1.25 லட்சம் புத்தகங்களுடன் கோவையில் பெரியார் அறிவுலகம்! இன்று முதல்வர் விஜய் திறந்து வைக்கிறார்
கோவை: கோவையில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ள பெரியார் அறிவுலகம் நூலகத்தை முதல்வர் விஜய் இன்று திறந்து வைக்கிறார். வழக்கமான வாசிப்பு புத்தகங்களை தாண்டி டிஜிட்டல் நூல்கள், கணினி வசதிகள் உள்ளிட்ட வசதிகளும் இந்த பெரியார் அறிவுலகத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இது தொடர்பாக நாம் விரிவாக பார்க்கலாம்!
கோவையின் மைய பகுதியான காந்திபுரம் பேருந்து நிலையம் அருகே, சிறை துறைக்கு சொந்தமான 6.98 ஏக்கர் நிலத்தில் பிரம்மாண்டமாக பெரியார் அறிவுலகம் நூலகம் உருவாக்கப்பட்டுள்ளது. கடந்த திமுக ஆட்சியில் இதற்கான திட்டம் போடப்பட்டு, கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டன.

பெரியார் அறிவுலகம்
இப்போது அனைத்து பணிகளும் நிறைவடைந்துள்ள நிலையில், இன்று இந்த பெரியார் அறிவுலகம் திறக்கப்படுகிறது. இதை முதல்வர் விஜய் இன்று திறந்து வைக்கிறார். இதற்காக அவர் விமானம் மூலம் கோவை செல்கிறார்.
வசதிகள்
புத்தக வடிவிலேயே வடிவமைக்கப்பட்டுள்ள இந்த நூலகம், நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. நூலகங்களுக்கு முன்மாதிரியாக திகழும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த பெரியார் அறிவுலகத்தின் நுழைவு பகுதியில் பெரியார் சிலை நிறுவப்பட்டுள்ளது. இங்கு வழக்கமான புத்தக வாசிப்புக்கு மட்டுமின்றி, டிஜிட்டல் நூல்கள், கணினி வசதிகள், அறிவியல் மையம், விண்வெளி கோளரங்கம் எனப் பல்வேறு வசதிகளும் இடம்பெற்றுள்ளன.
மொத்தம் 7 தளங்களை கொண்ட இந்த நூலகத்தில் ஒவ்வொரு தளத்திலும் வெவ்வேறு பிரிவுகள் அமைக்கப்பட்டுள்ளன. தரைத்தளத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான நூலகம் மற்றும் பிரெய்லி புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன. ஒரே நேரத்தில் 300 முதல் 400 பேர் வரை அமர்ந்து படிக்கும் வசதியும் உள்ளது. முதல் தளத்தில் வரவேற்பறை மற்றும் அறிவியல் மையம் அமைந்துள்ள நிலையில், இரண்டாவது தளத்தில் குழந்தைகளுக்கான நூலகம் மற்றும் சுயமாக அமர்ந்து படிப்பதற்கான வாசிப்பு பிரிவு உள்ளன.
போட்டி தேர்வுகள்
மூன்றாவது தளத்தில் போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் இளைஞர்களுக்கான புத்தகங்கள் இடம் பெறுகின்றன. நான்காவது தளத்தில் வரலாற்று நூல்களுக்கான பிரிவு உள்ள நிலையில், தமிழ் நூல்கள் மற்றும் பருவ இதழ்களுக்கான பிரிவுகள் இங்கு செயல்பட உள்ளன. ஐந்தாவது மற்றும் ஆறாவது தளங்களில் ஆங்கில நூல்கள் உள்ளன. மேலும், புதிய தொழில் தொடங்க விரும்புவோருக்கான புத்தாக்க நிறுவன மையமும் உள்ளன. ஏழாவது தளத்தில் அறிவியல் மையம், டிஜிட்டல் நூலகம் மற்றும் விண்வெளி கோளரங்கம் ஆகியவை உள்ளன.
இன்று திறப்பு
பெரியார் அறிவுலகத்தில் மொத்தம் 1.25 லட்சம் புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன. நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய டிஜிட்டல் நூலகம், மின் நூல்கள் மற்றும் கணினி வசதிகளும் அமைக்கப்பட்டுள்ளன. ஏற்கெனவே கோவையில் செம்மொழிப் பூங்கா இதே இடத்தில் தான் அமைந்துள்ள நிலையில், அதற்கு அருகே தான் பெரியார் அறிவுலகம் அமைக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications
