இதய வடிவில் முகம்.. இரவுதான் வேட்டைக்கான நேரம்! புதுச்சேரியில் சிக்கிய அரிய உயிரினம் பற்றி தெரியுமா?
புதுச்சேரி: கோடை வெயில் மட்டுமல்ல.. இப்போதும் அதிகரிக்கும் வெப்பம் பறவைகளையும் விட்டு வைக்கவில்லை போலும்.. ஆங்காங்கே ஆந்தைகள் மயங்கி விழுவதும், பறக்க முடியாமல் தவிப்பதும் கவலையை ஏற்படுத்தி வருகிறது.. அப்படி புதுச்சேரி சட்டமன்றம் எதிரே தவித்த அரிய வகை வெள்ளை ஆந்தை முதல், வாணியம்பாடியில் மயங்கிக் கிடந்த பாறை ஆந்தை வரை நடந்த சம்பவங்கள் கவனத்தை ஈர்த்துள்ளன..
புதுச்சேரி சட்டமன்றத்துக்கு எதிரே உள்ள பாரதி பூங்கா பகுதியில் அரிய வகை உயிரினம் ஒன்று தென்பட்டது... அருகில் சென்று பார்த்தபோதுதான் அது வெள்ளை நிற ஆந்தை என்று தெரியவந்தது..

புதுச்சேரி அரிய வகை உயிரினம்
பறக்க முடியாமல் தவித்து கொண்டிருந்த அந்த ஆந்தையை பார்த்த அங்கிருந்த பொதுமக்கள், அதனை பாதுகாப்பாக பிடித்தனர். எதிரே உள்ள சட்டமன்றத்தின் சபைக் காவலர்களிடம் அந்த ஆந்தையை ஒப்படைத்தனர். ஆந்தையின் நிலையைப் பார்த்த காவலர்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அங்கு வந்த வனத்துறையினர் ஆந்தையைப் பத்திரமாக மீட்டுச் சென்றனர்.
மீட்கப்பட்ட ஆந்தை "பார்ன் ஆந்தை" (Barn Owl) வகையைச் சேர்ந்தது. இதன் அறிவியல் பெயர் Tyto alba. இதய வடிவில் வெளிறிய முகம், பழுப்பு மற்றும் வெள்ளை நிற இறகுகள் ஆகியவை இந்த ஆந்தையின் முக்கிய அடையாளங்களாகும். இரவு நேரங்களில் இரை தேடி வேட்டையாடும் இந்த ஆந்தை, உலகின் பல்வேறு பகுதிகளில் காணப்படுகிறது.
இதய வடிவம் - ஆந்தை
இந்த ஆந்தை ஆஸ்திரேலியாவுடன் தொடர்புடையதாகச் சொல்லப்பட்டாலும், புதுச்சேரியில் மீட்கப்பட்ட ஆந்தை அங்கிருந்து வந்ததுதான் என்பதற்கு இதுவரை உறுதியான தகவல் இல்லை. அதேபோல், ஆந்தை ஏன் பறக்க முடியாமல் தவித்தது என்பதற்கான காரணமும் தெரியவில்லை. அதற்கு ஏதாவதுகாயம் ஏற்பட்டிருந்ததா அல்லது வேறு காரணத்தால் பறக்க முடியாமல் போனதா என்பதும் தெளிவாகவில்லை.
இதுகுறித்து வனத்துறையினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். ஆய்வுக்குப் பிறகே ஆந்தையின் நிலை மற்றும் அது தொடர்பான கூடுதல் விவரங்கள் தெரியவரும்.
இரவு நேரத்தில் வேட்டை
இந்த அரிய வகை பார்ன் ஆந்தை பார்ப்பதற்கு வெள்ளை நிறத்தில் அழகாக இருந்தாலும், இரவு நேரத்தில் மிகத் திறமையாக வேட்டையாடும் பறவையாகும். மிகக் கூர்மையான கேட்கும் திறன் கொண்ட இந்த ஆந்தை, இருட்டிலும் எலிகள் எழுப்பும் சத்தத்தை வைத்து அவை இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்து வேட்டையாடுமாம்.. எலி, பெருச்சாளி போன்ற சிறிய உயிரினங்களே இதன் முக்கிய உணவாகும். இதனால் விவசாய நிலங்களில் எலிகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது.
இந்தியா உட்பட உலகின் பல்வேறு பகுதிகளில் காணப்படும் இந்த ஆந்தை, ஆஸ்திரேலியாவிலும் வாழ்கிறது. எனினும், புதுச்சேரியில் மீட்கப்பட்ட ஆந்தை ஆஸ்திரேலியாவிலிருந்து வந்ததா என்பதற்கு எந்த உறுதியான தகவலும் இல்லை.
அரிய வகை பாறை ஆந்தை
இதேபோல், 2 நாட்களுக்கு முன்பு திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பைபாஸ் சாலையில் உள்ள இஸ்லாமியா கல்லூரி அருகே அரிய வகை பாறை ஆந்தை ஒன்று மயங்கிக் கிடந்தது. அதிக வெப்பம் காரணமாக அந்த ஆந்தை மயங்கியதாகக் கூறப்படும் நிலையில், இயற்கை ஆர்வலர்களான வடிவேல், சேதுராமன் ஆகியோர் அதை மீட்டு தண்ணீர் கொடுத்து பாதுகாத்தனர்.
பிறகு வாணியம்பாடி வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். வனத்துறையினர் அந்த ஆந்தையை மீண்டும் வனப்பகுதியில் விட்டனர். வெப்பத்தின் தாக்கத்தால் பறவைகள் பாதிக்கப்படும் சம்பவங்கள் தொடர்ந்து கவலையை ஏற்படுத்தி வருகின்றன...!!


Click it and Unblock the Notifications
