திருச்சி மணப்பாறை அரிசி ஆலை.. ரூ.3 கோடி சொகுசு பங்களா, மில்.. ரேஷன் அரிசியில் ஜோடி சிக்கியது எப்படி?
திருச்சி: திருச்சி மாவட்டத்தில், தமிழக அரசு தந்த ரேஷன் அரிசியை ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களே கையாடல் செய்துள்ளனர்.. கள்ளச்சந்தையில் விற்பனை செய்ததாக அரிசி ஆலை உரிமையாளர் உள்ளிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ரேஷன் அரிசிக்காக 3,710 டன் நெல்லை என்ன செய்தார்கள்? ஒரே குடும்பம் எப்படி இந்த முறைகேட்டில் ஈடுபட்டது? இங்கே சுருக்கமாக பார்ப்போம்.
திருச்சி மாவட்டம் மணப்பாறை பகுதியில் ஸ்ரீ குமரன் மாடர்ன் ரைஸ் மில் என்ற அரிசி ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையை சண்முகம் (59) என்பவர் நடத்தி வந்தார். மருது செட்டியாரின் மகனான இவர், கடந்த 27.10.2022 முதல் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் அங்கீகரிக்கப்பட்ட அரிசி அரைக்கும் முகவராக இருந்து வந்தார்.

அரசு நெல்லை வாங்கி அரிசியாக்கும் பணி
அதன்படி, அரசு இந்த ஆலைக்கு நெல் வழங்கும். அதை அரிசியாக மாற்றி மீண்டும் அரசிடம் ஒப்படைக்க வேண்டும். இந்த அரிசிதான் ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படும்.
இந்த முறையில் 2025ம் ஆண்டு மட்டும் சுமார் 3,700 டன் நெல் வழங்கப்பட்டுள்ளது. நெல் கிடைத்த 15 நாட்களுக்குள் அதற்குரிய அரிசியை நுகர்பொருள் வாணிபக் கழகத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்பது ஒப்பந்த விதியாகும்.. அதன்படி, அரசு தந்த நெல்லுக்கு உரிய அரிசி திரும்ப ஒப்படைக்கப்படுகிறதா என்று அதிகாரிகள் ஆய்வு செய்தார்கள்.. கடந்த செப்டம்பர் 9 மற்றும் அக்டோபர் 10 ஆகிய தேதிகளில் இந்த ஆய்வு நடைபெற்றது.
ஷாக்கில் அதிகாரிகள்
அப்போது அரசு வழங்கிய நெல்லுக்கு இணையான அரிசி ஒப்படைக்கப்படவில்லை என்பது தெரியவந்தது. அதுமட்டுமல்ல, ஆலையிலும் அந்த அரிசி ஸ்டாக் இல்லையாம்.. இதனால் அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் உடனடியாக விசாரணையைத் தொடங்கினர்.
அதில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் 2025-ம் ஆண்டு இந்த அரிசி ஆலைக்கு ரூ.22.20 கோடி மதிப்புள்ள 3,700 டன் நெல்லை வழங்கியது தெரியவந்தது. ரேஷன் கடைகளில் பொதுமக்களுக்கு விநியோகம் செய்வதற்காக அரிசியாக மாற்றித் தரவே இந்த நெல் கொடுக்கப்பட்டது.
ஆனால், அந்த நெல்லை அரைத்து அரிசியாக ஒப்படைக்காமல், சண்முகம், அவரது மனைவி வனிதா (47), மகன் ரெங்கராஜன் (28) ஆகிய 3 பேரும் சேர்ந்து விற்பனை செய்து பணத்தை முறைகேடாகப் பயன்படுத்தியது விசாரணையில் தெரியவந்ததாகக் கூறப்படுகிறது.
கேரளாவுக்கு சேல்ஸ்
உடனடியாக நடத்தப்பட்ட விசாரணையில், ரேஷன் கடைகளில் மக்களுக்கு வழங்க வேண்டிய அரிசியை கள்ளச்சந்தையில் விற்பனை செய்ததும் அம்பலமானது.. குறிப்பாக, கேரள வியாபாரிகளுக்கு அரிசி விற்பனை செய்துள்ளனர்.. இதனால் அரசுக்கு ரூ.22 கோடியே 20 லட்சத்து 24 ஆயிரத்து 916 இழப்பும் ஏற்பட்டுள்ளது, விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஒரு குடும்பமே சேர்ந்து இப்படியொரு மோசடியை செய்திருக்கிறார்கள்.. முறைகேடாக பெற்ற பணத்தில் சுமார் ரூ.3 கோடிக்கு, சொகுசு பங்களாவையும் கட்டியிருக்கிறார்கள்.. இதில் ஹைலைட் என்னவென்றால், ரேஷன் அரிசி விற்ற பணத்தில், புதிய அரிசி ஆலையே கட்டிவிட்டார்களாம். இதுபோக, ஏற்கனவே உள்ள அரிசி ஆலையை நவீனமயமாக்கியும், சில இடங்களில் நிலங்களும் வாங்கிப் போட்டிருக்கிறார்களாம்...
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் கைது
இந்த விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் திருச்சி மண்டல மேலாளர் போலீசில் புகார் அளித்தார். இதனடிப்படையில் மணப்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தின் 316(2), 316(5), 318(4) பிரிவுகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் சட்டத்தின் 7-வது பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதையடுத்து சண்முகம், அவரது மனைவி வனிதா, மகன் ரெங்கராஜன் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்து, தற்போது ஜெயிலில் அடைத்துள்ளனர்.
ரேஷன் கடைகளில் மக்களுக்கு வழங்க வேண்டிய அரிசி முறைகேடாக விற்பனை செய்யப்பட்டதாக எழுந்துள்ள இந்தப் புகார் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன், அரசின் உணவுப் பொருட்கள் மக்களை சென்றடைகிறதா? என்பதையும் உறுதி செய்து கண்காணிக்க வேண்டியிருக்கிறது..!!!


Click it and Unblock the Notifications
