அரசியல் Weekend Trip இல்ல.. Full Time Job ப்ரோ! விஜய்க்கு எதிராக முளைத்த போஸ்டர்கள்! பரபர பெரம்பலூர்
பெரம்பலூர்: திருச்சி, அரியலூரில் பிரசாரத்தை முடிக்க தாமதமானதால் பெரம்பலூரில் நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜயின் பிரச்சாரம் ரத்து செய்யப்பட்டது. இதனால் ஆயிரக்கணக்கானோர் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர். இந்த நிலையில் பெரம்பலூரில் பல்வேறு பகுதிகளில் விஜயைக் கண்டித்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அதில் பிரசாரத்துக்கு வந்தீர்களா? அல்லது வார விடுமுறையைக் கழிக்க வந்தீர்களா? எனக் கேள்வி எழுப்பி உள்ளனர்.
நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரான விஜய் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் பிரச்சாரம் மேற்கொள்ளத் திட்டமிட்டு இருக்கிறார். அந்த வகையில் செப்டம்பர் 13-ஆம் தேதியான நேற்று தனது பிரச்சாரப் பயணத்தைத் திருச்சியிலிருந்து தொடங்கினார்.
இதற்காக சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சி வந்த அவர் திருச்சியில் பிரச்சாரத்தை முடித்துவிட்டு அரியலூர், பெரம்பலூரில் பிரச்சாரம் செய்வதாக இருந்தது. ஆனால் திருச்சி விமான நிலையத்திலிருந்து திருச்சி நகருக்குள் செல்லவே 5 மணி நேரத்திற்கு மேலானது.

விஜய் பிரச்சாரம்
காலை 10 மணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரச்சாரம் இரண்டு மணிக்குத்தான் தொடங்கியது. தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விஜய் பேசியது யாருக்கும் கேட்கவில்லை. தொடர்ந்து அரியலூர் செல்வதற்கு இரவு எட்டு மணிக்கு மேல் ஆகிவிட்டது. அதனைத் தொடர்ந்து பெரம்பலூரில் பிரச்சாரம் மேற்கொள்ள வருவதாக இருந்த நிலையில், அப்பகுதியில் ஆயிரக்கணக்கானோர் குழுமி இருந்தனர். ஆனால், திருச்சி, அரியலூரில் பிரச்சாரம் மிகத் தாமதமானதால், பல்வேறு இடங்களுக்குச் சென்று தாமதமாக நள்ளிரவு 12 மணிக்கு மேல் தான் பெரம்பலூர் நான்கு ரோடு பாலக்கரைப் பகுதிக்கு விஜய் வந்தார்.
தமிழக வெற்றிக் கழகம்
வழியில் பொதுமக்களின் கூட்டத்தைப் பார்த்த விஜய், பிரச்சாரத்துக்கு அனுமதி பெறப்பட்டிருந்த இடத்திற்கு வராமல் பாலக்கரை பகுதியில் இருந்து நிகழ்ச்சியை ரத்து செய்துவிட்டு திரும்பிச் சென்றார். இதனால் பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் வானொலி திடல் பகுதியில் கூடியிருந்த பொதுமக்கள், பெண்கள், கட்சித் தொண்டர்கள், சிறுவர்கள், குழந்தைகள் என சுமார் ஐயாயிரத்துக்கும் மேற்பட்டோர் ஏமாற்றம் அடைந்து, வேதனையடைந்து அங்கிருந்து சென்றனர்.

பிரச்சாரம் ரத்து
நள்ளிரவு ஒரு மணி வரை காத்திருந்து ஏமாற்றம் அடைந்து சென்ற நிலையில் இன்று அதிகாலை நகரின் பல்வேறு பகுதிகளில் விஜய்யைக் கண்டித்துப் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன."Bro.. Idhu Political Yatra va.. ila unga weekend getaway ah.. Bro.. Arasiyal weekend trip illai.. Full time job Bro!" (சகோ.. இது அரசியல் யாத்திரையா.. இல்லை உங்க வார விடுமுறையா? சகோ.. அரசியல் வார இறுதிப் பயணம் இல்லை.. முழு நேர வேலை சகோ!) என ஆங்கிலத்தில், கருப்பு வண்ண நிறத்தில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விஜய் ரசிகர்கள்
பெரம்பலூர் நான்கு ரோடு, புதிய பேருந்து நிலையம், பாலக்கரை, துறைமங்கலம், பழைய பேருந்து நிலையம் ஆகிய பொது இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. மேலும் விஜய் நிகழ்ச்சி ரத்து செய்த நிலையில், இந்தப் போஸ்டர்களை ஒட்டிச் சென்றது, நள்ளிரவு வெகு நேரம் காத்திருந்து விரக்தியில் சென்ற கட்சித் தொண்டர்களா? ரசிகர்களா? இல்லை வேறு ஏதேனும் அரசியல் கட்சி எதிர்ப்பாளர்களா? யார் இந்தப் போஸ்டரை பெரம்பலூர் நகர் முழுவதும் ஒட்டிய மர்ம நபர்கள் என்பது குறித்து பொதுமக்களிடையே சந்தேகம் எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications