"அமித் ஷா வந்தாலே ஒரே பிரச்னை தான்.. ஏமாறாதீங்க, ஜாக்கிரதையாக இருங்க.!" போட்டு தாக்கும் நிதிஷ் கட்சி
பாட்னா: பீகாரில் பாஜகவுக்கும் நிதிஷ்குமாருக்கும் இடையேயான மோதல் முற்றியுள்ள நிலையில், ஜேடியு தலைவர் பாஜகவுக்கு கடும் பதிலடி கொடுத்துள்ளார்.
பீகாரில் பாஜகவும் நிதிஷ்குமாரும் இணைந்து கூட்டணி அரசை அமைத்து இருந்த நிலையில், அந்தக் கூட்டணியில் இருந்து நிதிஷ்குமார் வெளியேறினார். இதனால் அங்கிருந்த பாஜக கூட்டணி அரசு கவிழ்ந்தது.
அதற்குப் பதிலாக மீண்டும் தேஜஸ்வி யாதவின் ஆர்ஜேடி மற்றும் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து அவர் ஆட்சியை அமைத்தார். இதற்குப் பின்னர் பீகாரில் பாஜகவுக்கும் நிதிஷ்குமார் கட்சிக்கும் இடையே தொடர்ந்து மோதல் நிலவி வருகிறது.

ஜேடியு
இந்நிலையில், லல்லன் சிங் என்று அழைக்கப்படும் ஜேடியு கட்சியின் தேசிய தலைவர் ராஜீவ் ரஞ்சன் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் பீகார் வருகை மத நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கும் முயற்சியாக இருக்கும் என்று குறிப்பிட்ட அவர், 2024 மக்களவை தேர்தலில் நிதிஷ் கட்சி மொத்தமுள்ள 40 லேக்சபா தொகுதிகளிலும் வெல்லும் என்றும் பாஜக ஒற்றை இலக்கிலேயே வெற்றி பெறுவார் என்றும் தெரிவித்தார்.

அடுத்த பிரதமர்
பாஜகவுடனான கூட்டணியை முறித்த பின்னர், தேசிய அளவில் முக்கியம் வாய்ந்த தலைவராக நிதிஷ்குமார் பார்க்கப்படுகிறார். அனைத்து கட்சிகளையும் அரவணைத்துச் செல்பவர் என்பதால் 2024 மக்களவை தேர்தலில் நிதிஷ் குமார் எதிர்க்கட்சியின் முகமாக இருப்பார் என கூறப்படுகிறது. நிதிஷ்குமார் நாளைய தினம் டெல்லி சென்று முக்கிய எதிர்க்கட்சிகளைச் சந்தித்துப் பேச உள்ளார்.

மத நல்லிணக்கம்
2024இல் பிரதமர் பதவி காலியாகது என்று பாஜக இதற்குப் பதில் கொடுத்து இருந்தது. இதற்குப் பதிலடி கொடுத்த ராஜீவ் ரஞ்சன், "பாஜக முதலில் சந்தித்த தேர்தலில் வெறும் 2 இடங்களில் மட்டுமே வென்று இருந்தனர். விரைவில் அந்த நிலைக்குத் திரும்புவார்கள் என்பதில் சந்தேகம் இல்லை. உள் துறை அமைச்சர் அமித் ஷா இந்த மாத இறுதியில் பீகார் வருகிறார். இந்த பயணம் மத நல்லிணக்கத்தை நிச்சயம் சீர்குலைக்கும். எனவே பீகார் மக்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்" என்றார்.

வெறும் 50 இடங்கள்
நிதிஷ்குமார் நாளை டெல்லி செல்ல உள்ள நிலையில், இன்று அவர் மூத்த நிர்வாகிகள் உடன் ஆலோசனை நடத்தினார். அப்போது அவர், கூறுகையில், "பாஜகவால் 50 இடங்களில் மட்டுமே வெற்றி பெறும். எதிர்க்கட்சிகள் அனைத்து ஒன்று சேர்ந்தால் இது தான் நடக்கும். நாடு முழுவதும் இருக்கும் அனைத்து பிராந்திய கட்சிகளும் இணைந்து தேர்தலை எதிர்கொண்டால் மட்டுமே இது சாத்தியம்" என்றார்.

கரையும் கட்சி
பீகார் மாநிலத்தில் பாஜக உடனான கூட்டணியைக் கடந்த மாதம் தான் நிதிஷ்குமார் முறித்து இருந்தார். அதன் பின்னர் சில வாரங்களில் அருணாச்சலப் பிரதேசத்தின் ஒரே ஜேடியு எம்எல்ஏ பாஜகவில் ஐக்கியமானார். அதேபோல சமீபத்தில் மணிப்பூரில் இருந்த 7 ஜேடியு எம்எல்ஏக்களில் 5 பேர் பாஜகவில் சேர்ந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications