புதுச்சேரியில் விஜய் ரோடு ஷோவுக்கு அனுமதி மறுப்பு.. டிச.5 இல் பொதுக் கூட்டம் நடத்திக் கொள்ள அனுமதி
புதுச்சேரி: புதுச்சேரியில் த.வெ.க. தலைவர் விஜய் 'ரோடு ஷோ'விற்கு போலீஸ் அனுமதி கிடைப்பதில் சிக்கல் நீடித்து வந்த நிலையில், தற்போது அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 5 ஆம் தேதி பொதுக் கூட்டம் நடத்திக் கொள்ள மட்டும் அனுமதி என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் மக்கள் சந்திப்பு பயணத்தை மேற்கொண்டு வந்தார். கரூரில் மக்கள் சந்திப்பு கூட்டம் நடத்தியபோது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இச்சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதையடுத்து, தவெக தலைவர் விஜய் மக்கள் சந்திப்பு கூட்டத்தை ஒத்திவைத்தார். மக்கள் சந்திப்பின்போது ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக மக்கள் பாதுகாப்பு படை என்ற தொண்டர் படையையும் உருவாக்கினார். இதைத்தொடர்ந்து, விஜய் தனது பிரசாரத்தை தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், டிசம்பர் 4 ஆம் தேதி சேலத்தில் மக்கள் சந்திப்பு நடத்த த.வெ.க. சார்பில் அனுமதி கோரப்பட்டது. ஆனால், அங்கு அனுமதி மறுக்கப்பட்டது.
இதையடுத்து, புதுச்சேரியில் ரோடு ஷோ நடத்த விஜய் திட்டமிட்டார். காலாப்பட்டு முதல் கன்னியகோவில் வரை 'ரோடு ஷோ' நடத்தவும், சோனாம்பாளையத்தில் வாகனத்தில் இருந்தபடியே பேசவும் அனுமதி கேட்டு முதல்வர் ரங்கசாமியிடமும், டி.ஜி.பி. அலுவலகத்திலும் த.வெ.க. நிர்வாகிகள் கடந்த 26 ஆம் தேதி மனு கொடுத்தனர்.
ஆனால், போலீஸார் அனுமதிப்பது குறித்து எந்த பதிலும் அளிக்கவில்லை. இதைத்தொடர்ந்து, டிஜிபியை சந்திப்பதற்காக அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த் கடந்த 29 ஆம் தேதி சென்றார். ஆனால், டி.ஜி.பி. அலுவலகத்தில் இல்லாததால் சந்திக்கவில்லை. இந்நிலையில், மீண்டும் டி.ஜி.பி. அலுவலகத்துக்கு ஆனந்த் சென்ற நிலையில், டிஜிபி இல்லாததால் மீண்டும் திரும்பினார்.
இதற்கிடையே புதுவை போலீஸ் ஐஜி அஜித்குமார் சிங்லாவை அவரது அலுவலகத்தில் த.வெ.க. பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் சந்தித்து, விஜயின் மக்கள் சந்திப்பு அனுமதி தொடர்பாக பேசினார். ஆனால் ரோடு ஷோ நடத்த போலீஸ் தரப்பில் அனுமதி மறுக்கப்பட்டது.
இதையடுத்து புஸ்சி ஆனந்த் முதலமைச்சர் ரங்கசாமியை சட்டசபையில் சந்தித்துப் பேசினார். சுமார் 10 நிமிடங்கள் சந்தித்துப் பேசிய நிலையில், அமைச்சர் லட்சுமி நாராயணனையும் சந்தித்துப் பேசினார்.
இந்நிலையில், தவெக தலைவர் ரோடு ஷோ அனுமதி அளிப்பது குறித்து புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி உயர் அதிகாரிகளோடு இன்று ஆலோசனை மேற்கொண்டார். தற்போது விஜய் ரோடு ஷோவுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் டிசம்பர் 5 ஆம் தேதி பொதுக்கூட்டம் நடத்த மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய வார இறுதி நாட்களில் பொதுமக்கள் கூட்டம் அதிகளவில் இருக்கும். இந்த சமயத்தில் தவெக தலைவர் ரோடு ஷோ நடத்தினால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும். இதனால், பல்வேறு இடையூறுகள் ஏற்படும். இந்நிலையில், இதுகுறித்து காவல் துறை உயர் அதிகாரிகளோடு புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி அவசர ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனையில், புதுச்சேரியில் சாலை வலம் நடத்துவதில் உள்ள பிரச்சனைகள் குறித்து முதலமைச்சரிடம் காவல் துறை அதிகாரிகள் எடுத்துக் கூறினர்
அதேநேரத்தில், பொதுக்கூட்டம் நடத்துவதற்கு எந்த தடையும் இல்லை. போதிய பாதிப்புகள் வழங்க இயலும் என்று தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications