2026ல் பாமக கூட்டணி தான் ஆட்சியைப் பிடிக்கும்.. அடித்துச் சொன்ன ராமதாஸ்! பொதுக்குழுவில் பஞ்சாயத்து!
புதுச்சேரி: பாமகவின் சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ் 2026ல் பாமக அமைக்கும் கூட்டணிதான் தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்கும் எனக் கூறினார். இந்தப் பொதுக்குழுவில் ராமதாஸுக்கும், பாமக தலைவர் அன்புமணிக்கும் இடையே வெளிப்படையாக மோதல் வெடித்தது.
விழுப்புரம் வானூர் அருகே பாமக சிறப்பு பொதுக்குழு கூட்டம் இன்று நடந்தது. இந்தக் கூட்டத்தில் பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ், "கட்சி தொடங்கி 35 ஆண்டுகள் கடந்தும் நாம் ஆட்சியை பிடிக்க முடியவில்லை. நாம் ஆட்சிக்கு வந்து இருந்தால் 4 நாட்களுக்கு முன் நடத்திய தனி இட ஒதுக்கீடு போராட்டத்தை நடத்தி இருக்க வேண்டியதில்லை. ஒவ்வொரு சட்டப்பேரவை தொகுதியில் ஒரு லட்சம் வாக்குகள் பெற்றால் வெற்றி நம் பக்கம்.

2026 ஆம் ஆண்டு கூட்டணி ஆட்சிதான். யாருடன் கூட்டணி என்பதை நான் பார்த்துக்கொள்கிறேன். ஒருமுறை தவறு செய்தால் மீண்டும் தவறு செய்வோம் என்று அர்த்தம் இல்லை. அது எந்த பாதை என்பதை அடுத்த ஆண்டு பொதுக்குழுவிலோ அதற்கு முன்போ முடிவு செய்வோம். அடுத்த ஆட்சியில் நாம் பங்கேற்போம். தமிழகம், புதுச்சேரியில் ஆட்சி அமைக்கப்போவது நம் கூட்டணிதான். இங்குள்ளவர்கள் அமைச்சர்களாக இருப்பார்கள். தமிழ்நாட்டில் இனி திமுக ஆட்சி வரக்கூடாது என சபதம் ஏற்போம்" எனப் பேசினார்.
அதைத்தொடர்ந்து, இந்தப் பொதுக்குழு கூட்டத்தில், பாமக நிறுவனர் ராமதாஸுக்கும், பாமக தலைவர் அன்புமணிக்கும் இடையே வெளிப்படையாக மோதல் வெடித்தது. ராமதாஸின் மகள் வழிப் பேரன் முகுந்தன் பரசுராமனை பாமகவின் இளைஞரணி தலைவராக அறிவித்தார் பாமக நிறுவனர் ராமதாஸ். இதனை, ராமதாஸின் மகனும், பாமக தலைவருமான அன்புமணி ஏற்க மறுத்து மேடையிலேயே எதிர்ப்பை தெரிவித்தார்.
"கட்சியில் சேர்ந்த 4 மாதங்களில் இளைஞரணி தலைவர் பொறுப்பு கொடுக்காதீர்கள். அவருக்கு என்ன அனுபவம் இருக்கும், களத்தில் இருத்து வேலை செய்பவருக்கு கொடுங்கள்" எனக் கூறினார் அன்புமணி. அதனால் ஆத்திரமடைந்த ராமதாஸ், 'நான் சொல்வதை தான் யாராக இருந்தாலும் கேட்க வேண்டும். இது நான் உருவாக்கிய கட்சி. கேட்காதவர்கள் கட்சியில் இருக்க முடியாது. புரியுதா? கட்சியை விட்டு போவதாக இருந்தால் போ'' என கூறினார்.
தந்தையின் பேச்சால் அதிருப்தி அடைந்த அன்புமணி ராமதாஸ் சட்டென தனது கையில் வைத்திருந்த மைக்கை டேபிளில் போட்டார். இதனால் அங்கு அசாதாரணமான சூழல் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து, "பனையூரில் தனியாக அலுவலகம் திறந்து இருக்கிறேன். என்னை வந்து சந்திப்பதாக இருந்தால் அங்கு வந்து சந்திக்கலாம்' என்று அறிவித்தார். இதையடுத்து விருப்பமில்லாதவர்கள் கட்சியை விட்டு விலகிக் கொள்ளலாம் என ராமதாஸ் கோபமாக தெரிவித்தார். இதனால் பொதுக்குழு நிகழ்வில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது.
முன்னதாக இந்தப் பொதுக்குழுவில், சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை கட்டாயமாக்கும் வகையில், அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் செய்யவேண்டும், தமிழ்நாட்டில் சமூகநீதியைப் பாதுகாக்க சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த மறுக்கும் தி.மு.க. அரசுக்கு கண்டனம், மத்திய அரசின் கல்வி, வேலைவாய்ப்பில் ஓ.பி.சி. உள்இடஒதுக்கீடு: ரோகிணி ஆணைய அறிக்கையை மத்திய அரசு செயல்படுத்த வேண்டும், வன்னியர்கள் உள் இடஒதுக்கீட்டுச் சட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும், அதானி ஊழல் & தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு உள்ள தொடர்பு குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு ஆணையிட வேண்டும் என்பது உள்ளிட்ட 30 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.












Click it and Unblock the Notifications