விஜய் உடன் போனால்.. துணை முதல்வர் + அமைச்சர் பதவி.. காங்கிரசில் துண்டு விரிக்கும் டாப் தலைகள்?
பாட்னா: பீகார் சட்டசபை தேர்தல் முடிவுகள் காரணமாக தமிழ்நாட்டில் திமுகவிடம் அதிக இடங்களை கேட்க முடியாத நிலைக்கு காங்கிரஸ் தள்ளப்பட்டு உள்ளதாம். இதன் காரணமாகவே திமுகவை கைவிட்டுவிட்டு தவெக பக்கம் போகலாம் என்று காங்கிரசில் ஒரு தரப்பினர் வாதங்களை வைக்கிறார்களாம்.
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், காங்கிரஸ் கட்சி திமுகவிடம் 50க்கும் மேற்பட்ட தொகுதிகளைக் கேட்க திட்டமிட்டுள்ளது. இப்படிப்பட்ட நிலையில்தான் பீகார் தேர்தல் முடிவுகள் காங்கிரசுக்கு மிகப்பெரிய சவுக்கடியாக உருவெடுத்து உள்ளது.

காங்கிரசுக்கு சவுக்கடி
பீகார் தேர்தலில் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் - பாஜக கூட்டணி (NDA) பெரும் வெற்றியை பதிவு செய்துள்ளது. பீகாரில் பாஜக - ஜேடியூ கூட்டணி 202 இடங்களில் வெற்றியை பெற்று உள்ளது. பாஜக 89 இடங்களிலும் , ஜேடியு 85 இடங்களிலும் வென்றுள்ளது.
பீகாரில் காங்கிரஸ் கட்சி மிக மோசமான தோல்வியை பதிவு செய்துள்ளது. அங்கு 61 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ், வெறும் 6 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. கூட்டணி கட்சியான ராஷ்டிரிய ஜனதா தளம் 25 இடங்களில் வெற்றி பெற்றது. இந்த கூட்டணி 35 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றது.
காங்கிரஸின் இந்த பலவீனமான செயல்பாடு அதன் கூட்டணிக் கட்சியான ஆர்ஜேடியின் வெற்றி வாய்ப்புகளையும் பாதித்துள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். காங்கிரஸின் குறைந்த வெற்றி விகிதம் கூட்டணியின் ஒட்டுமொத்த செயல்பாட்டைக் குறைத்துவிட்டதாக ஆர்ஜேடி தலைவர்கள் பலர் கருதுகின்றனர். இந்தச் சூழ்நிலையில், காங்கிரஸின் 50க்கும் மேற்பட்ட தொகுதிகள் கோரிக்கையைத் தமிழ்நாடு திமுக தலைமை ஏற்க மறுக்கலாம்.
காங்கிரஸ் மோசம்
காங்கிரசின் இந்த செயல்பாடு காரணமாக மற்ற மாநிலங்களில் கூட்டணி கட்சிகளிடம் அதிக இடங்களை கேட்க முடியாத நிலை அந்த கட்சிக்கு ஏற்பட்டு உள்ளது. முக்கியமாக பீகார் சட்டசபை தேர்தல் முடிவுகள் காரணமாக தமிழ்நாட்டில் திமுகவிடம் அதிக இடங்களை கேட்க முடியாத நிலைக்கு காங்கிரஸ் தள்ளப்பட்டு உள்ளதாம். இதன் காரணமாகவே திமுகவை கைவிட்டுவிட்டு தவெக பக்கம் போகலாம் என்று காங்கிரசில் ஒரு தரப்பினர் வாதங்களை வைக்கிறார்களாம்.
திமுகவிடம் கேட்டால் அதிக இடங்கள் கிடைக்காது. அதுவே விஜயிடம் கேட்டால் அமைச்சரவையில் சீட் தொடங்கி துணை முதல்வர் பதவி வர பெறலாம் என்று.. காங்கிரசின் டாப் தலைகள் சிலர் ஐடியா கொடுக்கிறார்களாம்.
காங்கிரஸின் தற்போதைய தேர்தல் பலம், உட்கட்சி பூசல், காங்கிரசுக்கு அடிமட்ட பலம் இல்லாதது, மக்கள் மத்தியில் பெரிய ஆதரவு இல்லாதது ஆகிய காரணங்களால் இவ்வளவு அதிக இடங்களுக்கு காங்கிரஸ் தகுதி இல்லை என்று திமுக தலைவர்கள் உணர்கிறார்கள். காங்கிரஸ் தனது அடித்தள பலத்தை மேம்படுத்திய பின்னரே அதிக இடங்களைக் கேட்க வேண்டும் என்று கூறி, கடந்த தேர்தலைப் போலவே குறைவான இடங்களை வழங்க அவர்கள் முன்வரலாம் என்று சில காங்கிரஸ் தலைகள் கருதுகிறார்களாம்.
விஜயை வைத்து பிளான்
இல்லையென்றால் 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, காங்கிரஸ் கட்சி, அதன் கூட்டணிக் கட்சியான திமுகவிடம் அதிக இடங்களைப் பெற முயற்சிப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழக கட்சியுடன் கூட்டணி குறித்த தகவல்களைப் பரப்புவது போன்ற வியூகங்களை பயன்படுத்தி, திமுகவிடம் அதிக இடங்களை கேட்கலாம் என்று காங்கிரஸ் திட்டமிடுவதாக கூறப்படுகிறது.
கடந்த சில நாட்களாக, காங்கிரஸ் மற்றும் TVK இடையே கூட்டணி அமையலாம் என சமூக வலைத்தளங்களிலும், சில அரசியல் விமர்சகர்கள் மூலமாகவும் செய்திகள் பரவி வருகின்றன. காங்கிரஸ் - விஜய் பேசி வருகின்றனர்.. விஜய் ராகுல் காந்தியை சந்திக்க போகிறார்.. விரைவில் பேச்சுவார்த்தை நடக்க போகிறது.. என்றெல்லாம் செய்திகள் வருகின்றன, கடந்த 24 மணி நேரமாக விஜய் - காங்கிரஸ் கட்சி உடன் ஆலோசனை செய்ததாக பல செய்திகள் வந்தன. காங்கிரஸ் கட்சி திமுகவிடம் அதிக இடங்களை கேட்க வேண்டும் என்று இந்த செய்தியை பரப்பிவிட்டதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications