பாஜகவின் 30 வருட அரசியல்.. வெறும் 30 நாளில் முடித்து காட்டிய பிரசாந்த் கிஷோர்! எப்படி நடந்தது?
பாட்னா: தேர்தல் வியூக வகுப்பாளராக இருந்த பிரசாந்த் கிஷோர், பங்கிபூர் சட்டமன்ற இடைத்தேர்தலில் பாஜகவை வீழ்த்தி வெற்றி பெற்றிருக்கிறார். கடந்த 30 ஆண்டுகளாக இந்த தொகுதியில் ஆதிக்கம் செலுத்தி வந்த பாஜகவை வெறும் 30 நாட்களில் இவர் வீழ்த்தியிருக்கிறார்.
ஜன் சூரஜ் கட்சியை பிரசாந்த் கிஷோர் தொடங்கிய பிறகு, அதில் கல்வியாளர்கள், முன்னாள் அரசு அதிகாரிகள் இப்படி மேல்தட்டு வர்கத்தை சேர்ந்த ஆட்கள்தான் அதிக அளவில் இணைந்தனர். மட்டுமல்லாது, பிரசாந்த் கிஷோர் பிராமணர் என்பதால் பீகார் மக்களிடையே இக்கட்சி பெரிய அளவுக்கு தெரியாமல் இருந்தது. இதன் காரணமாக கடந்த ஆண்டு பீகாரில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் இக்கட்சி பெரிய அளவுக்கு வெற்றிப்பெறவில்லை. வெறும் 3.47% வாக்குகளை பெற்று அனைத்து வேட்பாளர்களும் டெபாசிட் இழந்திருந்தனர்.

பாஜகவின் கோட்டை
இப்படி இருக்கையில் இன்று இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி பெற்றிருக்கிறார். பங்கிபூர் சட்டமன்ற தொகுதியில் கடந்த ஆண்டு நடந்த தேர்தலில் பாஜக சார்பில் வெற்றி பெற்றிருந்த நிதின் நபின், பின்னர் மாநிலங்களவை உறுப்பினராக தேர்வாகியிருந்தார். எனவே சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். எனவே இந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இப்படித்தான் பிரசாந்த் கிஷோர் களமிறங்கினார்.
வெற்றிக்கு காரணம் என்ன?
கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த தொகுதியை நிதின் நபின் குடும்பம்தான் ஆட்சி செய்து வந்தது. இந்த முறை பெரிய அளவுக்கு அறிமுகம் இல்லாத நீரஜ் குமார் சின்ஹாவை நிறுத்தியது பாஜகவுக்கு முதல் பின்னடைவாகும். அதேபோல ஜன் சூரஜ் கட்சியின் முந்தைய தோல்வி பிரசாந்த் கிஷோரை கடுமையாக பாதித்திருந்தது. எனவே நானே நேரடியாக களமிறங்கி வெற்றியை நிரூபிக்கிறேன் என்று விடாப்பிடியாக இறங்கியிருந்தார்.
தேர்தல் வியூகம்
பீகாரில் காலம் காலமாக நீடித்து வரும் சாதி, குடும்ப அரசியலுக்கு எதிராக வலுவாக பிரசாரத்தை கட்டமைத்திருந்த பிரசாந்த் கிஷோர்.. வேலையின"மை, புலம் பெயர்தல், கல்வி உள்ளிட்ட விஷயங்கள் குறித்தும் தீவிரமாக பேசினார். இதெல்லாம் அவர் இன்று, நேற்று பேசவில்லை. கடந்த 4 ஆண்டுகளாக பீகார் முழுவதும் அவர் நடத்தி வரும் பாத யாத்திரை.. ஏற்கெனவே மக்கள் மத்தியில் இவருக்கான செல்வாக்கை விதைத்திருந்தது. இந்த விதைகள் மூலம் கிடைத்த விளைச்சலைதான் இன்று அவர் அறுவடை செய்திருக்கிறார்.
ஆளும் கட்சியின் பலம், போலீசின் கெடுபிடி ஆகியவற்றை தாண்டி, தனது கட்சியினரை சோர்ந்து போகாமல் தேர்தல் வேலையை செய்ய வைத்ததால்தான் இந்த வெற்றி கிடைத்திருக்கிறது.
வாக்கு வங்கி
இதில் குறிப்பிட வேண்டிய விஷயம் என்னவெனில் பீகாரில் ஆதிக்கம் செலுத்தும் யாதவர்கள் வாக்குகளை, ஆர்ஜேடி பக்கம் போகவிடாமல் பிரசாந்த் கிஷோர் தன் பக்கம் வளைத்திருக்கிறார் என்பதுதான். இந்த இடைத்தேர்தலில் மக்கள் பெரிய அளவுக்கு ஆர்வம் காட்டவில்லை. வெறும் 34.30% வாக்காளர்கள் மட்டுமே ஒட்டு போட்டனர். இந்த தொகுதி பாஜக கோட்டை என்று நினைத்து.. பாஜகவினர் பெரிய அளவுக்கு வாக்குச்சாவடிக்கு வராததும் அக்கட்சியின் தோல்விக்கு காரணமாக சொல்லப்படுகிறது.
தேர்தல் முடிவுகள்
கடந்த ஜூன் 30ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்ற நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. மொத்தம் 32 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் பாஜக வேட்பாளரைவிட 19,000க்கும் அதிகமான வாக்குகள் பெற்று பிரசாந்த் கிஷோர் வெற்றி பெற்றிருக்கிறார்.


Click it and Unblock the Notifications
