ஆத்தீ! இளைஞரின் வயிற்றுக்குள் 13 ஹேர் பின், 5 சேஃப்டி பின், 5 பிளேடுகள்.. அதிர்ந்த மருத்துவர்கள்!
புதுச்சேரி: புதுச்சேரியில் கடுமையான வயிற்று வலியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இளைஞரின் வயிற்றில் இருந்து 13 ஹேர் பின்கள், 5 ஊக்குகள், 5 பிளேடுகளை மருத்துவர்கள் அகற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரியை சேர்ந்த 20 வயது இளைஞர் ஒருவர், மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்து வந்துள்ளார். அவருக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்ட நிலையில், அவரது உறவினர்கள் அவரை புதுச்சேரியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அந்த இளைஞரின் வயிற்றில் பிளேடுகள், ஹேர் பின்கள் மற்றும் ஊக்குகள் ஒரு குவியல் போல இருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர். இந்த இளைஞர் நீண்ட காலமாக பிளேடு, ஊக்குகள் போன்றவற்றை சாப்பிடும் பழக்கம் உடையவராக இருந்து வந்துள்ளார்.
இந்த நிலையில் அவரது வயிற்றில் இருந்து மருத்துவர்கள் எண்டோஸ்கோப்பி சிகிச்சை மூலம் 13 ஹேர் பின்கள், 5 ஊக்குகள், 5 பிளேடுகள் உள்ளிட்ட பொருட்களை அகற்றினர். இந்த சிகிச்சை அந்த இளைஞருக்கு 6 மணி நேரம் நடைபெற்றுள்ளது. இதனையடுத்து மறுநாளே அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.
இது குறித்து மருத்துவர்கள் கூறுகையில், "அவரது வயிற்றில் இருந்த பொருட்கள் அனைத்துமே கூர்மையான பொருட்கள். இந்த செயல்முறை மிகவும் சவாலாக இருந்தது. மிகுந்த கவனமுடன் எண்டோஸ்கோப்பி செய்தோம். தற்போது அவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது" எனத் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications