'புதியதோர் புதுவை செய்வோம்'... புதுச்சேரியில் மக்கள் நீதி மய்யத்தின் புதிய அலுவலகம் திறப்பு
புதுவை: புதுச்சேரி சட்டமன்ற தேர்தலுக்கு தயாராகும் வகையில் மக்கள் நீதி மய்யத்தின் புதிய அலுவலகம் அங்குத் திறக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் தலைவர் கமல் ஹாசன் அறிவித்துள்ளார்.
தமிழகத்துடன் புதுவையிலும் வரும் மே மாதம் சட்டமன்ற தேர்தல் நடத்தப்படவுள்ளது. தமிழ்நாட்டில் ஏற்கனவே அனைத்துக் கட்சிகளும் தங்கள் தேர்தல் பிரச்சாரங்களைத் தொடங்கிவிட்டன. அதேபோல புதுவையில் தேர்தலுக்கான பணிகளை ஒவ்வொரு கட்சியும் தொடங்கி வருகிறது.
இந்நிலையில், மக்கள் நீதி மய்யத்தின் புதிய அலுவலகம் புதுச்சேரியில் திறக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் தலைவர் கமல் ஹாசன் அறிவித்துள்ளார். இது குறித்து கமல் தனது ட்விட்டரில், "சீரமைப்போம் தமிழகத்தை" எனும் எமது தமிழ்க் கனவின் இன்னொரு அங்கம்தான் "புதியதோர் புதுவை செய்வோம்" என்பதுவும்.

இன்று புதுச்சேரியில் மக்கள் நீதி மய்யத்தின் புதிய அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது. புதுவை அரசியலின் புதிய அத்தியாயம் ஆரம்பமாகி விட்டது. நாளை நமதே!" என்று பதிவிட்டுள்ளார்.
வரும் சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தைப் போலவே புதுவையிலும் மக்கள் நீதி மய்யம் போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், கூட்டணி அமைத்துப் போட்டியிடுமா அல்லது தனித்துப் போட்டியிடுமா என்பது குறித்து இதுவரை எவ்வித தகவலும் வெளியாகவில்லை.
புதுச்சேரியில் தற்போது காங்கிரஸ் - திமுக கூட்டணி ஆட்சியில் உள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளாக முதல்வராக நாராயணசாமி உள்ளார். காங்கிரஸ்- திமுக கூட்டணியை எதிர்த்து என்.ஆர். காங்கிரஸ்-அதிமுக-பாஜக கூட்டணி போட்டியிடுகிறது. அதேபோல மநீம, நாம் தமிழர், அமமுக உள்ளிட்ட பல கட்சிகளும் புதுவை தேர்தலிலும் போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications