பெண் காவலருக்கு பாலியல் தொல்லை புகார்.. எஸ்பி சுப்பிரமணியன் பணிநீக்கம்! அரசு அதிரடி உத்தரவு
புதுச்சேரி: பெண் காவலருக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில், காவல் கண்காணிப்பாளர் அந்தஸ்தில் உள்ள அதிகாரி ஒருவர் அதிரடியாகப் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். காரைக்காலில் பணியாற்றியபோது பெண் காவலருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரில் சிக்கிய சுப்பிரமணியன் மீது துறைரீதியான விசாரணைக்கு பிறகு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பெண்களுக்கு பாதுகாப்பு கொடுப்பது போலீசாரின் வேலை. ஆனால், சில நேரம் அந்த போலீசாரே மோசமாக நடந்து கொள்கிறார்கள். அதிலும் குறிப்பாக பெண் காவலர்களிடமே அத்துமீறும் சம்பவங்கள் நடக்கிறது. இப்போதும் அப்படியொரு அதிர்ச்சி சம்பவம் தான் நடந்துள்ளது.

பாலியல் தொல்லை
காரைக்காலில் தெற்கு மண்டல காவல் கண்காணிப்பாளராக சுப்பிரமணியன் இருந்தபோது, அங்குள்ள மகளிர் காவல் நிலையத்தில் பணிபுரிந்த பெண் காவலர் ஒருவர் பாலியல் தொல்லை புகார் அளித்தார். இந்த புகார் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டதாக கூறப்பட்டாலும், அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.
இதனால் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளான பெண் காவலர் தற்கொலைக்கு முயன்றதாகவும் தகவல் வெளியானது. இதையடுத்து பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயார் ராசாம்பாள் தனது மகளுக்கு நீதி கோரி சென்னை உயர் நீதிமன்றத்தை நாடினார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், புதுச்சேரி தலைமை செயலர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டது.
டிஸ்மிஸ் செய்ய உத்தரவு
நீதிமன்றத்தின் தலையீட்டை தொடர்ந்து, கடந்த செப்டம்பர் 24ம் தேதி சுப்பிரமணியனை பணியிடை நீக்கம் செய்து காவல்துறை தலைமை உத்தரவிட்டது. அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் அவர் ஓய்வு பெறவிருந்த நிலையில், அவர் மீதான துறைரீதியான விசாரணை தொடர்ந்து நடைபெற்றது. விசாரணையின் முடிவில் அவர் மீதான குற்றச்சாட்டு உறுதியாகியுள்ளது. இதையடுத்து தலைமை செயலர் சரத்சவுகான், எஸ்பியாக இருந்த சுப்பிரமணியனை டிஸ்மிஸ் செய்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.
தொடரும் சம்பவங்கள்
சமீபத்தில் தான் இதேபோல பெண் காவலர்களுக்கு எதிரான பாலியல் தொல்லை புகார்களில் தமிழ்நாட்டிலும் இதேபோல கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு இருந்தது. தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி போலீஸ் நிலையத்தில் ஆய்வாளராக இருந்த திலீபன் மீதும் சக பெண் காவலர் பாலியல் தொல்லை புகாரளித்திருந்தார். அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு இருந்த நிலையில், 585 நாட்கள் அனுமதியின்றி பணிக்கு வராதது, விசாரணைக்கு ஒத்துழைக்காதது உள்ளிட்ட காரணங்களை குறிப்பிட்டு அவர் நவம்பர் 17ம் தேதி பணிநீக்கம் செய்யப்பட்டார்.
அதேபோல பழனி அருகே புகார் அளிக்க வந்த பெண்ணிடம் செல்போனில் ஆபாசமாக மெசேஜ் அனுப்பி அத்துமீறிய குற்றச்சாட்டில், சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்த காவல் உதவி ஆய்வாளர் ராஜகோபாலும் டிஸ்மிஸ் செய்யப்பட்டிருந்தார்.


Click it and Unblock the Notifications
