வாங்க சார் வாங்க.. கட்டிங்.. ஷேவிங்.. வாடிக்கையாளருக்கு முடிதிருத்தம் செய்துவிட்ட திமுக எம்.எல்.ஏ.!
புதுச்சேரி: திமுக சட்டமன்ற உறுப்பினர் நாஜிம், சலூன் கடைக்கு முடிவெட்டச் சென்ற போது அங்கிருந்த வாடிக்கையாளர் ஒருவருக்கு தாமே முடித்திருத்தம் செய்துவிட்டது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பொதுவாக தேர்தல் வந்தால் தான் பிரச்சாரத்துக்கு செல்லும் போது பரோட்டா போடுவது, முறுக்கு சுடுவது, டீ போடுவது என வேட்பாளர்களும், அரசியல் பிரமுகர்களும் கவனம் ஈர்ப்பார்கள். ஆனால் தேர்தல் எதுவும் இப்போது இல்லாத நிலையிலும் சலூன் கடையில் முடித்திருத்தம் செய்து விட்டு கவனம் ஈர்த்திருக்கிறார் திமுக எம்.எல்.ஏ. நாஜிம்.

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் தெற்கு தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் ஏ.எம்.ஹெச். நாஜிம். இவர் கடந்த காலங்களில் போக்குக்குவரத்துத் துறை மற்றும் சுகாதாரத்துறை அமைச்சராகவும் இருந்திருக்கிறார். அதேபோல் 4 முறைக்கு மேல் எம்.எல்.ஏ.வாகவும் இருந்து வருபவர். இவரை காரைக்கால் எம்.ஜி.ஆர். என்று அப்பகுதி வாசிகள் செல்லமாக அழைப்பதுண்டு. காரணம் எம்.ஜி.ஆரை போன்ற நிறமும் அவரது பாணி கருப்பு கண்ணாடியும் தான்.
புதுச்சேரி மாநில திமுகவில் முக்கியத் தலைவர், சட்டமன்ற உறுப்பினர் என பல பொறுப்புகள் வகித்தாலும் என்றும் எளியோருடன் டவுன் டூ எர்த் ஆக பழகக்கூடியவர் நாஜிம். இந்நிலையில் எப்போதும் வழக்கமாக தாம் முடிதிருத்தம் செய்து கொள்ளும் கடைக்கு சென்றிருந்த நாஜிம் எம்.எல்.ஏ., என்ன நினைத்தாரோ தெரியவில்லை, திடீரென்று கத்திரிக்கோலும், சீப்பும் கையுமாக களமிறங்கி கஸ்டமர்களுக்கு முடித் திருத்தம் செய்துவிடத் தொடங்கினார்.
முடிவெட்டப் போன இடத்தில் இவர் முடிவெட்டி விடுகிறாரே என இதனை படம் பிடித்த அங்கிருந்த இளைஞர்கள் சிலர், சமூக வலைதளங்களில் அந்த வீடியோவை பதிவேற்றம் செய்துள்ளனர். இது இப்போது திமுக ஐடி விங் வட்டாரம் மூலம் வேகமாக பரவி வருகிறது. இதனிடையே திடீரென சலூன் கடையில் முடிவெட்டி விட்டதற்கான காரணம் பற்றி அறிய நாம் நாஜிமை தொடர்பு கொண்ட நிலையில், அவர் அலைபேசி அழைப்பை ஏற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications