அரசியல் பரபரப்புக்கு நடுவே புதுச்சேரி வந்தார் ராகுல் காந்தி - உற்சாக வரவேற்பு அளித்த நாராயணசாமி
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் இன்று புதுச்சேரிக்கு வந்துள்ளார் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி. விமான நிலையத்தில் ராகுல்காந்திக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
புதுச்சேரி: ஆளும்கட்சி எம்எல்ஏக்கள் 4 பேர் ராஜினாமா செய்துள்ள பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் புதுச்சேரிக்கு வந்துள்ளார் ராகுல் காந்தி. விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மீனவ பெண்களுடன் கலந்துரையாடும் ராகுல்காந்தி, பாரதிதாசன் மகளிர் கல்லூரி மாணவிகளுடன் பேசுகிறார். மாலையில் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்யப் போகிறார்.
புதுச்சேரியில் நாராயணசாமி தலைமையிலான ஆட்சி நடைபெறுகிறது. ஆளும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 4 பேர் அடுத்தடுத்து ராஜினாமா செய்துள்ளனர். இதனால் நாராயணசாமி அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஆளும் கட்சி பெரும்பான்மை இழந்து விட்டதாக கூறப்பட்டாலும் பதவி விலகப்போவதில்லை என்று கூறியுள்ளார் முதல்வர் நாராயணசாமி.
துணை நிலை ஆளுநர் கிரண் பேடியை எதிர்கட்சியினர் சந்தித்து பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்த இருந்தனர். இந்த நிலையில் நேற்றிரவு கிரண் பேடி துணை நிலை ஆளுநர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

புதுச்சேரிக்கு ராகுல் காந்தி வருகை
பரபரப்பான அரசியல் சூழ்நிலைக்கு இடையே காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி இன்று தனி விமானம் மூலம் புதுச்சேரிக்கு வந்துள்ளார். முதல்வர் நாராயணசாமி, காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்ரமணியன், வைத்திலிங்கம் எம்.பி. மற்றும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் ராகுல்காந்தியை வரவேற்றனர். ராகுல்காந்தியின் வருகையையொட்டி அவரை வரவேற்கும் விதமாக புதுவை நகரப் பகுதியில் ஆங்காங்கே வரவேற்பு பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன. கட் அவுட்களும் வைக்கப்பட்டுள்ளன.

மீனவ பெண்களுடன் பேச்சு
வரவேற்பு நிகழ்ச்சி முடிந்ததும் விமான நிலையத்தில் இருந்து நேராக முத்தியால்பேட்டை சோலை நகர் பகுதிக்கு சென்று அங்குள்ள தென்னந்தோப்பில் மீனவ பெண்களுடன் ராகுல் காந்தி கலந்துரையாடுகிறார்.

மாணவிகளுடன் கலந்துரையாடல்
அதைத்தொடர்ந்து பாரதிதாசன் மகளிர் கல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடுகிறார். இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சி கம்பன் கலையரங்கில் நடக்கிறது. அதன்பின் அக்கார்டு ஓட்டலுக்கு சென்று மதிய உணவு சாப்பிடுகிறார்.

ராகுல்காந்தி பிரச்சாரம்
சிறிது நேரம் ஓய்வெடுக்கும் அவர் அங்கிருந்து ரோடியர் மில் திடலுக்கு வருகிறார். மாலையில் அங்கு நடக்கும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். அதன்பின் விமான நிலையம் சென்று அங்கிருந்து டெல்லி செல்கிறார். புதுவையில் அடுத்தடுத்து காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்து வருவதால் அரசுக்கு பெரும்பான்மை இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக ராகுல்காந்தியுடன் ஆலோசித்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்க புதுவை காங்கிரஸார் திட்டமிட்டுள்ளனர்.

அரசியல் பரபரப்பு
தற்போதைய பரபரப்பான அரசியல் சூழ்நிலை குறித்து ராகுல்காந்தி புதுவை தலைவர்களுடன் ஆலோசனை நடத்துவார் என்று தெரிகிறது. ராகுல்காந்தியின் ஆலோசனையை தொடர்ந்து அமைச்சரவை ராஜினாமா செய்யுமா? அல்லது பெரும்பான்மையை நிரூபிக்க முயற்சி செய்யுமா என்று பார்க்கலாம். புதுச்சேரியின் இன்னும் அதிரடி அரசியல் திருப்பங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.












Click it and Unblock the Notifications