பீகாரின் முதல்வர் முகம்.. நிதிஷ்குமாரை ஓரம் கட்டிய பிரசாந்த் கிஷோர்! என்டிஏ சறுக்குதே!
பாட்னா: பீகாரில் நிதிஷ்குமார் தலைமையிலான என்டிஏ மற்றும் தேஜஸ்வி தலைமையிலான மகாபந்தன் கூட்டணி இரண்டும் இடையில்தான் போட்டி என்கிற சூழல் தற்போது மாறியிருக்கிறது. குறிப்பாக முதல்வர் ஆசையில் இருக்கும் நிதிஷ்குமாரை மக்கள் அடுத்த முதல்வராக பார்க்க விரும்பவில்லை. அவருக்கு பதிலாக பிரபல தேர்தல் வியூக வகுப்பாளரான பிரசாந்த் கிஷோரை மக்கள் ஆதரித்திருக்கின்றனர். எனவே பீகார் அரசியல் களம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
பிரசாந்த் கிஷோர், 'ஜன் சுராஜ்' எனும் கட்சியை நடத்தி வருகிறார். பீகாரை பொறுத்தவரை இக்கட்சியை மக்கள், "மஞ்ச கலரு கட்சி" என்றுதான் பேச்சு மொழியில் அழைக்கிறார்கள். இந்த தேர்தலில் நாங்கள் முதலிடத்தில் இருப்போம், அல்லது கடைசி இடத்தில் இருப்போம். நடுவில் எந்த இடத்திலும் இருக்க மாட்டோம் என்று பிரசாந்த் கிஷோர் கூறியிருக்கிறார். மட்டுமல்லாது நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் 25 இடங்களை தாண்டாது என்றும் அடித்து கூறியுள்ளார்.

பிரசாந்த் கிஷோரின் கட்சி
கட்சி தொடங்கியவர்கள் என்ன வேண்டுமானாலும் பேசலாம். ஆனால் அவை யதார்த்தத்தில் சாத்தியமா? என்பது கேள்விக்குறி. குறிப்பாக, அரசியல் ஸ்டார்ட்அப் ஆக இருக்கும் ஜன் சுராஜ், பீகார் அரசியலை அசைக்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இந்தியா டுடே கருத்துக்கணிப்பு, பிரசாந்தின் கட்சி, முதலிடத்தையும் பிடிக்காது, கடைசி இடத்தையும் பிடிக்காது. நடுநிலையான இடங்களை வெல்லும் என்று கூறியிருக்கிறது. இந்த கணிப்பு ஓரளவுக்கு நம்பும்படியாகத்தான் இருக்கிறது. ஏனெனில் சமீபத்தில் பீகாரில் 4 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற்றது. 4 தொகுதிகளிலும் பிரசாந்தின் கட்சி போட்டியிட்டு தோல்வியடைந்தது.
மக்கள் மத்தியில் அறிமுகம்
இருப்பினும் பீகாரின் 243 தொகுதிகளிலும் இக்கட்சி போட்டியிடும்போது கணக்கு வேறு மாதிரியாக இருக்கும். இக்கட்சி உயர் சாதியினர், நடுத்தர வர்க்கம் மற்றும் படித்த வாக்காளர்கள் மத்தியில் செல்வாக்குப் பெற்று வருகிறது என்பதை பத்திரிகையாளர்கள் கணித்திருக்கிறார்கள். பீகார் முழுவதும் 2,697 கிராமங்கள், 1,319 பஞ்சாயத்துகள் மற்றும் 235 தொகுதிகளில் பிரசாந்த் கிஷோர் 665 நாட்கள் யாத்திரை மேற்கொண்டிருக்கிறார். எனவே மக்கள் மத்தியில் கட்சிக்கு அறிமுகம் இருக்கிறது.
சி-வோட்டர் நிறுவனர் யஷ்வந்த் தேஷ்முக் இந்தியா டுடே டிவிக்கு அளித்த பேட்டியில், "பிரசாந்த் ஏற்கனவே பீகாரில் ஒரு மூன்றாவது சக்தியாக உருவெடுத்துள்ளார். அவர் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தாலும், இந்த வெளிப்படைத்தன்மையை உண்மையான வாக்குகளாக மாற்ற முடியுமா என்பதே முக்கியமான கேள்வி. எனக்கு சந்தேகங்கள் உள்ளன" என்று கூறியிருக்கிறார்.
கருத்துக்கணிப்பு என்ன சொல்கிறது?
கடந்த வாரம் வெளியிடப்பட்ட சி-வோட்டர் கருத்துக்கணிப்பு, அதிகபட்சம் விரும்பப்படும் முதல்வர் முகங்களில் பிரசாந்த் கிஷோருக்கு இரண்டாவது இடத்தில் (23.1%) இடைத்திருக்கிறது. அவர் ஆர்ஜேடி-யின் தேஜஸ்வி யாதவுக்கு (35.5%) அடுத்தபடியாகவும், தற்போதைய முதல்வர் மற்றும் ஜேடியு தலைவர் நிதிஷ் குமாருக்கு (23%) முன்னதாகவும், பிந்தையவரின் துணை சாம்ராட் சவுத்ரியை விடவும் வெகு முன்னதாகவும் இருந்தார். அதிகபட்சம் விரும்பப்படும் முதல்வர் முகமாக பிரசாந்த் கிஷோரின் செல்வாக்கு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பிப்ரவரியில் 15% ஆகவும், ஜூன் மாதத்தில் 18% ஆகவும் இருந்து, செப்டம்பரில் 23% ஆக இருந்தது. இருப்பினும் பீகார் மக்கள் அவருக்கும் ஜன் சுராஜுக்கும் வாக்களிப்பார்களா என்பது கேள்வியாக இருக்கிறது.
தொங்கு சட்டசபை
வோட் வைப் நடத்திய பீகார் தேர்தல் கருத்துக்கணிப்பில், 56% பேர் பிரசாந்தின் கட்சி வாக்குகளைப் பிரிக்கும் என்று கூறியிருக்கிறார்கள். இருப்பினும், மீதமுள்ள 44% பேரில், சுமார் 8.4% பேர் பிரசாந்த் முதல்வராக முடியும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் 15.8% பேர் நவம்பர் தேர்தல் ஒரு தொங்கு சட்டசபையை உருவாக்கினால் பிரசாந்த் கட்சி கிங்மேக்கராக செயல்படலாம் என்றும் கூறியுள்ளனர். மொத்தமாக பார்த்தால். பீகாரில் உள்ள வயதான வாக்காளர்கள் பிரசாந்த்தின் தலைமையிலான கட்சியைப் பற்றி மிகவும் சந்தேகம் கொண்டிருந்தனர். அதே நேரத்தில் இளைஞர்கள், பிரசாந்த் சிறப்பாக செயல்படுவதாக நம்பினர்.
கடந்த 2020 பீகார் சட்டப்பேரவைத் தேர்தல்களில் சிராக் பாஸ்வானின் எல்ஜேபி வாக்குப் பிளவுக் கட்சியாக செயல்பட்டது. இந்த முறை, அந்தப் பாத்திரத்தை பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் எடுத்துக் கொள்ளலாம் எனவும் அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.












Click it and Unblock the Notifications