புதுச்சேரி கல்யாண வீட்டில் நடந்த கூத்து.. தாய்மாமன் தந்த விளக்கம்.. பாஜக கடும் கண்டனம்
புதுச்சேரி: புதுச்சேரியில் கல்யாண வீட்டில், தாம்பூல பைகளில் மதுபானமும் சேர்த்து அளித்தது ஏன் என்பது குறித்து மணப்பெண்ணின் தாய்மாமா விளக்கம் அளித்துள்ளார். இந்நிலையில் இது அநாகரீகத்தின் உச்ச கட்டம், கலாச்சார சீர்கேடு என்று தமிழக பாஜக மாநில துணை தலைவர் நாராயணன் திருப்பதி கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னையை சேர்ந்த மணமகன் நிர்மலுக்கும், புதுவை வாணரப்பேட்டையை சேர்ந்த மணமகள் ஆரதிக்கும் கடந்த மாதம் திருமணம் நடைபெற்றது. மணப்பெண்ணின் சொந்த ஊரான புதுவையில் திருமண வரவேற்பு நிகழ்வு மே 28ம் தேதி இரவு நடைபெற்றது.

திருமண வரவேற்புக்கு நண்பர்கள், உறவினர்கள் என ஏராளமானோர் வந்து மணமக்களை வாழ்த்தினார்கள். பொதுவாகவாழ்த்த வந்த உறவினர்கள், நண்பர்களுக்கு வயிறார சாப்பாடு போட்டு, கையில் தாம்பூலம் கொடுப்பது வழக்கம். புதுச்சேரியில் பெண் சற்று வித்தியாசமாக தாம்பூலத்துடன் ஒருகட்டிங் பாட்டிலையும் இலவச இணைப்பாக கேட்டுக்கேட்டு கொடுத்தனுப்பினார்கள்.
இதை பார்த்த நெட்டிசன்கள் வீடியோ எடுத்து இணையத்தில் வெளியிடஅது தற்போது பெரிய அளவில் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே புதுச்சேரிக்கு வார இறுதி ஆனாளே சென்னையில் இருந்து ஒரு பெரும்படையே குடிப்பதற்காக கிளம்புவது உண்டு. பாண்டிச்சேரியில் மது மிகவும் பேமஸ் என்பதுடன், விலையும் குறைவு என்பது தமிழ்நாட்டு மதுபிரியர்கள் பாண்டிச்சேரிக்கு அடிக்கடி சென்று வருகிறார்கள்.
இந்த சூழலில் தான் திருமண வீட்டில் மதுபானம் தாம்பூலத்துடன் இணைத்து தரப்பட்டிருக்கும் சம்பவம் நடந்துள்ளது. ஏற்கனவே திருமண வீடுகளில் மதுபான பார்டி கலாச்சாரம் அதிக அளவில் தலைதூக்கி உள்ள நிலையில், இதுபோன்று மதுவை தாம்பூலத்துடன் தருவதற்கு எதிர்ப்புகள் எழுந்துள்ளது. அதேநேரம் மணவீட்டார் இன்ப அதிர்ச்சி அளித்ததை குடிமகன்கள் கொண்டாடவும் செய்தார்கள்.

இது சர்ச்சையான நிலையில் பெண்ணின் தாய்மாமா கூறுகையில், "உறவினர்களும், சென்னையில் இருந்து வந்தோரும் விளையாட்டாக மது கேட்டனர். அதனால் தான் வித்தியாசமாக மதுபாட்டில் தர முடிவு எடுத்தேன். ஆண்களுக்கு தாம்பூல பை தரும்போது அதில் மதுபாட்டிலையும் சேர்த்து தந்தோம். பெண்களுக்கு வழக்கமான தாம்பூல பை தந்தோம். இதற்கு வேறு ஏதும் காரணமில்லை. தாய்மாமனாக உறவினர்களுக்காகதான் மதுபாட்டில் தந்தேன்" இவ்வாறு கூறினார்,
இதனிடையே இது கலாச்சார சீரழிவு என்று பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது. இதுபற்றி தமிழக பாஜக மாநிலத் துணைத் தலைவர் திருப்பதி நாராயணன் தனது ட்விட்டர் பதிவில் " இது அநாகரீகத்தின் உச்ச கட்டம், கலாச்சார சீர்கேடு, பண்பாட்டு சீரழிவு. உடனடியாக தொடர்புடையவர்கள் மீது புதுவை அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று புதுச்சேரி அரசை வலியுறுத்தி உள்ளார்.












Click it and Unblock the Notifications