புதுவையில் நாளை முதல் இரவு ஊரடங்கு.. புதிய கட்டுப்பாடுகள் என்னென்ன? தமிழிசை சவுந்தரராஜன் அறிவிப்பு
புதுச்சேரி: கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால் புதுச்சேரியில் நாளை முதல் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாகத் துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் அறிவித்துள்ளார்.
புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா வைரஸ் 2வது அலை வேகமாகப் பரவி வருகிறது. இதிலிருந்து மக்களைப் பாதுகாக்கப் புதுவை அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்நிலையில் புதுச்சேரி லாஸ்பேட்டையில் உள்ள கொரோனா தடுப்பூசி மையத்தை துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்..

இரவு ஊரடங்கு
அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சவுந்தரராஜன், கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் தமிழகத்தைத் தொடர்ந்து புதுச்சேரியில் நாளை முதல் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாகத் தெரிவித்தார். மேலும் ஊரடங்கு அமல்படுத்தப்படும் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை பொதுமக்கள் வெளியே வரக்கூடாது என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

குறைந்த விலையில் மாஸ்க்குகள்
மேலும் புதுச்சேரியில் முகக் கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், ஏழை எளிய மக்களின் நலன் கருதி பாண்லே பாலகம் மூலமாகக் குறைந்த விலையில் முகக் கவசங்கள் மற்றும் கிருமிநாசினிகள் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்றும், உணவு விடுதிகளில் இரவு 8 மணிக்குப்பின் பார்சல் மட்டுமே வழங்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

புதிய கட்டுப்பாடுகள்
தொடர்ந்து பேசிய தமிழிசை சவுந்தரராஜன், உணவு விடுதிகள், மதுக்கடைகள் போன்ற இடங்களில் வாடிக்கையாளர்கள் அமர்வதற்குத் தடுப்புகள் ஏற்படுத்த வேண்டும் என்றும் அடையாளம் கண்டறியப்பட்ட சிறிய அளவிலான கட்டுப்பாட்டு மண்டலங்களை மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு மண்டலங்களாகப் பிரித்து கோவிட் நடைமுறைகளைத் தீவிரமாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

திருமண விழாக்கள்
மேலும், திருமண விழாக்களில் 100 நபர்கள் மற்றும் இறுதிச் சடங்குகளில் 50 நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும் என்றார். அனைத்து நாட்களிலும் மாலை 5 மணியோடு கடற்கரைகள் மூடப்படும் உள்ளிட்ட பல்வேறு புதிய கட்டுப்பாடுகள் நாளை முதல் புதுவையில் அமலுக்கு வருவதாகத் துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications