ஓவைசிக்கு செக்.. முஸ்லிம் வாக்குகளை சிதறாமல் காய் நகர்த்தும் தேஜஸ்வி! சூடுபிடிக்கும் பீகார் தேர்தல்
பாட்னா: பீகார் தேர்தலில் முஸ்லிம் வாக்குகள் மிக முக்கியமானவை. மொத்த வாக்குகளில் முஸ்லிம் வாக்குகளின் சதவிகிதம் 17.7% ஆகும். இந்த வாக்குகளை சிந்தாமல் சிதறாமல் பெறும் கட்சிக்கு வெற்றி நிச்சயம். ஆனால் ஓவைசி தனித்து போட்டியிடுவதால் வாக்குகள் சிதறும் சூழல் இருந்தது. இந்நிலையில் தேஜஸ்வி யாதவின் நகர்வு பீகாரில் முஸ்லிம் வாக்காளர்களிடையே கவனத்தை பெற்றிருக்கிறது.
அதாவது நான் ஆட்சி அதிகாரத்திற்கு வந்தால், மத்திய அரசு கொண்டு வந்த வக்பு சட்டத்திருத்தத்தை குப்பை தொட்டியில் வீசி எறிவேன் என்று வாக்குறுதி கொடுத்திருக்கிறார்.

எதிர்க்கட்சிகள் அனைத்தும் சேர்ந்து வக்பு சட்டத் திருத்த மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தன. ஆனாலும் இந்த மசோதா நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு நிறைவேற்றப்பட்டு சட்டமாக்கப்பட்டிருக்கிறது. சட்டமாக்கப்பட்டாலும் கூட சில மாநில அரசுகள் இந்த சட்டத்தை அமல்படுத்த தயக்கம் காட்டி வருகின்றன. இந்நிலையில், நான் முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டால், இந்த சட்டம் தூக்கி குப்பையில் வீசுவேன் என்று இந்தியா கூட்டணியின் முதல்வர் வேட்பாளரான தேஜஸ்வி யாதவ் கூறியிருக்கிறார்.
முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் கதிஹார் மற்றும் கிசான்கஞ்ச் ஆகிய பகுதிகளில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் இந்த வாக்குறுதியை தேஜஸ்வி யாதவ் கொடுத்திருக்கிறார். பொதுக்கூட்டத்தில் மேலும் பேசிய தேஜஸ்வி, லாலு பிரசாத் சிறுபான்மையினருக்காக எவ்வாறு உறுதியாக நின்றார் என்பதையும் தேஜஸ்வி நினைவுகூர்ந்தார். தற்போது முதலமைச்சராக இருக்கும் நிதீஷ் குமார், பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ்-க்கு சப்போர்ட் செய்து மாநிலம் முழுவதும் வகுப்புவாத வெறுப்பை பரப்ப உதவுவதாக அவர் குற்றம் சாட்டினார்.
முஸ்லிம்களை ஊடுருவல்காரர்கள் என்று சொன்னவர்கள், அவர்களின் வாக்குகள் தேவையில்லை என்று கூறியவர்கள், துணை முதல்வர் வேட்பளராக ஏன் முஸ்லிம் மதத்தை சேர்ந்தவர்களை அறிவிக்கவில்லை என்று கேள்வி எழுப்பியிருக்கிறார். நாங்கள் முகேஷ் சஹானியை துணை முதல்வராக அறிவிக்க இருக்கிறோம். அவர் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர். பீகாரில் 36% அளவுக்கு இந்த சமூகத்தினர் இருக்கின்றனர். அந்த வகையில் எங்களின் தேர்வு சரியானதே. ஆனால் பாஜக எழுப்பும் கேள்வி முரண்பாடாக இருக்கிறது.
இருப்பினும் அவர்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும். காலம் வரும்போது, அதுவும் நடக்கும் என்று தெரிவித்த தேஜஸ்வி, இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் இரண்டு துணை முதல்வர்கள் நியமிக்கப்படலாம் என்பதற்கான வலுவான அறிகுறிகளை வெளிப்படுத்தினார்.
தேஜஸ்வியின் இந்த அறிவிப்பு பீகார் அரசியல் தளத்தில் புதிய அதிர்வுகளை ஏற்படுத்தியிருக்கிறது. குறிப்பாக முஸ்லிம் வாக்கு வங்கியை சிதற விடாமல், கூட்டணியின் வெற்றிக்கான வாய்ப்புகளை தேஜஸ்வி அதிகரித்திருக்கிறார். முஸ்லிம் வாக்குகளை பிரிக்கவே ஓவைசி பீகார் தேர்தலில் போட்டியிடுவதாக பேசப்பட்டது. இப்படி இருக்கையில் தேஜஸ்வியின் அறிவிப்பு ஓவைசி தரப்புக்கு செக்-ஆக பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications