பெறாத மகளுக்காக விஜய் ஆண்டனியின் போராட்டம்! "அப்பா குட்டி” எப்படி இருக்கு? நெகிழ வைக்கும் கிளைமேக்ஸ்
சென்னை: நூறு சாமி படத்திற்கு பிறகு விஜய் ஆண்டனி நடித்திருக்கும் "அப்பா குட்டி" படமும் ஒரு வித்தியாசமான கதைக்களத்துடன் வெளியாகியிருக்கிறது. ஒரு குழந்தையை சொந்த மகளாகவே நினைத்து வளர்க்கும் மனிதன், அந்த குழந்தையின் உயிருக்கு ஆபத்து என்று தெரிந்ததும் என்னென்ன செய்ய துணிகிறான் என்பதுதான் படத்தின் மையம். படம் பார்த்த பிறகு அப்பா என்ற உறவை பற்றியும், குழந்தைக்காக எந்த அளவுக்கு ஒருவர் போராட முடியும் என்பதையும் யோசிக்க வைக்கிறது.
விஜய் ஆண்டனி இசை அமைப்பாளராக இருந்தாலும், நடிகராக ஒவ்வொரு படத்திலும் தனது தனித்துவமான நடிப்பை காட்டி வருகிறார். வித்யாசமான கதைக்களத்தை தேர்வு செய்து நடித்து வரும் நிலையில், இப்போது நடித்திற்க்கும் "அப்பா குட்டி" படமும் அவருக்கு ஒரு கிரீடமாக இருக்கும். இந்த படத்தின் கதை என்று பார்த்தால், ஆரம்பத்தில் கை குழந்தையுடன் விஜய் ஆண்டனி ஊட்டிக்கு வந்து சேர்வது, அங்கே அந்த குழந்தையை வளர்த்து ஆளாக்குவது என கதை கொஞ்சம் அழகான குடும்ப படமாகவே தொடங்குகிறது. மகள் தியா மீது அவர் காட்டும் பாசம் அவளுக்காக எதையும் செய்ய தயாராக இருக்கும்.

அப்பா குட்டி விமர்சனம்
அப்பாவாக விஜய் ஆண்டனி வரும் காட்சிகள் ரசிக்க வைக்கின்றன. இதற்கு முன்பு எத்தனையோ அப்பா மகள் படத்தை பார்த்திருக்கலாம். ஆனால் இதுவும் அந்த வகையில் இன்று கடந்து போக முடியாத வகையில் கொஞ்சம் எமோஷனல், சென்டிமென்ட், சில இடங்களில் விறுவிறுப்பு என எல்லா மசாலாகளையும் தூவி விட்டிருக்கிறார்கள். ஸ்கூல் டீச்சராக வரும் ப்ரீத்தி அஸ்ராணிக்கு விஜய் ஆண்டனி மீது காதல் ஏற்படுகிறது. குழந்தை தியா தன்னுடைய சொந்த மகள் இல்லை என்றாலும், அந்த குழந்தை அவரிடம் எப்படி வந்து சேர்ந்தது? அந்த குழந்தைக்கு இருக்கும் உடல் நல பிரச்சனை? அந்த குழந்தையை காப்பாற்ற அவர் சந்திக்கும் சவால்கள் தான் படத்தின் கதை.

ப்ரீத்தி அஸ்ராணி நடிப்பு
அஸ்ராணி வெறுமனே காதலியாக இல்லாமல் கதையின் முக்கியமான கட்டத்தில் முடிவை எடுக்கும் நபராக இருப்பது நல்ல விஷயம். ஆனால் முதல் பாதியில் இருக்கும் பிரச்சனை என்றால், படத்தில் உண்மையான கதைக்குள் செல்வதற்கு கொஞ்சம் நேரம் எடுத்துக் கொள்கிறது. ஆரம்பத்தில் விஜய் ஆண்டனி பற்றிய இண்ட்ரொடக்சன் திரில்லர் பாணியில் சஸ்பென்ஸ் ஆகவே போய்க்கொண்டிருக்கும் சமயத்தில், இன்டெர்வெலுக்கு பிறகு தான் அவருடைய பின்னணி என்ன என்பது பற்றிய தெரிய வருகிறது. ஆனாலும் அந்த ஃபிளாஷ்பேக் கதையில் பெரிதாக தாக்கம் ஏற்படுத்தாமல் போவது படத்தின் குறையாக இருக்கிறது.

இரண்டாவது பாதியில் ஒரு குழந்தையின் வாழ்க்கையை காப்பாற்றுவதற்காக நடக்கும் போராட்டம் கதையை முற்றிலும் வேறு ஒரு இடத்துக்கு கொண்டு போகிறது. குழந்தையின் உண்மையான பெற்றோர் யார்? அந்த குழந்தையை காப்பாற்றுவதற்கு மற்றவர்கள் எப்படிப்பட்ட முடிவுகளை எடுக்க வேண்டியது இருக்கு? என ஒவ்வொன்றாக தெரிய வரும்போது படம் சீரியஸாக மாறுகிறது. இந்த இடத்தில் இயக்குனர் எடுத்திருக்கும் கதைக்களம் வித்தியாசமானது.

கிளைமாக்ஸ் நெகிழ்ச்சி
ஒரு குழந்தையின் உயிருக்கும் முன்னால் குடும்ப கவுரவம், உறவுகளுக்குள் இருக்கும் ஈகோ எல்லாம் எந்த அளவுக்கு முக்கியம் என்ற கேள்வியை படம் எழுப்புகிறது. குறிப்பாக இரண்டாம் பாதியில் வரும் நீதிமன்றக் காட்சிகள் படத்துக்கு வேகத்தை கொடுக்கின்றன. ஒரு குழந்தையின் எதிர்காலத்துக்காக நடக்கும் போராட்டம் என்பதால் அந்த வழக்கில் வரும் ஒவ்வொரு விஷயமும் நம்மை கதையுடன் இணைக்கிறது. கிளைமாக்ஸ் நெருங்கும் போது படம் எந்த முடிவை நோக்கி போகிறது என்ற எதிர்பார்ப்பு அதிகரிக்கிறது. கடைசியில் வரும் உணர்வுபூர்வமான காட்சிகள் எளிதாக ரசிகர்களை கலங்க வைக்கும் வகையில் அமைந்திருக்கிறது.

விஜய் ஆண்டனியின் ஸ்பெஷல்
விஜய் ஆண்டனியை பொருத்தவரை இந்த படத்தில் சண்டை அல்லது அதிரடியை விட அப்பாவாக அவர் காட்டும் அன்பும், தவிப்பும் தான் முக்கியம். பெரிய பெரிய வசனங்கள் சில காட்சிகளில் அமைதியாக அவர் காட்டும் உணர்வுகளே கதைக்கு தேவையான தாக்கத்தை கொடுக்கின்றன. தனது மகளை காப்பாற்ற வேண்டும் என்ற தவிப்பில் இருக்கும் கதாபாத்திரத்தை நம்பும்படி நடித்திருக்கிறார். படத்தில் இசையிலும் விஜய் ஆண்டனி கவனம் செலுத்தி இருக்கிறார் படத்தின் பாடல்களும் கதையோடு பொருந்தும் இடங்களில் ரசிக்க வைக்கின்றன.
மொத்தத்தில் அப்பாவை குட்டி படத்தின் கதை வித்தியாசமானது. முதல் பாதியில் கொஞ்சம் வேகமாக கதையை நகர்த்தி இருக்கலாம். விஜய் ஆண்டனியின் பின்னணி காட்சிகளை இன்னும் ஸ்ட்ராங்காக அமைத்திருக்கலாம். இரண்டாம் பாதியில் வரும் வழக்கு, குழந்தையின் வாழ்க்கையை காப்பாற்றுவதற்கான போராட்டம், கிளைமாக்ஸ் என எமோஷனலான பகுதிகள் நன்றாக வேலை செய்கின்றன. பெரிய திருப்பங்கள் நிறைந்த திரில்லராக இல்லாவிட்டாலும் ஒரு குழந்தைகாக தன்னையே அர்ப்பணிக்கும் மனிதனின் பாசத்தை சொல்லும் படமாக அப்பாக்குட்டி ரசிகர்களுக்கு நெகிழ்ச்சியான அனுபவத்தை கொடுக்கிறது. குடும்பத்துடன் பார்க்கக்கூடிய ஒரு செண்டிமெண்ட் படத்தை தேடுபவர்களுக்கு இந்த படம் நல்ல தேர்வாக இருக்கலாம்.


Click it and Unblock the Notifications
