கொரோனா அச்சம்.. ரத்த தானம் பெறுவதில் சிக்கல்.. அலைக்கழிப்படும் தன்னார்வலர்கள்..!
புதுச்சேரி: கொரோனா அச்சுறுத்தல் காரணமாக புதுச்சேரி அரசு மருத்துவமனையில் ரத்ததானம் செய்ய அலைக்கழிக்கப்படுவதால், உரிய நேரத்தில் ரத்த தானம் செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக தன்னார்வலர்கள் மத்தியல் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
புதுச்சேரி இந்திராகாந்தி அரசு பொது மருத்துவமனையில் அரைநாள் மட்டுமே இயங்கி வரும் ரத்த வங்கியில் கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக யார் ரத்ததானம் செய்யலாம் என்பதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக தன்னார்வலர்கள் தொடர்ந்து அலைக்கழிக்கப்படுவதால் பயனாளிகளுக்கு தேவையான ரத்தத்தை உரிய நேரத்தில் தானம் செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக ரத்ததானம் செய்யும் தன்னார்வலர் குற்றம் சாட்டியுள்ளனர்.

இது குறித்து உயிர்த்துளி ரத்ததான தன்னார்வலர் அமைப்பின் நிறுவன தலைவர் பிரபு கூறுகையில், புதுச்சேரி ராஜீவ்காந்தி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனை 700 படுக்கைகளுடன் 2011-ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது.
இம்மருத்துவமனையில் ரத்த வங்கி இல்லாததால் கர்ப்பிணிகளுக்கு தேவையான ரத்ததானம் செய்ய வருவோர் கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் முழு நேரமும் செயல்பட்டு வந்த ரத்தவங்கிக்கு சென்று கர்ப்பிணியின் பெயரை குறிப்பிட்டு ரத்ததானம் செய்த பின்னர் ஒப்புகை சீட்டினை பெற்றுக்கொண்டு மீண்டும் அரசு மகப்பேறு மருத்துவமனையில் அதனை காண்பித்து பயனாளிகள் சிகிச்சையை தொடரும் நடைமுறை இருந்து வந்தது.

தற்போது கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை கொரோனா வைரஸ் சிகிச்சைக்கான சிறப்பு மருத்துவமனையாக மாற்றியதால், மேற்கண்ட நடைமுறையில் மாற்றம் ஏற்பட்டு தன்னார்வலர்கள் ரத்ததானம் செய்வது நிறுத்தப்பட்டுள்ளது. இதற்கு மாற்றாக புதுச்சேரி இந்திராகாந்தி அரசு பொது மருத்துவமனையில் இயங்கி வரும் ரத்த வங்கியில் கர்ப்பிணியின் பெயரை குறிப்பிட்டு இரத்ததானம் செய்து அதன் ஒப்புகை சீட்டை அரசு மகப்பேறு மருத்துவமனையில் காண்பித்து பயனாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அரைநாள் மட்டுமே இயங்கி வரும் புதுச்சேரி இந்திராகாந்தி அரசு பொது மருத்துவமனை ரத்த வங்கியில் கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக யார் ரத்ததானம் செய்யலாம் என்பதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக தன்னார்வலர்கள் தொடர்ந்து அலைக்கழிக்கப்படுவதால் பயனாளிகளுக்கு தேவையான ரத்தத்தை புதுச்சேரி இந்திராகாந்தி அரசு பொது மருத்துவமனையில் இயங்கி வரும் இரத்த வங்கியில் உரிய நேரத்தில் தானம் செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே புதுச்சேரி இந்திராகாந்தி அரசு பொது மருத்துவமனையில் இயங்கி வரும் ரத்த வங்கியை முழு நேரமும் இயங்கவும், கொரோனா வைரஸ் தாக்கம் ஏற்பட்டுள்ள பகுதியில் உள்ள தன்னார்வலர்களை தவிர்த்து பிற பகுதியில் உள்ள தன்னார்வலர்களிடம் உரிய பரிசோதனை மேற்கொண்டு ரத்தம் சேகரித்து பயனாளிகளுக்கு தேவையான ரத்தபற்றாக்குறையை சரி செய்ய வேண்டும். மேலும் ரத்ததானம் செய்வதில் உள்ள குழப்பத்தை புதுச்சேரி அரசு தெளிவுபடுத்த வேண்டும் என்றார்.

இது தொடர்பாக புதுச்சேரி சுகாதாரத்துறை அதிகாரிகள் தரப்பில் கேட்டபோது, தற்போது கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மருத்துவமனை வரும் நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. இதனால் ரத்தத்தின் தேவையும் குறைந்துள்ளது. அவசர தேவையான ரத்தம் எப்பொழுதும் கண்டிப்பாக இருப்பில் வைக்கப்பட்டிருக்கும். தற்போதைய சூழ்நிலையில் அதிகளவு ரத்தம் தானம் பெற்று இருப்பு வைத்தால் வீணாக போய்விடும். ஆகவே தேவையான ரத்தம் தானம் பெறப்படுகிறது. இருப்பினும் இதுதொடர்பாக ரத்த வங்கிகளுக்கு அறிவுறுத்தப்படும் என தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications