சிங்கப்பூர் கணவர் டக்னு வந்துட்டார்.. மனைவியுடன் தவெக புள்ளி? உடனே கதவை மூடி, சென்னை போலீசுக்கு போன்
சென்னை: சிங்கப்பூரில் வேலை பார்த்து குடும்பத்துக்காக சம்பாதித்துக் கொண்டிருந்தார் கணவர்.. திடீரென சென்னையில் உள்ள தனது வீட்டுக்கு வந்தபோது மனைவியுடன் இன்னொருவருடன் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.. கணவரை பார்த்ததுமே, வீட்டுக்குள் கதவை பூட்டிக்கொண்டாராம்.. இதற்கு பிறகு கணவர் செய்த காரியம்தான் சென்னை பள்ளிக்கரணையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன் செய்தியாளர்களிடம் அவர் தந்துள்ள பேட்டி இணையத்தில் பலரது கவனத்தையும் பெற்று வருகிறது.
சென்னை பள்ளிக்கரணையைச் சேர்ந்தவர் மகேந்திரன் (47). ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் அருகே உள்ள சாமிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சித்திரை செல்வி (43).

சிங்கப்பூர் கணவர்
கடந்த 2013-ம் ஆண்டு இவர்களுக்கு திருமணம் நடந்துள்ளது. திருமணத்துக்குப் பிறகு இருவரும் பள்ளிக்கரணையில் வசித்து வந்துள்ளனர். மகேந்திரன் சிங்கப்பூரில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் மேனேஜராக வேலை பார்த்து வருகிறார்.
கடந்த 2025 ம் ஆண்டு முதல், சித்திரை செல்வி தமிழக வெற்றிக் கழகத்தின், சென்னை புறநகர் மாவட்ட துணைச் செயலாளராகப் பொறுப்பு வகித்து வருகிறாராம்..
தவெக நிர்வாகி
இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த பள்ளிக்கரணை தவெக பகுதி செயலாளர் முகேஷ் என்பவருடன் திருமணத்தை மீறிய உறவில் ஈடுபட்டு இருந்ததும், தான் சிங்கப்பூரில் இருந்து சம்பாதித்து அனுப்பிய பணத்தில், முகேஷுடன் உல்லாசமாக சென்னையில் சுற்றி திரிந்து வந்ததும் மகேந்தரினுக்கு தெரியவந்துள்ளது.. இதனால் கடந்த 2025 ஏப்ரல் மாதம் பள்ளிக்கரணை காவல் நிலையில் மகேந்திரன் புகார் அளித்தார்.
ஆனால், புகாரின் அடிப்படையில் CSR மட்டுமே போலீசார் பதிவு செய்தார்களாம்.. எனவே இந்த விவகாரம் தொடர்பாக மகேந்திரன் நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்துள்ளார்.
பள்ளிக்கரணை வீடு
இப்படிப்பட்ட சூழலில், இன்று காலை சிங்கப்பூரிலிருந்து சென்னை திரும்பியிருக்கிறார் மகேந்திரன்.. ஏர்போர்ட்டிலிருந்து பள்ளிக்கரணையிலுள்ள தனது வீட்டுக்குச் சென்றுள்ளார்.
அப்போது வீட்டுக்குள் மனைவி சித்திரை செல்வியுடன் முகேஷ் இருந்ததாகக் கூறப்படுகிறது. மகேந்திரனைப் பார்த்ததுமே 2 பேருமே அதிர்ச்சியடைந்தனர்.. உடனே இருவரும் வீட்டின் கதவை உள்பக்கமாகப் பூட்டிக்கொண்டார்களாம்..
இதனால் ஆத்திரமடைந்த மகேந்திரன், வீட்டின் வெளிப்பக்கக் கதவைப் பூட்டிவிட்டு அவசர உதவி எண் 100-க்கு அழைத்து போலீசாருக்குத் தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், முகேஷை அழைத்து சென்று, ஸ்டேஷனில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சொத்துக்களை மீட்டு கொடுங்க
இந்த சம்பவத்துக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய மகேந்திரன், "நான் சிங்கப்பூரில் வேலை பார்த்து வருகிறேன். நேற்று இரவு சிங்கப்பூரில் இருந்து கிளம்பி, இன்று காலை ஊருக்கு வந்தேன். ஏர்போர்ட்டில் இருந்து நேராக வீட்டுக்குச் சென்றபோது, என் மனைவியும் தவெக கட்சியின் 190-வது வார்டு செயலாளர் மு. முகேஷும் வீட்டுக்குள் ஒன்றாக கூடி கும்மாளமிட்டு கொண்டிருந்தார்கள்.
இருவரையும் நேரில் பார்த்ததும் வீட்டைப் பூட்டிவிட்டு போலீசுக்கு போன் செய்து வரவழைத்தேன். போலீசார் வந்த பிறகு, எங்களை வீட்டுக்குள் அனுமதிக்கவில்லை. வீடியோ எடுக்கவும் விடவில்லை. எங்களை அங்கிருந்து வெளியேற்றிவிட்டு, இருவரையும் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றனர். அவர்கள் மீது புகார் கொடுக்க முயன்றும் போலீசார் புகாரை ஏற்கவில்லை.
புகாரை ஏற்கவில்லை
ஏற்கெனவே கடந்த ஏப்ரல் மாதம், என் மனைவியும் முகேஷும் சேர்ந்து என்னைத் தாக்கி, கொலை செய்ய முயன்றதாகப் புகார் கொடுத்திருக்கிறேன். அப்போது நடந்த சம்பவத்துக்கான வீடியோ ஆதாரமும் போலீசாரிடம் இருக்கிறது. ஆனால், இதுவரை எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யவில்லை. சிஎஸ்ஆர் ரசீது மட்டுமே கொடுத்திருக்கிறார்கள்.
என் மனைவி திமுகவில் சென்னை புறநகர் மாவட்ட துணைச் செயலாளர் பொறுப்பில் இருக்கிறார். முகேஷ் 190-வது வார்டு செயலாளராக இருக்கிறார். ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்கள் என்பதால்தான் போலீசார் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கத் தயங்குகிறார்கள்..
போலீஸ் புகார், கோர்ட் மனு
என் மனைவிக்கும் முகேஷுக்கும் தொடர்பு இருப்பதாக 2025-ம் ஆண்டிலேயே எனக்குத் தெரியவந்தது. இதுதொடர்பாக சித்லபாக்கம் நீதிமன்றத்திலும், மகளிர் நீதிமன்றத்திலும் வழக்குத் தொடர்ந்திருக்கிறேன். சித்லபாக்கம் மகளிர் காவல் நிலையம், பள்ளிக்கரணை காவல் நிலையம், டிசி அலுவலகம் எனப் பல இடங்களில் புகார் கொடுத்திருக்கிறேன். அதற்கான சிஎஸ்ஆர் ரசீதுகள் மற்றும் ஆவணங்கள் என்னிடம் இருக்கின்றன. முகேஷிடம் என் மனைவி நகைகளை அடகு வைத்தது தொடர்பான ரசீதுகள் உள்ளிட்ட ஆதாரங்களையும் போலீசாரிடம் கொடுத்திருக்கிறேன். ஆனாலும் நடவடிக்கை எடுக்கவில்லை.
250 பவுன் நகைகள்
சிங்கப்பூரில் சம்பாதித்த பணத்தில் வாங்கிய 250 பவுன் நகைகளை என்னிடம் இருந்து ஏமாற்றிப் பெற்றுக்கொண்டதாகக் குற்றம் சாட்டுகிறேன். என் மனைவி பெயரில் தொழில் தொடங்கிப் பணம் கொடுத்தேன். அவருக்கு இடம் வாங்கிக் கொடுத்தேன். அந்தச் சொத்துகளையும் அபகரித்துக்கொண்டு, எனக்குக் கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறுகிறேன். இதனால்தான் கடந்த மே மாதம் சென்னையை விட்டுச் சிங்கப்பூருக்குச் சென்றேன்.
என் பெயரில் இருக்கும் வீட்டை நான்தான் கடன் வாங்கி, சிங்கப்பூரில் சம்பாதித்த பணத்தில் வாங்கினேன். ஆனால், இப்போது அந்த வீட்டுக்குள் என்னையே அனுமதிக்காமல் தடுக்கிறார்கள். இன்று காலை வீட்டுக்குச் சென்றபோதும் என்னை உள்ளே விடவில்லை. நடுரோட்டில் நிற்கும் நிலை ஏற்பட்டது.
மனைவியிடம் சொத்துக்கள்
பள்ளிக்கரணையில் உள்ள ஸ்ரீ சாய்ராம் பெண்கள் விடுதி, கோவில்பாக்கத்தில் உள்ள கிட்ஸ் மீ யூனிசெக்ஸ் சலூன், ஸ்ரீ ராம் ஆண்கள் விடுதி ஆகியவற்றை என் பணத்தில் தொடங்கிக் கொடுத்தேன். கோவில்பாக்கத்தில் ஒரு இடத்தையும் வாங்கிக் கொடுத்திருக்கிறேன். சுமார் ரூ.45 லட்சம் மதிப்புள்ள இடம், விற்கப்படாமல் இருக்கும் ஆறு பிளாட்டுகள் என எனக்குச் சொந்தமான சொத்துகளும் இருக்கின்றன. இவை தொடர்பான ஆவணங்களும் என்னிடம் உள்ளன.
நான் சிங்கப்பூரில் மாதம் ரூ.3 லட்சம் சம்பளம் வாங்குகிறேன். அந்தப் பணத்தில் குடும்பத்துக்காகச் செய்தவற்றை இழந்துவிட்டு, இப்போது எனக்கே பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டிருக்கிறது.
அப்பீல் செய்ய போகிறேன்
என் மனைவி எனக்கு எதிராக விவாகரத்து வழக்குத் தொடர்ந்திருக்கிறார். அந்த வழக்கில் ஆஜராகத்தான் இப்போது சென்னை வந்திருக்கிறேன். நாங்கள் பிரிவதில் எனக்குப் பிரச்சினை இல்லை. ஆனால், என் சொத்துகளையும் நகைகளையும் திரும்பப் பெற்றுத் தர வேண்டும். முகேஷ் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதொடர்பாக நீதிமன்றத்திலும் மேல்முறையீடு செய்யப் போகிறேன்.
ஏற்கெனவே கொடுத்த புகார்களுக்கே நடவடிக்கை எடுக்காததால், இந்தப் பிரச்சினையை ஊடகங்கள் வெளியில் கொண்டு வந்து, எனக்கு நீதி கிடைக்க உதவ வேண்டும் என்பதுதான் என் கோரிக்கை."



Click it and Unblock the Notifications
