பெரம்பலூர் சாலையோர வியாபாரிகளுக்கு ரூ.15,000 கடன்.. நகராட்சி முக்கிய அறிவிப்பு.. என்ன தெரியுமா?
பெரம்பலூர்: பெரம்பலூர் நகராட்சி எல்லைக்குட்பட்ட சாலையோர வியாபாரிகளுக்கு ரூ.15,000 வங்கி கடன் பெற விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. நகராட்சி அலுவலகத்தில் நடைபெறும் இந்த கடன் முகாம் எப்போது நடைபெறுகிறது, இதற்கு விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள் என்னென்ன என்பது குறித்து முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.
சாலையோர வியாபாரிகளுக்கு தங்கள் சிறு தொழிலை தொடர்ந்து நடத்தவும், தேவையான பொருட்களை வாங்கவும் மத்திய அரசின் PM SVANidhi திட்டத்தின் கீழ் வங்கிகள் மூலம் கடன் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் முதல் கட்டமாக ரூ.15 ஆயிரம் வரை கடன் பெற முடியும். இந்தத் தொகை மானியம் கிடையாது; வங்கியில் இருந்து பெறப்படும் கடன் என்பதால், அதை விதிமுறைகளின்படி திருப்பிச் செலுத்த வேண்டும்.

சாலையோர வியாபாரிகளுக்கு கடன்
சிறு தொழிலுக்கு உடனடி முதலீடு ரூ.15,000 கிடைப்பதால், இதன் மூலம் காய்கறி, உணவு, பூ, பழம் போன்ற வியாபாரத்துக்குத் தேவையான பொருட்களை வாங்கி தொழிலை விரிவுபடுத்தலாம்... இதனால் தினசரி வசூல் செய்யும் தனியார் கடன்கள் அல்லது அதிக வட்டி கடன்களை நம்ப வேண்டிய அவசியம் குறையும்.
குறிப்பிட்ட காலத்துக்குள் கடனை முறையாக திருப்பிச் செலுத்தும் வியாபாரிகள் அடுத்தடுத்த கட்டங்களில் அதிக தொகை கடன் பெறுவதற்கும் தகுதி பெறலாம்... அதாவது கடனை முறையாக திருப்பிச் செலுத்தினால் அடுத்த கட்டத்தில் ரூ.25,000, பின்னர் ரூ.50,000 வரை அதிக கடன் பெறும் வாய்ப்பு கிடைக்கும்... முக்கியமாக திட்டத்தின் கீழ் டிஜிட்டல் பரிவர்த்தனைகளை மேற்கொள்வோருக்கு ஊக்கத்தொகை போன்ற கூடுதல் பலன்களும் கிடைக்கலாம்.
இந்தத் திட்டத்தில் நகராட்சி நேரடியாக சாலையோர வியாபாரிகளின் கையில் பணத்தை வழங்குவதில்லை. மாறாக, நகராட்சி அலுவலகத்தில் கடன் முகாம்கள் நடத்தப்பட்டு, தகுதியான வியாபாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன.
நகராட்சி நிர்வாகம்
தேவையான ஆவணங்கள், அடையாள விவரங்கள் உள்ளிட்டவற்றை சரிபார்த்து, வங்கிகள் மூலம் கடன் கிடைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால் வங்கிக் கடன் பெற முடியாமல் தவிக்கும் சாலையோர வியாபாரிகளுக்கு இதுபோன்ற முகாம்கள் பயனுள்ளதாக இருக்கும்.
அந்தவகையில், பெரம்பலூர் நகராட்சி அலுவலகத்தில் சாலையோர வியாபாரிகளுக்கான வங்கி கடன் வழங்கும் முகாம் நடைபெற்று வருகிறது. பெரம்பலூர் நகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் சாலையோர வியாபாரிகள் இந்த முகாமில் கலந்துகொண்டு கடனுக்கு விண்ணப்பிக்கலாம். இந்த முகாம் வரும் 30-ம் தேதி வரை நடைபெறுகிறது.
ரூ.15 ஆயிரம் வங்கி கடன் பெற விண்ணப்பங்கள்
இதில் சாலையோர வியாபாரிகள் ரூ.15 ஆயிரம் வங்கி கடன் பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம். ஏற்கனவே வங்கி கடனுக்காக விண்ணப்பித்தும் இதுவரை கடன் கிடைக்காத வியாபாரிகளுக்கும் இந்த முகாம் முக்கியமான வாய்ப்பாக அமைந்துள்ளது.
அத்தகைய வியாபாரிகள் தங்களிடம் உள்ள அடையாள அட்டை, ஆதார் அட்டை மற்றும் வங்கி கணக்கு புத்தகம் உள்ளிட்ட தேவையான ஆவணங்களுடன் பெரம்பலூர் நகராட்சி அலுவலகத்தில் நடைபெறும் முகாமில் கலந்து கொண்டு விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து பெரம்பலூர் நகராட்சி ஆணையர் லீனாசைமன், தகுதியுள்ள சாலையோர வியாபாரிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
சிறு கடைகள், தள்ளுவண்டி கடைகள் உள்ளிட்டவற்றை நடத்தும் சாலையோர வியாபாரிகளுக்கு தொழிலை தொடர்ந்து நடத்துவதற்கு தேவையான பணப்புழக்கத்தை ஏற்படுத்த இந்தக் கடன் உதவியாக இருக்கக்கூடும். ஏற்கனவே விண்ணப்பித்தும் கடன் கிடைக்காதவர்கள் ஆவணங்களுடன் முகாமில் கலந்து கொண்டு மீண்டும் தங்கள் விண்ணப்பம் தொடர்பாக நடவடிக்கை மேற்கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications
