Puducherry Exit Polls: அடுத்த எம்ஜிஆர்னு சொன்னாங்களே! புதுச்சேரியில் மண்ணெடுக்க முடியாத விஜய்! 3 சீட்டுக்கே சிக்கலாமே!
புதுச்சேரி: தமிழகம், புதுச்சேரி, மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ள நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகி வருகின்றன. குறிப்பாக புதுச்சேரி மாநிலத்தில் மீண்டும் என்டிஏ ஆட்சி அமைக்கும் என பல நிறுவனங்கள் வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்புகள் சொல்கின்றன. அதே நேரத்தில் புதுச்சேரியில் மிகப்பெரிய அரசியல் மாற்றத்தை ஏற்படுத்துவார் என எதிர்பார்க்கப்பட்ட விஜயின் தமிழக வெற்றிக் கழகம் 4 தொகுதிகளை கூட தாண்டாது என ஒரே மாதிரியான கருத்துக்கணிப்பை அனைத்து நிறுவனங்களும் வெளியிட்டுள்ளது.
புதுச்சேரியில் தற்போது ஆட்சியில் உள்ள என்.ஆர்.காங்கிரஸ் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியே மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் என Peoples Pulse, Axis My India, NDTV மற்றும் KAMAKHYA Analytics ஆகிய நிறுவனங்கள் வெளியிட்ட கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் மொத்தம் 30 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. இதில் கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த தேர்தலில் ஆளும் என்.ஆர். காங்கிரஸ் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கும், காங்கிரஸ் மற்றும் திமுக கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவியதாக கூறப்படுகிறது.
இந்த தேர்தலில் மொத்தம் 294 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். சுமார் 9.5 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றிருந்த நிலையில், 91.23 சதவீதம் வாக்குகள் பதிவாகியிருப்பது குறிப்பிடத்தக்கது. இது புதுச்சேரி தேர்தல் வரலாற்றில் அதிகமான வாக்குப்பதிவாக பார்க்கப்படுகிறது. வாக்கு எண்ணிக்கை மே 4ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அதற்கு முன்பாக வெளியான கருத்துக் கணிப்புகள் அரசியல் கட்சிகளின் கவனத்தை ஈர்த்துள்ளன.
Peoples Pulse நிறுவனம் வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்பின்படி, என்.ஆர். காங்கிரஸ் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 16 முதல் 19 தொகுதிகள் வரை வெற்றி பெறும் என கணிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி 10 முதல் 12 தொகுதிகள் வரை கைப்பற்றும் என்றும், மற்ற கட்சிகள் 1 முதல் 2 தொகுதிகள் வரை வெற்றி பெறக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், Axis My India நிறுவனம் வெளியிட்டுள்ள கணிப்பில், என்.ஆர். காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி 16 முதல் 20 இடங்கள் வரை வெற்றி பெறும் என்றும், காங்கிரஸ் கூட்டணி 6 முதல் 8 இடங்கள் வரை மட்டுமே வெற்றி பெறும் என்றும் கூறப்பட்டுள்ளது. அதேபோல் நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 2 முதல் 4 இடங்கள் வரை வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாகவும், மற்ற கட்சிகள் 1 முதல் 3 இடங்கள் வரை பெறக்கூடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் NDTV வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்பில், என்.ஆர். காங்கிரஸ் கூட்டணி 18 இடங்களில் வெற்றி பெறும் என்றும், காங்கிரஸ் கூட்டணி 9 இடங்கள், தமிழக வெற்றிக் கழகம் 2 இடங்கள் மற்றும் மற்ற கட்சிகள் 1 இடம் பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் காமாக்யா வெளியிட்டுள்ள கணிப்பும் என்.ஆர். காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி 17 முதல் 24 இடங்கள் வரை வெற்றி பெறும் என கூறுகிறது. மொத்தத்தில் பார்க்கும்போது, பெரும்பாலான கருத்துக் கணிப்புகளும் புதுச்சேரியில் மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணியே ஆட்சியமைக்கும் என்ற ஒரே மாதிரியான கணிப்பை வெளியிட்டுள்ளன.
ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது அனைத்து கருத்துக் கணிப்புகளும் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக்கழகத்திற்கு படுதோல்வியே கிடைக்கும் என அடித்துச் சொல்கின்றன. தமிழகத்தை போலவே புதுச்சேரியிலும் விஜயின் மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உண்டு. கடந்த சில வாரங்களுக்கு முன்பு புதுச்சேரியில் விஜய் மக்கள் சந்திப்பு நடந்தபோது ஆயிரக்கணக்கான கலந்து கொண்டனர்.
மேலும் விஜயின் ரோட் ஷோவிலும் எதிர்பாராத கூட்டம் திரண்டது. இதனால் எம்ஜிஆர் கட்சி ஆரம்பித்து முதலில் புதுச்சேரியில் ஆட்சியைப் பிடித்தது போல விஜய் புதுச்சேரியில் ஆட்சி அமைப்பார் என தமிழக வெற்றிக் கழகத்தினர் கூறி வந்தனர். ஆனால் தற்போது வெளியாகி உள்ள கருத்துக்கணிப்புகள் விஜய்க்கு படுதோல்வியே கிடைக்கும் என கூறியுள்ளது அந்த கட்சியினரை ஏமாற்றம் அடைய செய்துள்ளது.












Click it and Unblock the Notifications