புதுச்சேரியில் ஆழ்கடல் நீச்சல் பயிற்சி... திமிங்கலம் அருகில் வந்து விளையாடி செல்லும் ஆச்சரியம்
புதுச்சேரி: புதுச்சேரியில் ஆழ்கடல் பகுதியில் நீச்சல் பயிற்சியின் போது, திமிங்கலம் ஒன்று நீச்சல் வீரர்கள் அருகில் வந்து விளையாடி சென்றது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி கடல் பகுதியில் தனியார் நிறுவனம் சார்பில் ஆழ்கடல் நீச்சல் பயிற்சி அளிக்கப்படுகிறது. தினமும் காலை நேரத்தில் மாணவர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளை ஆழ் கடலுக்கு அழைத்து சென்று பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

அவ்வாறு பயிற்சியில் ஈடுபட்டிருக்கும்போது திமிங்கலம் ஒன்று அவர்கள் அருகில் வந்து விளையாடிச் சென்றுள்ளது. இதனை அங்கிருந்தவர்கள் வீடியோ பதிவு செய்துள்ளனர். இதுகுறித்து நீச்சல் பயிற்சியாளர்கள் கூறுகையில், இந்த வகை திமிங்கலங்கள் மனிதர்களிடம் மிகவும் நெருங்கி பழகும் தன்மை கொண்டவை. அவற்றின் அருகில் சென்றால் கூட யாருக்கும் எந்தவித தீங்கும் செய்யாது.

இந்த திமிங்கிலம் படகின் அருகிலேயே மேல் பகுதியில் வந்து சென்றது எங்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இந்த மீன்களின் குணநலன்களைப் பற்றி அறிந்திருந்ததால் நாங்கள் அதன் அருகிலேயே சென்று வீடியோ மற்றும் புகைப்படங்கள் எடுத்தோம். 5 நிமிடங்கள் வரை எங்களுடன் சுற்றிவந்த திமிங்கல சுறா பின்னர் மீண்டும் ஆழ்கடலுக்கு சென்றது என்றனர்.

வெளிமாநிலங்கள் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் புதுச்சேரி மாநிலத்திற்கு வந்து செல்கின்றனர். சின்ன 'கோவா' வாக பார்க்கப்படும் புதுச்சேரியில் நீச்சல் பயிற்சியில் அதிகமானோர் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதற்காக, மாநில அரசும், தனியார் நிறுவனங்களும் பல்வேறு ஏற்பாடுகளை செய்துள்ளனர். இதனால், சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை ஆண்டுக்கு, ஆண்டு அதிகரித்து வருகிறது.













Click it and Unblock the Notifications