தமிழகம் போல புதுச்சேரியில் சாலை வசதிகள் இல்லை.. விஜய் ரோடு ஷோவிற்கு அனுமதிக்காதது நல்லது - சபாநாயகர்
புதுச்சேரி: புதுச்சேரியில் த.வெ.க. தலைவர் விஜய் 'ரோடு ஷோ'விற்கு போலீஸ் அனுமதி கிடைப்பதில் சிக்கல் நீடித்து வருகிறது. இந்நிலையில், விஜய் ரோடு ஷோவிற்கு காவல் துறை அனுமதி மறுப்பது நல்லது என்றும், தனியாக மைதானம் போன்ற இடத்தில் விஜய் கூட்டம் நடத்திக் கொள்ளலாம் என்றும் சபாநாயகர் செல்வம் பேட்டி அளித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் மக்கள் சந்திப்பு பயணத்தை மேற்கொண்டு வந்தார். கரூரில் மக்கள் சந்திப்பு கூட்டம் நடத்தியபோது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இச்சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதையடுத்து, தவெக தலைவர் விஜய் மக்கள் சந்திப்பு கூட்டத்தை ஒத்திவைத்தார். மக்கள் சந்திப்பின்போது ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக மக்கள் பாதுகாப்பு படை என்ற தொண்டர் படையையும் உருவாக்கினார். இதைத்தொடர்ந்து, விஜய் தனது பிரசாரத்தை தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், டிசம்பர் 4 ஆம் தேதி சேலத்தில் மக்கள் சந்திப்பு நடத்த த.வெ.க. சார்பில் அனுமதி கோரப்பட்டது. ஆனால், அங்கு அனுமதி மறுக்கப்பட்டது.
இதையடுத்து, புதுச்சேரியில் ரோடு ஷோ நடத்த விஜய் திட்டமிட்டார். காலாப்பட்டு முதல் கன்னியகோவில் வரை 'ரோடு ஷோ' நடத்தவும், சோனாம்பாளையத்தில் வாகனத்தில் இருந்தபடியே பேசவும் அனுமதி கேட்டு முதல்வர் ரங்கசாமியிடமும், டி.ஜி.பி. அலுவலகத்திலும் த.வெ.க. நிர்வாகிகள் கடந்த 26 ஆம் தேதி மனு கொடுத்தனர்.
போலீஸ் அனுமதி
ஆனால், போலீஸார் அனுமதிப்பது குறித்து எந்த பதிலும் அளிக்கவில்லை. இதைத்தொடர்ந்து, டிஜிபியை சந்திப்பதற்காக அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த் கடந்த 29 ஆம் தேதி சென்றார். ஆனால், டி.ஜி.பி. அலுவலகத்தில் இல்லாததால் சந்திக்கவில்லை. இந்நிலையில், மீண்டும் டி.ஜி.பி. அலுவலகத்துக்கு ஆனந்த் சென்ற நிலையில், டிஜிபி இல்லாததால் மீண்டும் திரும்பினார்.
புதுச்சேரியில் ஏற்கனவே போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள நிலையில், இங்கு ரோடு ஷோ நடத்துவது மிகவும் சிரமம் என்றும், எனவே, மைதானம் போன்ற பகுதிகளில் விஜய் கூட்டம் நடத்த அனுமதி வழங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ரோடு ஷோ அனுமதி
இந்நிலையில், விஜய் ரோடு ஷோவிற்கு காவல் துறை அனுமதி மறுப்பது நல்லது என்றும், தனியாக மைதானம் போன்ற இடத்தில் விஜய் கூட்டம் நடத்திக் கொள்ளலாம் என்றும் சபாநாயகர் செல்வம் பேட்டி அளித்துள்ளார்.
இதுகுறித்து, புதுச்சேரி சபாநாயகர் செல்வம் செய்தியாளர்களிடம் கூறியதாவது: விஜய் ரோடு ஷோவிற்கு காவல் துறை அனுமதி மறுப்பது சரியான முடிவு என்றே தோன்றுகிறது. கரூரில் மிகப்பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளது. புதுச்சேரியில் தமிழகம் போன்று மிகப்பெரிய சாலை அமைப்புகள் எல்லாம் கிடையாது. அங்கு தேசிய நெடுஞ்சாலை எல்லாம் உள்ளது. ஆனால், இங்கு மிகவும் குறுகிய சாலையே உள்ளது.
மக்கள் நெருக்கம் அதிகம்
தவெகவினர் அனுமதி கேட்ட தொலைவு மக்கள் நடமாட்டம், நெருக்கம் அதிகம் உள்ள பகுதி. எனவே, அதனைத் தவிர்த்து வேறு ஏதாவது ஒரு மிகப்பெரிய இடத்தில் அவர் கூட்டத்தை நடத்தலாம். ரோடு ஷோவிற்கு பதிலாக அவர் கூட்டம் நடத்துவதை வரவேற்கிறோம். அவர் எங்கு வேண்டுமானாலும் கூட்டம் நடத்தலாம். இப்போது அனுமதி கேட்டுள்ள பகுதி மக்கள் நெருக்கம் உள்ள பகுதி.
நீதிமன்றம் கொடுத்துள்ள விதிமுறையின்படி இங்கு ரோடு ஷோ நடத்துவதற்கான வாய்ப்பு குறைவு. அதனால், ரோடு ஷோவை தவிர்க்க வேண்டும் என்பது எனது வேண்டுகோள். முதலமைச்சருக்கும், தவெக தலைவர் விஜய்க்கும் இதுகுறித்து வேண்டுகோள் வைத்துள்ளேன். ரோடு ஷோவுக்கு பதிலாக கூட்டம் நடத்துவதற்கான உத்தரவை புதுச்சேரி அரசு நிச்சயமாக வழங்கும் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications