நீங்கதான் தெய்வம்.. திடீரென டாக்டர் காலில் விழுந்து வணங்கிய காங்கிரஸ் எம்எல்ஏ.. புதுச்சேரியில்!
புதுச்சேரி: புதுச்சேரி மாநில முதலமைச்சர் நாராயணசாமி, அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
Recommended Video
சோதனையின் போது காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ஜெயமூர்த்தி திடீரென மருத்துவர்களின் காலில் விழுந்து வழங்கியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு மொத்தம் 8 பேர் பாதிக்கப்பட்டனர். இவர்களில் மாகியில் முதியவர் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 4 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிவிட்டனர்.

தற்போது 3 பேர் மட்டுமே கதிர்காமம் அரசு மருத்துவமனை கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மேலும் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினாலும் தொடர்ந்து அவர்கள் மருத்துவக் குழுவினரால் கண்காணிக்கப்படு வருகின்றனர்.

இந்நிலையில் புதுச்சேரி அரசு கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், முதலமைச்சர், அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கொரோனா வைரஸ் தடுப்பு பயணிகளுக்காக பல்வேறு இடங்களுக்கு சென்று மக்களை சந்தித்து வருகின்றனர். இதனால் அவர்களுக்கு நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளதால், அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட வேண்டும் என சபாநாயகர் சிவக்கொழுந்து சுகாதாரத்துறைக்கு கோரிக்கை வைத்தார்.

அதனடிப்படையில் இன்று புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள கருத்தரங்கு கூடத்தில் சுகாதாரத்துறை சார்பில் RT-PCR முறையில் கொரோனா பரிசோதனை முகாம் நடைபெற்றது. இதில் முதலமைச்சர் நாராயணசாமி, அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்று பரிசோதனை செய்து கொண்டனர். இதன் முடிவுகள் நாளை வெளியாகும் என சுகாதாரத்துறை இயக்குனர் மோகன் குமார் தெரிவித்தார்.

இதனிடையே அரியாங்குப்பம் தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ஜெயமூர்த்தி தனக்கு மருத்துவ பரிசோதனை செய்த மருத்துவர்கள் காலில் திடீரென விழுந்து வணங்கியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications