திடீரென மனைவி மரணம்.. இறந்ததை மறைத்து மகள் திருமணத்தை நடத்திய தந்தை.. புதுச்சேரியில் உருக்கம்
புதுச்சேரி: புதுச்சேரி வில்லியனுாரில் திருமணத்திற்கு முதல் நாள் மனைவி உடல் நலக்குறைவால் இறந்த நிலையில், மனைவி இறந்ததை மறைத்து மகள் திருமணத்தை தந்தை திட்டமிட்டபடி நடத்தி இருக்கிறார். இந்தசம்பவம் புதுச்சேரியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திருமணம் என்பது வாழ்வில் ஒருமுறை தான். அதனை அம்மா, அப்பா, நண்பர்கள், உறவினர்கள் சூழ வாழ்த்து பெற்று மகிழ்வோடு செய்ய வேண்டிய நிகழ்வு. இந்த அற்புதமான நாள் ஒவ்வொரு ஆணுக்கும் பெண்ணுக்கும் வாழ்நாள் முழுவதும் நினைவுகளாக இருக்கும். மகன் அல்லது மகளின் திருமண நாள் என்பது பெற்றோருக்கும் பெரும் கனவு நாளாக இருக்கும்.

அப்படியான இனிமையான நாளில் தாயை மணப்பெண் பறிகொடுத்தால் எப்படி இருக்கும்? அப்படி ஒரு துயரமான சம்பவம் புதுச்சேரி வில்லியனூரில் நடந்துள்ளது. இந்நிலையில் தன் மனைவி இறந்ததை மறைத்து மகளுக்கு திருமணத்தை நடத்தி உள்ளார் தந்தை.. என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.
புதுச்சேரி வில்லியனுார் அடுத்த ஏம்பலம் பாலமுருகன் நகரைச் சேர்ந்தவர் தண்டபாணி. இவர் கூலித்தொழிலாளியாவர். இவரது மனைவி அரசம்மாளுக்கு 50 வயது ஆகிறது. இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். முதல் மகளுக்கு திருமணம் முடிந்துவிட்டது. இரண்டாவது மகளுக்கு திருமணம் செய்ய தண்டபாணி ஏற்பாடு செய்திருந்தார்.
நல்லாத்துாரில் நேற்று (ஞாயிறு) தண்டபாணி தனது மகளுக்கு திருமணம் செய்ய முடிவு செய்திருந்தார்கள். திருமணத்திற்கான ஏற்பாடுகள் விரிவாக செய்யப்பட்டிருந்தன. சனிக்கிழமை காலை மணமகளுக்கு சடங்கு செய்வதற்காக வீட்டின் அருகே உள்ள உறவினர்களை அழைக்க அரசம்மாள் நடந்து சென்றிருக்கிறார்
அப்போது அவர் மயங்கி விழுந்து இறந்தார். அரசம்மாள் உடல் கதிர்காமம் அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. திருமணம் தடைபடக்கூடாது என்பதற்காக மனைவி உடலை பிரேத பரிசோதனை செய்யாமல் மருத்துவமனையிலேயே வைத்திருக்க தண்டபாணி கேட்டுக் கொண்டார்.
மனைவி இறந்ததை உறவினர்களுக்கு கூட தெரியப்படுத்தாமல் திட்டமிட்டபடி திருமணத்தை நேற்று தண்டபாணி நடத்தி முடித்தார். இன்று அரசம்மாள் உடல் பிரேத பரிசோதனை செய்து ஒப்டைக்கப்படுகிறது. வீட்டில் மகள் திருமணத்திற்காக அமைத்த பந்தலிலேயே மனைவிக்கு இறுதி சடங்கினை தண்டபாணி செய்கிறார்.இந்த சம்பவம் புதுச்சேரி வில்லியனூரில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications