முதல் தலைமுறையாக அமீரகம் பயணித்த வி.களத்தூர் மூத்தோருடன், துபாய் ஈமான் சங்க அமைப்பாளர் சந்திப்பு!
பெரம்பலூர்: 1970 காலகட்டத்தில் அமீரகம் பயணித்த பெரம்பலூர் மாவட்டம் வி.களத்தூர் முதல் தலைமுறை மூத்தோருடன் துபாய் ஈமான் சங்க அமைப்பாளர் ஜனாப் முஹம்மது ஜலீல் சந்திப்பு நடத்தியுள்ளார்.
வி.களத்தூர் ஊடகவியலாளர் கமால் பாஷா இல்லத்தில், அமீரகத்தில் தொடக்கக் காலத்தில் பணியாற்றிய மூத்தோர் சந்திப்புக் கூட்டம் கடந்த ஆகஸ்ட் 22 ஆம் தேதி மாலை நடைபெற்றது. 1969, 70, 71 காலகட்டத்தில் அமீரகத்தில் ஒத்துழைப்பு வழங்கிய வி.களத்தூர் முதல் தலைமுறை மூத்தோருடன் துபாய் ஈமான் சங்கம் அமைப்பாளர் ஜனாப் முஹம்மது ஜலீல் சந்திப்பு மேற்கொண்டார்.

தற்போது சிறப்பாக நடைபெற்று வரும் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி முதன் முறையாக துபாய் வி.களத்தூர் ஜமாஅத்தினரின் அறையிலிருந்து துவக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து இந்தக் கூட்டத்தில் நினைவுகள் பகிர்ந்துகொள்ளப்பட்டன.
அமீரகத்தில் தொடக்கக் காலத்தில் தமிழ்நாட்டு முஸ்லிம்கள் புலம்பெயர்ந்தது குறித்தும், அப்போது இருந்த சிரமங்களைக் களைவதற்கு எடுத்த முயற்சிகள் குறித்தும் இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டன.
இந்தச் சந்திப்பின்போது துபாய் ஈமான் சங்கம் புலம்பெயர்ந்து வந்தோருக்கு விசா, பாஸ்போர்ட் எடுப்பதற்கு உதவியது குறித்தும், தற்போது வரை வி.களத்தூர் மக்களின் அமீரகத் தொடர்பு குறித்தும் விரிவாகப் பேசப்பட்டது. இன்றைய சமுதாய முன்னேற்றத்தில் மூத்தோரின் பங்களிப்பு ஆவணப்படுத்தப்பட வேண்டிய ஒன்று என்பது இந்தக் கூட்டத்தின் வாயிலாக வெளிப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு முஸ்லீம் தொண்டு இயக்கப் பொதுச்செயலாளர் பேராசிரியர் சேமுமு. முகமதலி, மதுரை சேது பொறியியல் கல்லூரித் தாளாளர் அல்ஹாஜ் முஹம்மது ஜலீல், துபாய் சங்க முன்னாள் தலைவர் முகமது ஜக்கரியா, அப்துல் ரஹீம், வி.களத்தூர் ஜமாஅத் தலைவர் ஹயாத் பாஷா, துணைத் தலைவர் அப்துல் ரஹீம், பஷீர் அகமது, அரும்பாவூர் இ. தாஹிர்பாட்சா, ஃபர்வேஸ் அகமது, கமால் பாஷா, முஹம்மது ரஃபீக், சபியுல்லா லியாகத் அலி, சகாபுத்தீன், எம்.இ.கமல் பாஷா, பக்கீர் முஹம்மது ஆகியோர் கலந்து கொண்டனர்.


Click it and Unblock the Notifications
