பக்கத்து மாநிலங்கள் குறைக்கவில்லை.. பெட்ரோல், டீசல் விலை புதுச்சேரியில்தான் கம்மி தெரியுமா: தமிழிசை
புதுச்சேரி: அரசு நிகழ்ச்சி ஒன்றில் பேசிய புதுவை துணை நிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் புதுச்சேரியில் செயல்படுத்த உள்ள திட்டங்கள் குறித்து விரிவாக விளக்கினார்.
மத்திய அரசின் திட்டங்கள் மாநிலங்களில் செயல்படுத்துவது குறித்த பிரதமர் மோடி காணொலி மூலமாகப் பயனாளிகளிடம் கேட்டறியும் நிகழ்ச்சி நடைபெற்றது.
புதுச்சேரி கம்பன் கலையரங்கில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் துணைநிலை ஆளுநர் தமிழிசை, புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, சபாநாயகர், அமைச்சர்கள், தலைமைச் செயலர், சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பயனாளிகள் பங்கேற்றனர்

புதுவை முதல்வர்
இந்த நிகழ்ச்சியில் அவர்கள் மத்திய அரசுத் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து பயனாளிகள் தங்களது கருத்துக்களைத் தெரிவித்தனர். முன்னதாக இந்த நிகழ்ச்சியில் பேசிய புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி, "மத்திய அரசின் பல்வேறு திட்டங்கள் மற்றும் பயன்கள் புதுச்சேரி மக்களுக்குச் சென்றடைந்துள்ளது. சில துறைகளில் குறைகள் இருந்து இருக்கலாம். காலதாமதம் இருக்கலாம். அதனை துறைகள் சரிசெய்து கொள்ள வேண்டும்.

முன்மாதிரி
அதனைச் செய்வார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. புதுச்சேரி சிறந்த மாநிலமாகத் திகழ வேண்டும். பல திட்டங்களில் புதுச்சேரி முன்மாதிரியாக இருக்கிறது. இடையில் தோய்வு இருந்த நிலையில், மீண்டும் சிறந்த மாநிலமாகக் கொண்டு வருவோம். மத்திய அரசு உதவியோடு அனைத்து திட்டங்களையும் செயல்படுத்துவோம். அனைத்து தரப்பு மக்களும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பது அரசின் எண்ணம்" என்று அவர் தெரிவித்தார்.

ஆளுநர் தமிழிசை
இந்த நிகழ்ச்சியில் பேசிய துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், "புதுச்சேரியில் உள்ள மக்களுக்கு எந்த திட்டத்தின் பயன்களும் மறுக்கப்படாது. பெஸ்ட் புதுச்சேரியாக இருக்க வேண்டும் எனப் பிரதமர் சொன்ன நிலையில் பெஸ்ட் புதுச்சேரி, பாஸ்ட்(fast) புதுச்சேரியாகவும் மாற வேண்டும். மக்களுக்குக் கிடைக்க வேண்டிய அனைத்து திட்டங்களும் விரைவாகச் சென்று சேர அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறோம்.

காரைக்கால் புறக்கணிக்கப்படுகிறதா
உலக தலைவர்கள் பாராட்டும் அளவிற்குப் பிரதமர் மோடியின் செயல்பாடுகள் உள்ளன. இந்திய மாடல் என்ற தடுப்பூசி மாடல் வெற்றியைத் தந்து உள்ளது. பொருளாதாரத்தை மீட்டு எடுக்க ரூ.20 லட்சம் கோடி ஒதுக்கி பொருளாதாரத்தை மத்திய அரசு மீட்டு எடுத்து உள்ளது. காரைக்கால் ஒதுக்கப்படுகிறது என்ற செய்தி வருத்தம் அளிக்கிறது. ஆனால் கடந்த வாரம் தான் அங்குச் சென்று ஆலோசனைக் கூட்டம் நடத்தி, ஜிப்மர் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்த அறிவுறுத்தி இருந்தேன்.

குறைந்த விலையில் பெட்ரோல்
புதுவை பல புதுமைகளைக் காண உள்ளது. தென்னிந்தியாவிலேயே மிகக் குறைந்த விலையில் பெட்ரோல், டீசல் புதுச்சேரியில் விற்பனை செய்யப்படுவது புதுச்சேரியில் தான். அண்டை மாநிலங்கள் பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்கத் தயங்கினாலும், புதுச்சேரி அரசு குறைத்து இருக்கிறது. மக்கள் நலனில் மத்திய, மாநில அரசுகள் அக்கறை காட்டுகிறது. பல திட்டங்கள் புதுச்சேரிக்குக் கிடைக்கும். அதன் மூலம் புதுச்சேரி மிகப்பெரிய வளர்ச்சியை அடையும்" என்று அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications