பரிதாபம்.. சாராயத்துக்கு ஆசைப்பட்டு பைக்கில் ஏறிப் போய்.. கொடூரக் கொலை.. 3 பேர் கைது
புதுச்சேரி: புதுச்சேரி வைத்திக்குப்பம் பகுதியில் உள்ள கழிவுநீர் வாய்க்காலில் கடந்த சில தினங்களுக்கு முன்பு புதுச்சேரி அருகே உள்ள தமிழக பகுதியான குயிலாப்பாளையத்தை சேர்ந்த பரத் (25) என்ற இளைஞர் படுகொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார்.
சம்பவ இடத்திற்கு வந்த முத்தியால்பேட்டை போலீசார் பரத்தின் உடலை கைப்பற்றி, கொலைக்கான காரணம் குறித்தும், கொலையாளிகள் யார் என்பது தொடர்பாகவும் தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில், புதுச்சேரி முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்த ஏழுமலை (வயது 21), சோலைநகரைச் சேர்ந்த அருண்குமார் (19), வைத்திக்குப்பத்தை சேர்ந்த மனோஜ்குமார் (24) ஆகியோர் இந்த கொலையை செய்திருப்பது தெரியவந்தது. இதனையடுத்து தீவிர தேடுதல் வேட்டைக்கு பிறகு கொலையாளிகள் மூன்று பேரையும் கைது செய்து மேல் விசாரணை நடத்தினர்.

கட்டிடம் கட்டும் வேலை செய்து வந்த பரத் கடந்த 19 ஆம் தேதி இரவு கருவடிக்குப்பம் சாராயக்கடையில் சாராயம் குடித்துள்ளார். அப்போது அங்கு சாராயம் குடித்துக்கொண்டிருந்த ஏழுமலை, அருண்குமார், மனோஜ் குமார் ஆகிய மூவரும், பரத்திடம் பணம் இருப்பதாக நினைத்து அதை பறிக்க திட்டமிட்டுள்ளனர். மேலும் அவரிடம் மது வாங்கி தருவதாக கூறி மோட்டார்சைக்கிளில் வைத்திக்குப்பம் பகுதிக்கு அழைத்து சென்றுள்ளனர்.

அங்கு வைத்து பரத்திடம் பணம் உள்ளதா? என்று சோதித்து பார்த்துள்ளனர். ஆனால் பணம் எதுவும் இல்லாததால் ஆத்திரமடைந்த அவர்கள் பரத்தை பாட்டில் மற்றும் கல்லால் தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயம் அடைந்த பரத் அங்கேயே துடிதுடித்து உயிரிழந்தார். பின்னர் இந்த கொலையை மறைப்பதற்காக கொலையாளிகள் மூன்று பேரும் சேர்ந்து பிணத்தை கழிவுநீர் வாய்க்காலில் தூக்கிப்போட்டுவிட்டு சென்றுள்ளது விசாரணையில் தெரியவந்தது.
இதனையடுத்து கைது செய்யப்பட்ட கொலையாளிகள் மூன்று பேரும் புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். சாராயம் வாங்கித் தருவதாக இளைஞர் ஒருவரை அழைத்து சென்று படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications