பீகாரின் அவல நிலையை பாருங்க.. கார்களின் ஹெட்லைட் வெளிச்சத்தில் தேர்வெழுதிய பிளஸ் 2 மாணவர்கள்!
பாட்னா: நாட்டிலேயே கல்வியில் மிகவும் பின்தங்கிய மாநிலம் பீகார் ஆகும். இங்கு நடைபெறும் தேர்தலில் மோசடி நடப்பதாக அடிக்கடி புகார்கள் எழுவது வழக்கம். சில ஆண்டுகளுக்கு முன்பு அங்கு மாநிலத்திலேயே முதலிடத்துக்கு வந்த மாணவிக்கு அவருடைய பாடப்பிரிவில் எத்தனை பாடங்கள் உள்ளன என்பது கூட தெரியவில்லை என்ற விவகாரம் பெரும் அதிர்வலையை யற்படுத்தியது.
இந்த நிலையில்தான் பீகாரில் தேர்வு மையத்தில் மின்சாரம் இல்லாததால் கார்களின் ஹெட்லைட் வெளிச்சத்தில் 12-ம் வகுப்பு மாணவர்கள் தேர்வெழுதிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

12-ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு
பீகார் மாநிலம் கிழக்கு சாம்பரான் மாவட்டத்தில் மோதிஹாரி நகரில் மகாராஜா ஹரேந்திர கிஷோர் சிங் கல்லூரியில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்தக் கல்லூரியில் கடந்த 1-ம் தேதி 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான இடைத் தேர்வு நடைபெற்றது. சுமார் 400 மாணவர்கள் இந்தி இடைத்தேர்வை எழுத ஆர்வமுடன் வந்தனர்.அங்கு மாணவர்களுக்கு போதிய அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

நீண்ட நேர குழப்பம்
மேலும், இருக்கைகள் ஒழுங்கு செய்வதில் ஏற்பட்ட குழப்பம் உள்ளிட்ட பல காரணங்களால் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நிலைமையை சமாளிக்க உயர் போலீஸ் அதிகாரிகள் அங்கு வந்தனர்.
ஆனாலும் நீண்ட நேரம் தேர்வு நடைபெறவில்லை. விடைத்தாள்களும் கொடுக்கப்படவில்லை. ஒருவழியாக 1.45 மணிக்கு தொடங்க வேண்டிய தேர்வு நீண்ட நேரம் கழித்து 4.30 மணிக்குத் தான் தொடங்கியது.

மின்சாரம் இல்லை
தேர்வு தொடங்கிய ஒரு மணி நேரத்துக்குள் இருட்ட தொடங்கியதால் அடுத்த சிக்கல் எழுந்தது. ஏனெனில் கல்லூரியில் மின்சார சேவை இல்லை. கல்லூரி நிர்வாகம் ஜெனரேட்டர் கொண்டு வந்து நிலைமையை சீரமைக்க முயன்றாலும் அனைத்து வகுப்புகளுக்கும் மின்சாரம் கிடைக்கவில்லை. இதனால் அங்கு கூடி இருந்த பெற்றோர்கள் மாணவர்களை கல்லூரி வளாகத்துக்கு அழைத்து வந்தனர்.

கார் ஹெட் லைட் வெளிச்சத்தில் தேர்வு
அங்கு அவர்களை அமர வைத்து தங்களது கார், இருசக்கரம் உள்ளிட்ட வாகனங்களின் ஹெட் லைட்டை( முகப்பு விளக்கை) எரிய விட்டனர். அந்த வெளிச்சசத்தில் மாணவர்கள் தட்டு,தடுமாறி தேர்வு எழுதினார்கள். இரவு 8 மணி வரை தேர்வு நடைபெற்றது. மாணவர்கள் கார் ஹெட் லைட் வெளிச்சத்தில் தேர்வு எழுதும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட அதிகாரிகளிடம் அறிக்கை கேட்டுள்ளதாக அம்மாநில கூடுதல் தலைமை செயலாளர் சஞ்சய் குமார் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications