வரணும்.. ரஜினி வரணும்.. உடனே வரணும்.. இப்ப இதுதான் தேவை.. பிரவீன் காந்த்
சென்னை: தமிழகத்திற்கு தற்போதைய தேவை ஆன்மிக அரசியல்தான். ரஜினிகாந்த் உடனடியாக அரசியலுக்கு வர வேண்டும் என்று ரஜினிகாந்த் ஆதரவாளரான இயக்குநர் பிரவீன் காந்த் கூறியுள்ளார்.
ரஜினி எப்போது அரசியலுக்கு வருவார் என்று தெரியவில்லை. சட்டசபைக்கு தேர்தல் வரும்போது வந்து விடுவேன் என்று அவர் கூறியுள்ளார். ஆனால் அவரது ஆலோசகர்களில் ஒருவரான தமிழருவி மணியனோ, அதிமுக ஆட்சி முடிவுக்கு வந்ததும் ரஜினி வருவார் எனக் கூறியுள்ளார்.

இந்த நிலையில் ரஜினி ஆதரவாளராக வலம் வரும் இயக்குநர் பிரவீன் காந்த் நமக்கு ஒரு பேட்டி அளித்துள்ளார். அதன் விவரம்:
கேள்வி: ரஜினிகாந்த் எதற்காக அரசியலுக்கு வர வேண்டும்? நீங்கள் ஏன் அவர் அரசியலுக்கு வருவதை விரும்புகிறீர்கள்?
பதில்: தமிழகத்திற்கு ஆன்மிக அரசியல் தேவைப்படுகிறது. அதற்காக ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டும் என விரும்புகிறேன். ஆன்மிக அரசியலை அவர் முன்னெடுத்துள்ளதால் அதன் மூலம் மக்களுக்கு நல்லது நடக்கும்.
கேள்வி: அதிமுகவுக்கு ரஜினி தலைமையேற்க வேண்டும் என நீங்கள் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதே...
பதில்: செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் விவாத நிகழ்ச்சியில் பங்கேற்றபோது அமைச்சர் ராஜேந்திரபாலாஜியின் பேச்சை மேற்கோள் காட்டி கேள்வி கேட்கப்பட்டது. அப்போது அதிமுகவுக்கு ரஜினி தலைமையேற்றால் கூட அதில் தவறேதும் இல்லை என்றும், அதிமுக ஒன்றும் தவறான கட்சி கிடையாது எனவும் தெரிவித்தேன். இது எனது தனிப்பட்ட கருத்தே தவிர மற்றப்படி இதில் ஒன்றுமில்லை.
கேள்வி: ரஜினி தனிக்கட்சி தொடங்கினால், ஆட்சியை பிடிக்க முடியுமா என்ற அச்சத்தின் வெளிப்பாடா உங்கள் கருத்து?
பதில்: ரஜினி கட்சி தொடங்கி தேர்தலில் போட்டியிட்டால் 234 தொகுதிகளிலும் வெற்றி பெற்று ஆட்சியை பிடிப்பது உறுதி. மக்களை வசீகரிக்கும் தலைவராக அவர் திகழ்கிறார்.
கேள்வி: அதிமுகவில் இப்போது உள்ள தலைமைக்கு என்ன குறை?
பதில்: முதல்வர் எடப்பாடி பழனிசாமியையும், துணை முதல்வர் ஓ.பி.எஸ்.சையும் மக்கள் நேரடியாக தேர்ந்தெடுக்கவில்லை. அம்மா மறைவுக்கு பிறகு சூழ்நிலையால் பொறுப்புக்கு வந்தவர்கள். அதனால் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா அளவுக்கு இவர்கள் இருவருக்கும் அதிமுகவில் நட்சத்திர அந்தஸ்து இல்லை. மேலும், எம்.ஜி.ஆர்.,அம்மா, கலைஞர் அளவுக்கு ஓ.பி.எஸ்.சும், இ.பி.எஸ்.சும்.மாஸ் லீடர்கள் கிடையாது என்றார் பிரவீன் காந்த்.












Click it and Unblock the Notifications