புதுச்சேரி சிறுமி கேஸ்.. விடாமல் தற்கொலைக்கு முயன்ற விவேகானந்தன்.. ஜெயில் பாத்ரூமில் அந்த காட்சி
புதுச்சேரி: புதுச்சேரி சிறுமி கொலை வழக்கில் கைதான குற்றவாளி விவேகானந்தன் இன்று தூக்கிட்டு ஜெயிலுக்குள்ளேயே தற்கொலை செய்து கொண்டிருப்பது, அதிர்ச்சியை தந்து வருகிறது. இந்த சம்பவம் சிறைத்துறையின் பாதுகாப்பையும் கேள்வி எழுப்பியிருக்கிறது.
புதுச்சேரியில் கடந்த மார்ச் மாதம் 9 வயது சிறுமி, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொடூரமாக கொலையும் செய்யப்பட்டார். சிறுமியின் கை, கால்களைக் கட்டி, 2 கொடூரர்கள் சேர்ந்து பலாத்காரம் செய்துள்ளனர். இவர்கள் இருவருமே அதே பகுதியைச் சேர்ந்த கஞ்சா ஆசாமிகளான விவேகானந்தன் (57) மற்றும் கருணாஸ் (19) ஆகியோர் ஆவர்.

இந்த கொலை தொடர்பாக முத்தியால்பேட்டை போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து விவேகானந்தன், கருணாஸ் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்து, காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.
2 பேர் கைது: அதேபோல, சிறுமி கொலை வழக்கில், போலீசார் 500 பக்கம் கொண்டு குற்றப்பத்திரிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தனர்.. காவல் கண்காணிப்பாளர் மற்றும் காவல் ஆய்வாளர் தலைமையில், சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஷோபனா தேவி முன்னிலையில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டிருந்தது.. இதனால் விரைவில் புதுச்சேரி சிறுமி வழக்கில் குற்றவாளிகளுக்கு தீர்ப்பு வழங்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்பட்டு வந்தது.
ஆனால், அதற்குள் கழிவறையிலேயே துண்டை வைத்து கழுத்தை நெரித்து 57 வயது விவேகானந்தன் தற்கொலை செய்துள்ளது, பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அதேசமயம், சிறைக்காவலையும் மீறி, எப்படி இந்த தற்கொலை நடந்தது என்ற அதிர்ச்சியும் கிளம்பியிருக்கிறது..
குற்றவாளிகள்: கடந்த மார்ச் 5-ம் தேதிதான் குற்றவாளிகள் இருவரும் கைது செய்யப்பட்டார்கள். பிறகு உடனடியாக காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.. ஆனால், சிறையில் இருக்கும்போதே, இருவருமே சிலமுறை தற்கொலை முயற்சிகளில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இதில், விவேகானந்தன், கடந்த மார்ச் 11ம் தேதியே, தற்கொலைக்கு முயற்சித்திருக்கிறார்.. இதை பார்த்து பதறிப்போன சக கைதியான கருணாஸ் கூச்சலிட்டதால், சிறைக்காவலர்கள் உடனடியாக விரைந்து சென்று விவேகானந்தனை காப்பாற்றியதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. இதுபோலவே, கருணாஸும் அடிக்கடி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக தெரிகிறது. அதனால்தான், இவர்களை கண்காணிப்பதற்காகவே தனியாக காவலர்கள் நியமிக்கப்பட்டு இருந்தனர்.
கண்காணிப்பு: பிரத்யேக போலீசார் கண்காணிப்பில் இருந்தாலும்கூட, விவேகானந்தன் தன்னுடைய தற்கொலை முயற்சியை கைவிடவில்லையாம். தற்கொலை செய்து கொள்ள, கழிவறையிலுள்ள சோப்பை சாப்பிடுவது, சட்டையால் கழுத்தை இறுக்கிக் கொள்வது என்று பல வகைகளில் தொடர்ந்து முயற்சி செய்து வந்த நிலையில், ஒவ்வொரு முறையும் காவலர்களால் அவர் மீட்கப்பட்டு வந்ததாகவும், தொடர்ந்து பாதுகாப்பு தந்ததாகவும் கூறப்படுகிறது.
தொடர் முயற்சிக்கு பிறகு, இன்று காலை விவேகானந்தன் சிறையில் உள்ள கழிப்பறையில் தன்னுடைய துண்டால் கழுத்தை நெறித்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்...
நாளை விசாரணை: கடந்த ஆகஸ்ட் 24ம் தேதி நீதிபதி சுமதி முன்பு போலீஸார் இருவரையுமே ஆஜர்படுத்தினார்கள்.. அப்போது, நீங்கள் செய்த குற்றத்தை ஒப்புக்கொள்கிறீர்களா? என்று நீதிபதி கேட்டதற்கு இருவரும் ஒப்புக்கொள்ளவில்லை.. அதனால், இந்த வழக்கின் விசாரணை நாளை அதாவது, 17ம் தேதி தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது..
நாளை வழக்கு விசாரணை ஆஜராக வேண்டிய நிலையில் தான் விவேகானந்தன் இன்று தற்கொலை செய்து கொண்டுள்ளார்.. சிறைக்குள் காவலையும் மீறி, அதுவும் தனிப்பட்ட போலீஸ் கண்காணிப்பையும் மீறி விவேகானந்தன் தற்கொலை செய்து கொண்டுள்ளது, மிகப்பெரிய அதிர்வலையை புதுச்சேரியில் ஏற்படுத்தி வருகிறது.












Click it and Unblock the Notifications