இது புது புயல்.. ’லட்சிய ஜனநாயக கட்சி’க்கு தாவிய தவெக, பாஜக அரசியல் புள்ளிகள்!
புதுச்சேரி: புதுச்சேரி அரசியலில் புதிய திருப்பமாக, லாட்டரி அதிபர் சாண்டியாகோ மார்ட்டின் மகனுமான ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் "லட்சிய ஜனநாயக கட்சி என்ற புதிய கட்சி ஒன்றை தொடங்கி இருக்கிறார். இந்நிலையில், அவரது கட்சியில் என்.ஆர் காங்கிரஸ், பாஜக, தவெக உட்பட மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்தவர்கள், அவரது கட்சியில் இணைந்துள்ளனர்.
தமிழகத்தை போலவே 2026 ஆம் ஆண்டு புதுச்சேரியிலும் சட்டமன்ற தேர்தல் நடக்க இருக்கிறது. தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழகத்தை போல புதுச்சேரி அரசியலில் புதிய வரவாக பிரபல லாட்டரி அதிபர் மார்ட்டின் மகனான ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் 'லட்சிய ஜனநாயக கட்சி' என்ற புதிய கட்சியை தொடங்கி இருக்கிறார்.
ஜோஸ் சார்லஸ் மார்ட்டினின் உறவினர்தான் தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பிரச்சார மேலாண்மை பிரிவு செயலாளரான ஆதவ் அர்ஜுனா என்பது குறிப்பிடத்தக்கது. புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ், காங்கிரஸ், பாஜக, திமுக உள்ளிட்ட கட்சிகள் ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில் புதுச்சேரியில் பிரபலமான ஜேசிஎம் புதிய கட்சியை ஆரம்பித்திருப்பது புதுச்சேரி அரசியலில் கவனம் பெற்றுள்ளது.

ஜோஸ் சார்லஸ் மார்ட்டின்
அரசியலுக்கு வருவதற்கு முன்பே புதுச்சேரியில் ஜேசிஎம் அமைப்பின் மூலம் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின். இந்த நிலையில் கட்சி அறிவிப்பை வெளியிட்ட சில நாட்களிலேயே அவரது கட்சியில் பல பிரபலங்கள் இணைந்து வருகின்றனர். குறிப்பாக, தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜயின் தீவிர ஆதரவாளரான நடிகர் தாடி பாலாஜி கடந்த சில தினங்களுக்கு முன்பு அந்த கட்சியில் இருந்து விலகி லட்சிய ஜனநாயக கட்சியில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.
ஜோஸ் சார்லஸ் மார்ட்டின்
இந்த நிலையில் தான் தற்போது புதுச்சேரி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் என்ஆர் காங்கிரஸ், பாஜக, தமிழக வெற்றி கழகம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் தொண்டர்கள் தங்களை லட்சிய ஜனநாயக கட்சியில் இணைத்துக் கொண்டுள்ளனர்.
லட்சிய ஜனநாயக கட்சியின் தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்க்கினை சந்தித்த, இந்திரா நகர் தொகுதியைச் சேர்ந்த என்.ஆர். காங்கிரஸ் முன்னாள் மத்திய மாவட்ட தலைவர் மணிகண்டன், மங்கலம் தொகுதி என்.ஆர். காங்கிரஸ் நிர்வாகி பிரேம் குமார் ஆகியோர் நேரில் ஜோஸ் சார்லஸ் மார்ட்டினை சந்தித்து, லட்சிய ஜனநாயக கட்சியில் இணைந்தனர்.
பாஜக நிர்வாகிகள் இணைப்பு
இதேபோல், நெல்லித்தோப்பு தொகுதியைச் சேர்ந்த பாஜக நிர்வாகி பாலாஜி, புதுச்சேரி பாஜக முன்னாள் தகவல் தொழில்நுட்ப பிரிவு காரைக்கால் மாவட்ட தலைவர் ஏ.ஆர். சந்திரமௌலிஷ்வரர் ஆகியோரும் இந்தக் கட்சியில் இணைந்துள்ளனர்.
மேலும், முத்தியால்பேட்டை தொகுதியைச் சேர்ந்த பிரபல தொழிலதிபரும், முத்து கோல்ட் ஹவுஸ் மற்றும் முத்து சில்க் பிளாசாவின் உரிமையாளருமான குமரன், உழவர்கரை தொகுதியைச் சேர்ந்த தொழிலதிபரும், சட்டமன்ற உறுப்பினர் சிவசங்கரனின் மருமகனுமான சாய்பவன், மங்களம் தொகுதியைச் சேர்ந்த தமிழக வெற்றிக் கழக நிர்வாகி விக்கி, புதுச்சேரி ஏம்பலம் தொகுதி - கோர்காடு பகுதியைச் சேர்ந்த பாஜக மாநில செயற்குழு உறுப்பினரும், முன்னாள் கவுன்சிலருமான M.வீரமுத்து உள்ளிட்டவர்களும் லட்சிய ஜனநாயக கட்சியில் இணைந்துள்ளனர்.
புதுச்சேரி அரசியல்
இவர்களின் இணைப்பு, கட்சியின் அமைப்பு வலுவடைவதற்கான ஆரம்ப கட்டமாக பார்க்கப்படுகிறது. 2026 சட்டமன்றத் தேர்தலை நோக்கி புதுச்சேரி அரசியல் சூழல் மெல்ல சூடுபிடிக்க தொடங்கியுள்ள நிலையில், லட்சிய ஜனநாயக கட்சி எந்த அளவுக்கு அரசியல் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதே புதுச்சேரி அரசியலில் பேசுபொருளாக இருக்கிறது.












Click it and Unblock the Notifications