புதுவையில்.. அமைச்சரின் உறவினர் குண்டு வீசி கொலை.. சபதம் போட்டு அரங்கேற்றிய கும்பல்!
Recommended Video
புதுச்சேரி: புதுச்சேரியில் சமூகநலத்துறை அமைச்சர் கந்தசாமியின் நெருங்கிய உறவினரும், காங்கிரஸ் பிரமுகருமான சாம்பசிவம் என்பவரை மர்ம நபர்கள் வெடிகுண்டு வீசி படுகொலை செய்துள்ள சம்பவம் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி மாநில சமூகநலத்துறை அமைச்சர் கந்தசாமியின் நெருங்கிய உறவினரும், காங்கிரஸ் பிரமுகரான சாம்பசிவம் (35), தனது வீட்டில் நடைபெறவுள்ள சுபநிகழ்ச்சிக்கு உறவினர்களுக்கு பத்திரிக்கை கொடுப்பதற்காக இன்று காலை காரில் சென்றுள்ளார்.

அவர் கிருமாம்பாக்கம் பகுதியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளி அருகே சென்றுகொண்டிருந்தபோது, அவரை பின்தொடர்ந்த 5 பேர் கொண்ட மர்ம கும்பல், அவர் மீது வெடிகுண்டு வீசியும், அரிவாளால் வெட்டியும் படுகொலை செய்துவிட்டு தப்பியோடினர். அரசு பள்ளிக்கு அருகே நடைபெற்ற இந்த கொலை சம்பவத்தால் காலையில் பள்ளிக்கு வந்த மாணவர்கள் அலறியடித்துகொண்டு ஓடினர்.

இதனிடையே சம்பவ இடத்திற்கு வந்த கிருமாம்பாக்கம் போலீசார், சாம்பசிவத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க முயற்சி செய்தனர். ஆனால், அமைச்சரின் ஆதரவாளர்களும், உறவினர்களும் உடலை எடுக்க விடாமல் அப்பகுதியில் குவிந்ததால், அப்பகுதியில் மிகவும் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. இதனால் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் தற்போது வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ள சாம்பசிவம், பிள்ளையார்குப்பம் பகுதியை சேர்ந்த முன்னாள் கவுன்சிலரும், அமைச்சர் கந்தசாமியின் உதவியாளருமான வீரப்பனின் மைத்துனர் ஆவார். வீரப்பனையும் இதேபோன்று கடந்த 2017 ஆம் ஆண்டு தேர்தல் முன்பகை காரணமாக, என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் அதிமுகவைச் சேர்ந்த 6 பேர் கொண்ட கும்பல் நடுரோட்டில் வைத்து வெட்டி படுகொலை செய்தது குறிப்பிடத்தக்கது.

இன்று அமைச்சர் கந்தசாமியின் பிறந்தநாள். இதனால் முன்பகை காரணமாக, சபதம் எடுத்து இந்த கொலை அமைச்சர் பிறந்தநாளில் நடைபெற்றிருக்கலாம் என கூறப்படுகிறது. மேலும் இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அண்மை காலமாக புதுச்சேரியில் அரசியல் முன்பகை காரணமான கொலைகள் அதிகளவில் நடைபெற்று வருகிறது. ரவுடிகளும் முன்பகை காரணமாக ஒருவருக்கொருவரை வெடிகுண்டு வீசி கொலை செய்யும் கலாச்சாரமும் வேகமாக பரவி வருகிறது. புதுச்சேரியில் கடந்த மூன்று மாதத்தில் மட்டும் 10 க்கும் மேற்பட்ட கொலைகள் வெடிகுண்டு வீசி நடத்தப்பட்டுள்ளன. பெரும்பாலான கொலைகள் சிறைகளில் இருக்கும் ரவுடிகள் மூலம் திட்டம்தீட்டப்பட்டே அரங்கேற்றப்பட்டு வருகிறது.

புதுச்சேரியை பொருத்தவரை அண்டை மாநிலங்களை போன்று ரவுடிகள் போலீசாருக்கு பயப்படுவது கிடையாது. மாறாக பல போலீசார் பணத்திற்காக ரவுடிகளுடன் தொடர்பு வைத்துகொண்டு கட்டப்பஞ்சாயத்து, கொலை, கொள்ளை, கஞ்சா விற்பனை, விபச்சாரம் உள்ளிட்ட பல்வேறு சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் புதுச்சேரியில் சட்டம் ஒழுங்கு மிகவும் சீர்கெட்டுள்ளது. இதையும் மீறி போலீசார் குற்றவாளிகளை பெயரளவிற்கு பிடித்து சிறையில் அடைத்தாலும், சிறையில் செல்போன் உள்ளிட்ட ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்துகொண்டே ரவுடிகள் தங்களது காரியத்தை கச்சிதமாக சாதித்து வருகின்றனர் என்பதே நிதர்சனமான உண்மை.












Click it and Unblock the Notifications