய "இந்தியா" கூட்டணியில் தம்மை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தவில்லை; ஒருங்கிணைப்பாளராக அறிவிக்கவில்லை என்கிற கோபத்தில் நிதிஷ் குமார் மீண்டும் பாஜக கூட்டணிக்கு திரும்ப திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து டெல்லி பாஜக மேலிடத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி அடுத்த கட்ட நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து நிதிஷ் குமார் ஆலோசித்து இருப்பதாக சொல்லப்படுகிறது. இது ஒருபக்கம் இருக்க நிதிஷ் குமார் குறித்து விமர்சிக்க கூடாது என பாஜக மேலிடம் பீகார் கட்சி நிர்வாகிகளுக்கு வாய்ப்பூட்டு போட்டுள்ளது. நிதிஷ்குமார் இணைவது பற்றிய கேள்விக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பதில் அளிக்கையில், "அப்படி ஒரு கோரிக்கை வைக்கப்பட்டால் பாஜக பரிசீலிக்கும்" என்று கூறினார்.
இதனால், இந்தியா கூட்டணியை கை கழுவிவிட்டு மீண்டும் பாஜக கூட்டணியில் நிதிஷ் குமார் ஐக்கியம் ஆவார் என்று பரபரப்பு பேச்சுக்கள் எழுந்துள்ளன. நிதிஷ் குமாரில் பாஜக கூட்டணியில் இணைந்தால் மீண்டும் முதல்வராக பொறுப்பு ஏற்பரா அல்லது சட்ட சபையை கலைத்து விட்டு நாடாளுமன்ற தேர்தலுடன் இணைந்து தேர்தலை சந்திப்பரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்த இரண்டு ஆப்ஷன்களையும் நிதிஷ் கட்சி பரிசீலித்து வருவதாகவும் சொல்லப்படுகிறது. இந்த பரபரப்புக்கு மத்தியில் லாலு பிரசாத் யாதவ் கட்சியின் எம்எல்ஏக்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். அடுத்தடுத்த அரசியல் நகர்வுகளால் பீகார் மாநில அரசியலில் உச்ச கட்ட பரபரப்பு நிலவுகிறது.












Click it and Unblock the Notifications